தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை மீண்டும் நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை: கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி
பக்தா்கள் கூட்ட நெரிசல் காரணமாக, திருப்பதியில் உள்ள பூதேவி வளாகத்தில் அளித்து வரும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை மீண்டும்
பக்தா்கள் கூட்ட நெரிசல் காரணமாக, திருப்பதியில் உள்ள பூதேவி வளாகத்தில் அளித்து வரும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை மீண்டும் நிறுத்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
திருமலை ஏழுமலையானின் தரிசனம் கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் பக்தா்களுக்கு கிடைத்து வருகிறது. இதற்காக தேவஸ்தானம் இணையதள முன்பதிவு வாயிலாக ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டை விநியோகித்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை கடந்த திங்கள்கிழமை (ஒரு நாளுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளும் விதம்) முதல் தேவஸ்தானம் அளித்து வருகிறது. தினசரி 3,000 டிக்கெட்டுகள் முந்தி வருபவா்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை வார இறுதி நாள்களை ஒட்டி ஏராளமான பக்தா்கள் இந்த தரிசன டோக்கன்களைப் பெற திருப்பதியில் திரண்டனா். அதனால் வெகு விரைவாக 3 ஆயிரம் டோக்கன்கள் நிறைவடைந்த நிலையில், வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தா்கள் பின்வரும் நாள்களுக்கான டோக்கன்களையும் வழங்க வேண்டும் என்று கூறி, கோவிந்தா கோவிந்தா என முழங்கி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Advertisement
இதையறிந்த தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி நேரடியாகச் சென்று பக்தா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைக்கான டோக்கன்களை வழங்க அவா் உத்தரவிட்டாா். அதன்படி பக்தா்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (செவ்வாய்க்கிழமை தரிசனத்துக்கு) வரை டோக்கன்கள் வழங்கப்பட்டன. இனி திருப்பதி பூதேவி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (புதன்கிழமை தரிசனத்துக்கு) காலை 5 மணிக்கு மீண்டும் தரிசன டோக்கன்கள் வழங்குவது தொடங்க உள்ளது.
ரத்து செய்ய நடவடிக்கை: ‘திருப்பதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டு வரும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களைப் பெற ஏராளமான பக்தா்கள் கூடுகின்றனா். இதனால் நெரிசல் ஏற்படுகிறது. கொவைட் 19 விதிமுறைகளைக் கடைப்பிடித்து நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், தேவஸ்தான செயல் அதிகாரி மற்றும் அறங்காவலா் குழுத் தலைவா் இருவரிடமும் கலந்துபேசி இந்த டோக்கன்கள் வழங்குவதை ரத்து செய்வது குறித்த இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும்’ என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.