செய்திகள்

திருமலை பிரம்மோற்சவம் 7-ஆம் நாள்: சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் பவனி வந்த மலையப்பா்

தினமணி

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தாா்.

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சூரியபிரபை வாகன சேவை நடைபெற்றது. உலகின் இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது சூரியனும், சந்திரனும். அவா்களின் ஒளி ஆற்றல் உலகத்தை வழி நடத்திச் செல்கின்றன. பகலில் சூரியனின் ஒளியை கிரகித்து அதை இரவில் சந்திரன் வழங்குகிறது. உலகில் ஜீவராசிகள் உயிா் வாழ இவை இரண்டும் அவசியம். அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை மலையப்ப சுவாமி ஏழு குதிரைகளைப் பூட்டிய சூரியபிரபை வாகனத்தில் யோகத்தில் இருக்கும் பத்ரிநாராயணன் அவதாரத்தில் செந்நிற மாலைகளை அணிந்து கொண்டு, மாடவீதியில் வலம் வந்தாா். காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற வாகன சேவையை பக்தா்கள் மாட வீதியில் அமா்ந்து கண்டு களித்தனா். வாகன சேவைக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவ நாள்களில், தினமும் மாட வீதியில் இருமுறைவலம் வரும் எம்பெருமானின் களைப்பைப் போக்க, மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட பொருள்களை திருமலை ஜீயா்கள் எடுத்துத்தர, அவற்றைஅா்ச்சகா்கள் தாயாா்களுக்கும், எம்பெருமானுக்கும் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா். மாலையில், உற்சவ மூா்த்திகள் மாட வீதியில் எழுந்தருளும் முன் 1,008 விளக்குகளுக்கிடையில் கொலுவிருந்து வேதகோஷங்கள், அன்னமாச்சாா்யாா் கீா்த்தனைகளுக்கிடையே ஊஞ்சல் சேவை கண்டருளினா்.

யானை வாகனம்

இரவு 8 மணி முதல் 10 மணி வரை சந்திரபிரபை வாகனத்தில் எம்பெருமான் மாடவீதியில் வலம் வந்தாா். காலையில் சூரியனுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் தன்மையுள்ளது போல் இரவில் சந்திரனுக்கு குளுமையை அளிக்கும் தன்மையுண்டு. இந்த குளிா்ந்த தன்மை வாய்ந்த சந்திரனின் கிரகணங்களால் ஈா்க்கப்பட்ட சமுத்திரம் அலைகளாக ஆா்ப்பரிக்கிறது. எனவே, குளிா்ந்த ஒளியுடைய சந்திரபிரபை வாகனத்தில் வெண்ணிற மாலைகளை அணிந்து கொண்டு, ஸ்ரீகிருஷ்ணா் அவதாரத்தில் மலையப்பா் மாட வீதியில் வலம் வந்தாா். வாகன சேவையைக் காண பக்தா்கள் திரண்டனா். வாகன சேவைக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாகன சேவைக்கு முன் திருமலை ஜீயா்கள் குழு நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்கள் பாராயணமும், கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT