கோயிலில் தேங்காய் உடைப்பதன் தாத்பரியம் என்ன? தெரியுமா? (விடியோ)
திருமணம், திருவிழாக்கள், பூஜைகள், சுபகாரியங்கள், பரிகாரங்கள், சடங்குகள் என நம் வாழ்வில் தேங்காயின் பங்கு மகத்தானது.
திருமணம், திருவிழாக்கள், பூஜைகள், சுபகாரியங்கள், பரிகாரங்கள், சடங்குகள் என நம் வாழ்வில் தேங்காயின் பங்கு மகத்தானது.
கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்குத் தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம்? இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்குத் தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அவ்வாறு இல்லாமல் அதன் தாத்பரியம் என்ன என்பதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. அதாவது தேங்காயின் தத்துவத்தைப் புரிந்துகொண்டால் கடவுளைத் தெரிந்து கொள்ளலாம் என்பர்.
தேங்காயின் மேலிருக்கும் சிக்கல் மிகுந்த நார் பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாத பிரதிவாதங்களைக் குறிப்பதாகும். உறுதியான சிரட்டை கடவுளை அடைய வேண்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டுவதாகும். மதம் மாச்சரியங்களைக் கடந்துவந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளைக் காட்டும் என்பதே இதன் பொருள்.
தேங்காயை உடைத்து கடவுளுக்குப் படைப்பது... என் வெளிமனது சிரட்டையைப் போல் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மாவோ தேங்காயின் பருப்பு போல வெண்மையானது தூய்மையானது அதை நீ ஏற்றுக் கொள் என்று சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது சிரட்டையைப் போல் என் மனம் கெட்டுப்பட்டுக் கிடக்கிறது. அதைப் பருப்பு போல் தூய்மையாக்கு என்று பிராத்தனை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நான் செய்த பாவங்கள் தேங்காயைப் போல் உறுதியாக இருக்கிறது அதை உன்முன்னாள் உடைத்து வைத்து விட்டேன் அதை ஏற்றுத் தூய்மைப்படுத்து என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்
தேங்காய் மர உச்சியில் உருவாகும் கந்த மூலப் பொருள். இதைக் கடவுள் பிரசாதமாகப் படைக்கும்போது மனிதனுக்குத் தேவையான சத்வ குணம் மேலோங்கும். இதனால் தான் இந்து மத வழிப்பாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.