செய்திகள்

பிரியாவிடை பெற்றார் அத்திவரதப்  பெருமாள்!

சி.வ.சு. ஜெகஜோதி

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த  ஜூலை மாதம் 1 -ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை தொடர்ந்து 48 நாள்கள் நடைபெற்று, நிறைவு பெற்றது.

மதுரை சித்திரைத் திருவிழா போன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா,11நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ  திருவிழா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா மகத்திருவிழா என திருவிழாக்களில் பலவகை உண்டு.

ஆனால் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்  திருக்கோயிலில் மட்டும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து 48 நாள்கள் நடைபெறும் அத்திவரதர் பெருவிழா மிகவும் விசேஷமானது. அத்திவரதப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் திருக்கோயில் குளத்தில் எழுந்தருளும் விழா நடைபெறுகிறது.

அத்திமரத்தினால் செய்யப்பட்ட திருமேனி என்பதால் அத்திவரதர் என்று பெயராயிற்று. தற்போது மூலவராகவுள்ள சிலைவடிவ வரதராஜப்பெருமாளுக்கு முன்பு இத்தலத்தில் மூலவராக அருள்பாலித்தவர் ஆதி அத்திவரதர்.

அந்நியர்கள் படையெடுப்பின்போது கோயிலில் இருக்கும் இறைவனின் விக்ரகங்களைச் சேதப்படுத்தி விடாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இறைவனது திருமேனிகளை நீர்நிலைகளில் இட்டும், மண்ணில் புதைத்தும்  வைத்திருந்தனர். அப்படி இத்திருக்கோயில் வளாகத்தில்  உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 

இதன்படி 1937, 1979 ஆகிய ஆண்டுகளில் திருக்குளத்திலிருந்து பெருமாள் வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். அதன்பிறகு 40 ஆண்டுகள் கழித்து  அத்திவரதர் 2019-ஆம் ஆண்டு திருக்குளத்திலிருந்து வெளியில் வந்து 48 நாள்கள் அருள்பாலித்து சனிக்கிழமை (ஆக. 17) மீண்டும் திருக்குளத்திற்கு எழுந்தருளியிருக்கிறார். இனி, அடுத்ததாக வரும் 2059 -ஆம் ஆண்டில்தான் பக்தர்களுக்கு அத்திவரதரின் தரிசனம் கிட்டும்.

2019-ஆம் ஆண்டில் அத்திவரதரின் அருள் காட்சி: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து பெருமாள் கடந்த ஜூன் 28-ஆம் தேதி கோயிலில் உள்ள வஸந்த மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். 

பின்னர் ஜூலை முதல் தேதியிலிருந்து பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும், பல்வேறு வண்ணங்களினாலான பட்டாடைகள், மாலைகள் அணிந்தும் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழா நடந்த 48 நாள்களும் கோயில் பட்டாச்சாரியார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டது. 48 நாள்களுக்குப் பிறகு ஆக.17- ஆம் தேதி இரவு அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளினார்.திருவிழா நடந்த 48 நாள்களும் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. 

தினசரி பல லட்சக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். குறைந்தபட்சமாக 4 மணி நேரமும், அதிக பட்சமாக 16 மணி நேரமும் பொது தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளினார்

அத்திவரதர் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு வஸந்தமண்டபத்திலிருந்து கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திற்கு கோயில் பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள் ஆகிய 100-க்கும் மேற்பட்டோர் பெருமாளை திருக்குளத்தில் எழுந்தருளச் செய்தார்கள். 

பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  திருக்குளத்துக்கு  வந்த பிறகு கோயில் பட்டாச்சாரியார்களால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அத்திவரதர் நடவாவி கிணற்றில்  சயனக்கோலத்தில்  பெருமாளின் சிரசு மேற்குப்பக்கமாகவும், திருவடி கிழக்குப்பக்கமாகவும் இருக்கும் வகையில் வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அத்திவரதர் திருமேனியின் இரு பக்கவாட்டிலும் 16 நாகபாஷாணக் கற்கள் வைக்கப்பட்டு மீண்டும் பூஜைகள் நடத்தப்பட்டதும் விழா நிறைவு பெற்றது.

அத்திவரதரை சந்தித்த உற்சவர் 

திருக்கோயில் வளாகத்தில் உள்ள வஸந்த மண்டபத்தில் தொடர்ந்து 48 நாள்களும் அருள்பாலித்து வந்த அத்திவரதரை அவர் இருக்கும் இடத்துக்கு உற்சவரான வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவித்தாயார் ஆகியோருடன் மங்கள மேளங்களோடும், வாண வேடிக்கைகளோடும் நிறைவு நாளான  சனிக்கிழமை  சந்தித்தார்.

ஒரே நேரத்தில் இருவருக்கும் தனித்தனியாக சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. 20 வகையான நைவேத்தியங்களும் சுவாமிக்கு  படைக்கப்பட்டன. பின்னர் வஸந்த மண்டபத்திலேயே அத்திவரதருடன் சிறிதுநேரம் உற்சவரான வரதராஜப் பெருமாளும் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர் வஸந்த மண்டபத்திலிருந்த அத்திவரதரிடமிருந்து விடைபெற்று மூலவர் சந்நிதிக்கு உற்சவர் வரதராஜசுவாமி புறப்பட்டு சென்றார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில்  ஆதிஅத்திவரதரையும், உற்சவர் வரதராஜ சுவாமியையும் வஸந்த மண்டபத்தில் காணும்  காணக்கிடைக்காத அரிய காட்சி கிடைத்திருப்பதாக கோயில் பட்டாச்சாரியார்கள் பலரும் தெரிவித்தனர்.

அத்திவரதருக்கு மூலிகை தைலக்காப்பு 

அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதருக்கு தொடர்ந்து 48 நாள்களும் மூலிகைக்காப்பு சாத்தப்பட்டது. நிறைவு நாளான சனிக்கிழமையும் அத்திவரதருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட  மூலிகைகளைக் கொண்டு தைலக்காப்பு நடைபெற்றது. 

சந்தனம், சாம்பிராணி, லவங்கம், ஏலக்காய், பச்சைக்கற்பூரம் மற்றும் நாட்டு மூலிகைகள் கலந்த கலவையைக் கொண்டு எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தைலம் தயாரிக்கப்பட்டு அவை 23 பாத்திரங்களில் கொண்டு வரப்பட்டு அத்திவரதருக்கு தைலக்காப்பு நடந்தது.  நிறைவு நாளான சனிக்கிழமை அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாளின் திருமேனி எழுந்தருளச் செய்ய இருப்பதால் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபம், நடவாவி மண்டபம் ஆகியன புதுக்கப்பிட்டதையடுத்து அங்கு வாஸ்து பூஜையும் சனிக்கிழமை காலையில் நடத்தப்பட்டது.

1.06 கோடி பேர்  தரிசனம்

கடந்த 47 நாள்களில் சயனக் கோலத்தில் அத்திவரதரை சுமார் 50 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். நின்ற கோலத்தில் சுமார் 56 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். மொத்தம் 1 கோடியே 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.
இதில் குறைந்த பட்சமாக ஜூலை 4-ஆம் தேதி 45 ஆயிரம் பேரும், அதிக பட்சமாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி 5 லட்சம் பேரும் தரிசனம் செய்துள்ளனர். 
ஜூலை 1-ஆம் தேதி முதல்ஆக. 16 வரை அத்திவரதரை  தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை: 

நாள்         பக்தர்கள்

ஜூலை   மாதம்

1    1. 00 லட்சம் 
2    70 ஆயிரம்
3    75 ஆயிரம்
4    45 ஆயிரம்
5    85 ஆயிரம்
6    1. 16 லட்சம்
7    1. 25 லட்சம்
8    1. 15 லட்சம்
9    1. 20 லட்சம்
10     1. 50 லட்சம்
11    1. 15 லட்சம்
12     1. 30 லட்சம்
13    2. 50 லட்சம் 
14    1. 50 லட்சம்
15    1. 25 லட்சம்
16    1. 20 லட்சம் 
17    1.30 லட்சம் 
18     2.75 லட்சம்
19    1.50 லட்சம்
20     1.70 லட்சம்
21     1.75 லட்சம்
22     1.50 லட்சம்
23    1.25 லட்சம்
24     1.40 லட்சம்
25     1.32 லட்சம்
26     2.30 லட்சம்
27     2.50 லட்சம்
28    3.00 லட்சம்
29     2.25 லட்சம்
30     2.50 லட்சம்
31     1.50 லட்சம்

ஆகஸ்ட் மாதம்

1     1.75 லட்சம்
2     2.00 லட்சம்
3     2.20 லட்சம்
4     3.00 லட்சம்
5     3.20 லட்சம்
6     4.00 லட்சம்
7     4.10 லட்சம்
8     3.50 லட்சம்
9     3.00 லட்சம்
10     3.65 லட்சம்
11     4.50 லட்சம்
12     5.00 லட்சம்
13     4.00 லட்சம்
14     4.50 லட்சம்
15     3.50 லட்சம்
16     3.25 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT