ஜனவரி மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை)
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சந்திரன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-01-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
நயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பையும் பெறும் மேஷ ராசியினரே இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம்.
பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.
அசுபதி:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.
பரணி:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.
கார்த்திகை:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.
பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தேதி: 17, 18, 19
அதிர்ஷ்ட தேதி: 10, 11, 12
*******
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் சந்திரன், ராகு என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று ராசியில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-01-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எண்ணியதை செயல்படுத்த எதையும் செய்ய தயங்காத ரிஷப ராசியினரே இந்த மாதம் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.
தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.
குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.
பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞ்சர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.
அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.
மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
கார்த்திகை:
இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
ரோகினி:
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
சந்திராஷ்டம தேதி: 20, 21
அதிர்ஷ்ட தேதி: 13, 14
*******
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று களத்திர ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-01-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் மிதுன ராசியினரே நீங்கள் தந்திரசாலி. பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தைரியாதிபதி சூரியனும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.
பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.
கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.
திருவாதிரை:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். ராகு சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், ராசிநாதன் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.
புனர்பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
பரிகாரம்: புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தேதி: 22, 23
அதிர்ஷ்ட தேதி: 15, 16
*******
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன், ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று லாப ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-01-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உடைய கடக ராசியினரே இந்த மாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும்.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.
அரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.
புனர்பூசம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.
பூசம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
ஆயில்யம்:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.
பரிகாரம்: பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தேதி: 24, 25
அதிர்ஷ்ட தேதி: 17, 18, 19
*******
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று தொழில் ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-01-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசியில் குரு இப்பதன் மூலம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும்.
பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
மகம்:
இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பூரம்:
இந்த மாதம் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்திரம்:
இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
சந்திராஷ்டம தேதி: 26, 27
அதிர்ஷ்ட தேதி: 20, 21
*******
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று சுக ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-01-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைய கன்னி ராசியினரே இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.
பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.
அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுக்கிரன் தனது சஞ்சாரத்தால் வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
உத்திரம்:
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவலகள் வந்து சேரும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.
சித்திரை:
இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.
பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம் அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தேதி: 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தேதி: 22, 23
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.