வைத்தீஸ்வரன் கோயிலில் குடமுழுக்கு விழா
சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
சீர்காழி: சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில். இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்-க்கு அதிபதியான அங்காரகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியநாதசுவாமி, தையல் நாயகி அம்மனை வழிபட்டு, பிரசாதமாக வழங்கப்படும் திருசாந்து உருண்டையை 1 மண்டலம் சாப்பிட்டால், தீராத வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.
பிரசித்திபெற்ற இக்கோயிலில் கடந்த 1998-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
இக்கோயில் குடமுழுக்கு விழாவுக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கின.
கோயில் ராஜகோபுரம், உள்பட 4 வீதி கோபுரங்கள், மூலவர் விமானங்கள், சுவாமி, அம்பாள், முத்தையா சுவாமி மேல்தளம் சீரமைப்பு, நீராழி மண்டபம், கிருத்திகை மண்டபம், கொடிமர பகுதி, பிராகாரங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
புதன்கிழமை காலை ஆதிவைத்தியநாதர், வலஞ்சுழி விநாயகர், வீரபத்திரர், தெட்சிணாமூர்த்தி, துர்கை அம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 8-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை காட்டப்பட்டு, புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க தலைமை குருக்கள் ஐயப்பன் சிவாச்சாரியர் மேற்பார்வையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கற்பக விநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சோமாஸ்கந்தர் ஆகிய விமானகலசங்கள் மேல் புனிதநீர் வார்க்கப்பட்டு, குடமுழுக்கு விழா தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னியிலையில் நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமி - அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திருநெல்வேலி கட்டளை மடம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள். சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி விக்ராந்த்ராஜா, உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி வெ. பார்கவி, இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் அசோக்குமார், மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் மகாலெட்சுமி, திருப்பணியாளர் ஜெயராமைய்யர்ஆகியோர் பங்கேற்றனர்.
பக்தர்கள் பங்கேற்பில்லை:
அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி விழா நடைபெற்றது. எனினும், பக்தர்கள் தங்கள் வீட்டு மாடிகளிலிருந்து குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தனர். மேலும், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பொதுமக்கள் கூடவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வசதியாக தொலைக்காட்சி, யூ டியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கரோனா விலகும்: பக்தர்கள் நம்பிக்கை
தீராத வியாதிகளை தீர்க்கும் தலமாக விளங்கும் இக்கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளதால், கரோனா தீநுண்மி 2-ஆம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இந்நோய்த் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவார்கள் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.