செய்திகள்

அத்திகிரி அருளாளனை 17 நாள்களில் 20 லட்சம் பேர் தரிசனம்

தினமணி


காஞ்சிபுரம்: அத்திவரதர் பெருவிழா தொடங்கிய 17-நாள்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்துள்ளனர். 

அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. வரதர் கோயில் உள்பட, சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் கோயில்களிலும் பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இடமாக வரதர் கோயில் களைகட்டியுள்ளது. 17-ஆவது நாளான புதன்கிழமை வழக்கமாக வரும் கிழக்கு, வடக்கு, தெற்கு மாடவீதிகளில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து கிழக்கு கோபுர நுழைவுப்பகுதிக்கு வந்தனர். 

மாவட்ட நிர்வாகம் தெரிவித்தபடி இரவு நேரங்களில் வரிசையில் வந்து அனுமதிக்க முடியாத பக்தர்கள் அதிகாலையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்பு, கிழக்கு கோபுரப் பகுதியில் அமைக்கப்பட்ட பந்தல் அருகே தங்கவைக்கப்பட்டு பின்பு, பக்தர்களோடு பக்தர்களாக காலை 4.45 மணிக்கு கிழக்கு கோபுர பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. 

அடர் மஞ்சள் பட்டாடையில் அத்திவரதர்: நாள்தோறும் பல்வேறு வண்ணங்களில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். புதன்கிழமை அடர் மஞ்சள் நிறப்பட்டாடை அணிவித்து, நைவேத்தியம் செய்யப்பட்டது. பின்பு, மரிக்கொழுந்து, துளசி, மல்லிகை, சம்பங்கி, தாமரை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அத்திவரதருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, பொது, முக்கியஸ்தர்கள் வரிசையில் வந்தோர் அத்திவரதரை கண்குளிர தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

முதியோர்கள் அவதி : இதனால், ஆழ்வார், தேசிகர் சந்நிதிகளின் வழியாகச் சென்ற பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். காவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும் காதில் வாங்காதவாறே சென்றனர். இதனால், முதியோர், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

தன்னார்வலர்களும் அவ்வப்போது குடிநீர் வழங்கி, விசிறியால் பக்தர்களுக்கு விசிறிக் கொண்டு சேவையாற்றினர். எனவே, பக்தர்கள் வரிசையில் வரும் போது அத்திவரதரை காண குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் ஆகும் என்ற  நிலையில்தான் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

வாக்குவாதத்தில் முக்கியஸ்தர்கள் வரிசை: பரிந்துரையின் பேரில் வரும் அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகளின் குடும்பத்துடன் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். இதனால், அனுமதிச்சீட்டு மூலம் தரிசிக்க வருவோர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் முக்கியஸ்தர்கள் வரிசையில் கடும் நெரிசலும், தரிசனம் செய்ய காலதாமதமும் ஆகிறது என அறநிலையத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, காவலர்கள் சீருடையில் தனது குடும்பத்தினரை முக்கியஸ்தர்கள் வரிசையில் அழைத்துச் செல்கின்றனர். பிற காவலர்களே புகார் கூறும் அளவுக்கு முக்கியஸ்தர்கள் வரிசை முறைப்படுத்தவில்லை என சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

தரிசனத்துக்கு 5.30 மணிநேரம்: கிழக்கு கோபுரத்திலிருந்து வஸந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை அதிகபட்சமாக 5.30 மணிநேரத்திலும், குறைந்த பட்சமாக 2 மணிநேரத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

முக்கியஸ்தர்கள்: அத்திவரதரை பழம்பெரும் நடிகைகள் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் உள்ளிட்டோர் முக்கியஸ்தர்கள் வரிசையில் வந்து அத்திவரதரை புதன்கிழமை தரிசனம் செய்தனர்.
17 நாள்களில் 20 லட்சம் பேர்...: கடந்த 17 நாள்களில் அத்திவரதரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர். 

காவலர்களும் பட்டாச்சாரியார்களும்

அத்திவரதரின் சிலையின் முன்பிருந்து அலங்கரிப்பது, தீபாராதனை காண்பிப்பது உள்ளிட்ட பணிகளை பட்டாச்சாரியார்கள் நாள்தோறும் செய்து வருகின்றனர். இதற்காக, நாள்தோறும் தங்களது அடையாள அட்டையின் மூலம் முக்கியஸ்தர்கள் வரிசையில் பட்டாச்சாரியார்கள் சென்று வருகின்றனர். 

இந்நிலையில், வழக்கமாக புதன்கிழமை பட்டாச்சாரியார்கள் செல்ல முயன்றபோது அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டு ஓரிரு பட்டாச்சாரியார்களைத் தவிர, 5-க்கும் மேற்பட்டோர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, அரசு அதிகாரிகள் சமரசம் செய்தனர். அப்போது, கைங்கர்யம் செய்யும் பட்டாச்சாரியார்களை வழக்கம் போல் எவ்வித இடையூறுமின்றி முக்கியஸ்தர்கள் வரிசையில் அனுதிக்கவேண்டும் என முறையிட்டனர். முக்கியஸ்தர்கள் வரிசையில் போலி அனுமதிச் சீட்டு காண்பித்துச் சென்ற 9 பேர் மீது இதுவரை வழக்குப் பதியப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT