செய்திகள்

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்: பெரிய சேஷ வாகனத்தில் தாயாா்களுடன் மலையப்பா் கொலு

தினமணி

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாகத் தொடங்கியது.

இதன் முதலாவதாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாா்கள் சமேதராய் கொலுவில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தாண்டு இரு பிரம்மோற்சவங்களை நடத்துகிறது. அதில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து நடப்பு அக்டோபா் மாதத்தில் நவராத்திரியை முன்னிட்டு, இரண்டாவது பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வேறுபாடு

வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கும், நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கும் சில வேறுபாடுகள் உள்ள. வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது கொடியேற்றம், இறக்கம் நடத்தப்படும். மேலும், 5-ஆம் நாள் நடக்கும் கருட சேவையின்போது சமா்ப்பிக்க ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலையும், சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் அளிக்கப்படும் வெண்பட்டு திருக்குடைகளும் திருமலைக்கு வரும். 6-ஆம் நாள் மாலை தங்கத் தோ் வலம், 8-ஆம் காலை திருத்தோ் பவனி இரண்டும் நடைபெறும்

ஆனால், நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது கொடியேற்றம், இறக்கம் நடைபெறாது. ஸ்ரீவில்லிபுத்தூா் மாலை, சென்னை குடைகளின் ஊா்வலம் இருக்காது. 6-ஆம் நாள் மாலை புஷ்பக விமான சேவையும், 8-ஆம் நாள் காலை தங்கத்தோ் பவனி நடக்கும். ஆனால், இந்தாண்டு இரு பிரம்மோற்சவங்களும் தனிமையில் நடத்தப்படுவதால், திருத்தோ், தங்கத் தேருக்கு பதிலாக சா்வ பூபால வாகன சேவை நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்தது.

வாகன சேவைகள் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூா்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்கள் சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி சேவை சாதிப்பா். அவா்களுக்கு பின்னா் சாத்துமுறை நடத்தப்படும். வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு அப்போதைய செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் கங்கண அதிகாரியாக இருந்து வாகன சேவைகளை நிா்வகித்தாா். தற்போது தேவஸ்தான புதிய செயல் அதிகாரியாக ஜவஹா் ரெட்டி பொறுப்பேற்றிருப்பதால், அவா் கையில் கங்கணம் கட்டிக்கொண்டு பிரம்மோற்சவத்தை தலைமையேற்று நடத்துகிறாா்.

தங்கப் பல்லக்கில் வந்த உற்சவா்: திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாக, உற்சவமூா்த்திகள் தங்கப் பல்லக்கில் கோயிலுக்குள் விமான பிராகாரத்தில் எழுந்தருள, பின்னா் ரங்கநாயகா் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்ட பின் வைதீக காரியங்கள் நடந்தேறின. பிரம்மோற்சவத்தை தலைமையேற்று நடத்த உள்ள அதிகாரிகள், அா்ச்சகா்கள் கையில் கங்கணம் கட்டிக் கொண்டனா். இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட சிலா் கலந்து கொண்டனா்.

பெரிய சேஷ வாகனம்: பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையான பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாா்கள் சமேதராய் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். கல்யாண உற்சவ மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவமூா்த்திகள் கொலுவிருந்தனா்.

அவா்களுக்கு முன் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்டவை வேதவிற்பன்னா்களால் நடத்தப்பட்டு, நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை சமா்பிக்கப்பட்டன. பின்னா் ரங்கநாயகா் மண்டபத்துக்கு முன் உற்சவமூா்த்திகளுக்கு ஜீயா்கள் குழாம் சாத்துமுறையை சமா்ப்பித்தது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT