ஏழுமலையானை 71,191 பேர் தரிசனம்
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 71,191 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18,567 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 71,191 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 18,567 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, பக்தர்கள் 2 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 8 மணி நேரம் வரை ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.3.88 கோடி
ஏழுமலையான் உண்டியல் வருமானம் செவ்வாய்க்கிழமை ரூ.3.88 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி பக்தர்கள் உண்டியலில் செவ்வாய்க்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.88 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.18 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.8 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
500 போர்வைகள் நன்கொடை
திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரேமண்ட்ஸ் ஜவுளி நிறுவனம் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 500 கம்பளிப் போர்வைகளை செவ்வாய்க்கிழமை இரவு நன்கொடையாக அளித்தது. போர்வைகளை ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் கௌதம் ஹரி சிங்கானியா, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜுவிடம் வழங்கினார்.
சோதனைச் சாவடியில் ரூ.1.94 லட்சம் வசூல்
அலிபிரி சோதனைச் சாவடியை திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 74,713 பயணிகள் கடந்துள்ளனர். 9,133 வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.1.94 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.10,370 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேணிகுண்டாவில் பிளாஸ்டிக் தடை
திருப்பதியை அடுத்த ரேணிகுண்டாவில் வரும் 26-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் புதன்கிழமை கூறியது:
திருப்பதி நகராட்சியில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதன்பின் திருப்பதி தேவஸ்தானமும் கடந்த நவம்பர் மாதம் முதல் திருமலையில் இத்தடையை விதித்தது.
இந்நிலையில், திருப்பதிக்கு அருகில் உள்ள ரேணிகுண்டா நகரிலும் இத்தடையை வரும் 26ஆம் தேதி முதல் அமல்படுத்த நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மக்களிடம் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது நகராட்சியின் கடமையாகும். எனவே, ரேணிகுண்டாவில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.