முகப்பு
செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். 

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் திருத்தணியில் இன்று ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை முதல் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் முருகப்பெருமானைத் தரிசித்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முடிக் காணிக்கை அளித்தும், மலர் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி எனப் பலவித காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செய்து வருகின்றனர். இன்று மாலை சரவணப் பொய்கையில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. 

பொதுவாக முருகப்பெருமான் தங்கத்தேரில் பவனி வருவார். தற்போது தங்கத் தேர் மற்றும் வெள்ளி தேர் பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி சமேத தெய்வயானையுடன் முருகப்பெருமான் மாடவீதிகளில் வலம் வருவார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு சுவாமியைத் தரிசிப்பார்கள். நேற்று வரை சுமார் 1 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் திருத்தணிக்கு வந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காகத் தற்காலிகமாகப் பேருந்து வசதிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மலை மீது ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.