அகோரகாளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பட்டஞ்சேரியில் உள்ள அகோரகாளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
பட்டஞ்சேரியில் உள்ள அகோரகாளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தமேரூரை அடுத்த பட்டஞ்சேரியில் அகோர காளி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. இக்கோயிலை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, கடந்த 2 நாள்களாக கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி, தன, கோபூஜைகள், முதலாம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்த பின் மேளதாளங்களோடு, வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டு, புனித நீர் கொண்டு வரப்பட்டது. பிறகு, கோயில் கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அதையடுத்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த விழாவில் பட்டஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. பின்னர், இரவு வேளையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அகோர காளியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கிராமத்தினரும் செய்திருந்தனர்.