செய்திகள்

இங்கு பித்ரு பூஜை செய்தால் அளப்பரிய பலன்கள் கிடைக்குமாம்! 

தினமணி

தெய்வ வழிபாட்டில் குறைகள், தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளில் தவறுதல் போன்றவற்றினால் ஏற்படும் துன்பங்களுக்கும் இடர்களுக்கும் தீர்வு அளிக்கும் தலமாகவும், பித்ருதோஷ நிவர்த்தி தலமாகவும் பரிகாரத்தலமாகவும் விளங்குகின்றது திருப்பூந்துருத்தி.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருமடம் அமைத்து திருத்தொண்டுகள் பலவும் புரிந்து திருப்பதிகங்கள் அருளிச் செய்து வழிபட்ட சிறப்பிற்குரிய திருத்தலம் திருப்பூந்துருத்தி. தேவாரத்திருப்பதிகம் பெற்ற காவிரிக்குத் தென்கரையில் இத்தலம் 11 ஆவது தலம். திருவையாற்றைத் தலைமைத் தலமாகக் கொண்டு விளங்கும் சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.

புராண வரலாறுபடி, இந்திரன் சீர்காழியில் இறைவனைப் பூஜிக்க தான் அமைத்த மலர்ப்பூங்காவை வளப்படுத்துவதற்கு விநாயகரை வேண்ட அவரும் காவிரியை சோழநாட்டிற்கு அனுப்பினார். காவிரி பூந்துருத்தியில் கடல்போல் தேங்கி நின்றுவிட்டது. ஐயாறப்பன் அருளால் காவிரி கிழக்கு நோக்கி ஓடி இந்திரன் பூங்காவை வளப்படுத்தியது. காவிரி ஓடிய பிறகு பூப்போல் மென்மையாய் மணல்மேட்டிலிருந்த நிலம் பூந்துருத்தி எனக் கூறப்படலாயிற்று. தலவரலாற்றின்படி, கௌதம முனிவரின் சாபத்தினால் உடம்பெல்லாம் ஆயிரம் கண்களைப்பெற்ற இந்திரன் இத்தலத்தில் மலர்வனம் உண்டாக்கி அம்மலர்களைத் தூவி இறைவனை வழிபட்டு உடல்நலம் உற்றான். மலர்கள் நிறைந்த வனமாக இருந்ததால் பூந்துருத்தி எனவும், எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் புட்பவனநாதர் எனவும் பெயர் பெற்றார்.

காசிப முனிவரின் கடுந்தவத்திற்கு இணங்கி, இங்குள்ள கிணற்றில் கங்கை உட்பட பதின்மூன்று புண்ணிய நதிகளை பொங்கி எழச்செய்து காசி விசாலாட்சி சமேதராக அவருக்கு இறைவன் காட்சி நல்கியது ஓர் ஆடி அமாவாசை தினத்தன்று என்று கூறப்படுகின்றது. இத்தலத்தில் உள்ள ஆதி விநாயகர் சந்நிதி முன்பு காசிதீர்த்தம் என வழங்கப்படும் அக்கூபத்தைக் காணலாம்.

திருஞான சம்பந்தர், அப்பர் பெருமானைக்காண இத்தலத்திற்கு வந்தபோது அப்பர் ஒருவரும் காணாதபடி அவருடைய சிவிகையைத் தாங்கி வந்தார். அவ்விடம் "சம்பந்தர் மேடு' என அழைக்கப்படுகின்றது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், வள்ளலார் அருளிய பாடல்கள் இத்தலத்திற்கு உண்டு. "பொய்யிலியர்' என இத்தல இறைவனை சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார். சைவ சமயத்தில் 9 ஆம் திருமுறை ஆசிரியர்களில் ஒருவரான பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம். கிருஷ்ணலீலாதரங்கிணி இயற்றிய ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகள் தொடர்புடைய ஊர்.

இன்னும் பல சிறப்புகளும், கட்டட கலைகள் நிறைந்ததும், கல்வெட்டுச்சான்றுகளுடன் திகழ்வதும், சிறப்பு வாய்ந்த கோஷ்ட தெய்வங்களுடன் கூடியதுமானதும், சம்பந்தருக்காக விலகிய நந்தியையும், விழாக்கள் நிறைந்ததுமான இத்தலத்தின்கண் பிரதி ஆடி அமாவாசையன்று நடைபெறும் பித்ருபூஜை வழிபாடு சிறப்பானது. பொதுமக்கள் நலன் வேண்டியும், உலக நன்மைக்காகவும், அனைத்து துறைகளில் மேன்மையடையவும் பித்ருக்களை வேண்டி ஆண்டுதோறும் இந்த பூஜை அருள்மிகு சௌந்தர நாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடத்தப்படுகின்றது.

அளப்பரிய பலன்களை அளிக்கவல்ல இந்த பித்ரு பூஜை சிறப்பு வழிபாட்டில் ஆண்டுதோறும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வதே இதற்குச் சான்று. இவ்வாண்டு, ஆகஸ்ட் 11 -ஆம் தேதி சனிக்கிழமை ஆடி அமாவாசை அன்று இத்திருத்தலத்திற்குச் செல்லும் அன்பர்கள் குடமுருட்டி ஆற்றில் நீராடி விட்டு, ஆலயத்தில் உள்ள கங்கை பொங்கிய கிணற்றிலிருந்து நீரை தலையில் தெளித்துக்கொண்டு (கங்காஸ்நான ப்ரோக்ஷணம்) இறைவனை தரிசித்த பிறகு பித்ரு பூஜையில் பங்கேற்பது மிக மிக நல்லது.

இத்தலத்திற்குச் செல்ல தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருச்சியிலிருந்து கல்லணை வழியாக வரலாம்.

தொடர்புக்கு : எ. பத்மநாபன் - 98944 01250.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT