2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது குறித்து...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் இதில் குடிமக்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது எனவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 26) தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதாமாதம் நாட்டு மக்களுடன் கடைசி வாரத்தில் உரையாற்றி வருகிறார். அந்தவகையில், 133 வது மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
''நாடு முழுவதும் மிக முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு.
Advertisement
Advertisement
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நாம் மேற்கொள்ளவுள்ளோம். இதில் பங்கேற்பதற்கு முன்பு ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இம்முறை நாம் வித்தியாசமான அனுபவத்தைப் பெறவுள்ளோம்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. டிஜிட்டல் முறையில் தரவுகள் அனைத்தும் நேரடியாக பதிவு செய்யப்படவுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இம்முறை நீங்கள் பங்கெடுப்பது மிகவும் எளிமையாகிவிடும். நீங்களே உங்களின் விவரங்களை உள்ளீடு செய்து அரசுக்கு உதவலாம்.
அதிகாரிகள் உங்கள் இல்லங்களுக்கு வருவதற்கு 15 நாள்களுக்கு முன்பே இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் உங்கள் தரவுகளை நீங்கள் பதிவேற்றலாம்.
நீங்கள் பூர்த்தி செய்து முடித்ததுமே உங்களுக்கு சிறப்பு ஐடி உருவாகிவிடும். உங்கள் செல்போன் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அது அனுப்பப்படும். பின்னர், அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வரும்போது அந்த ஐடி-யை நீங்கள் காட்டினால் போதுமானது. அதில் உங்கள் தரவுகளை சரிபார்த்துக்கொள்வார். எனக் குறிப்பிட்டார்.
இந்த செயல்முறையின் மூலம் சுய கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 மில்லியன் குடும்பங்களுக்கான பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் அரசாங்கத்தின் பொறுப்பு மட்டும் அல்ல. ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் கூட. எங்களுடன் பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டிக்கொள்கிறேன்.
நீங்கள் இதில் பங்கேற்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் இங்கு அளிக்கும் தரவுகள் பத்திரமாக பாதுகாக்கப்படும். மிகவும் வலுவான டிஜிட்டல் பாதுகாப்புடன் தரவுகள் நம்பகத்தன்மைக்குள் வைக்கப்படும். நாம் அனைவரும் இணைந்து 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிப்போம்'' என பிரதமர் மோடி பேசினார்.