லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் எதிர்நோக்குவது வைகாசித் திருவிழாவைத்தான்.சித்திரை மாதம் தொடங்கியவுடன், கோயிலில் பால்கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கும். 2-ஆவது வாரத்தில் காப்புக் கட்டும் விழா நடக்கும். தொடர்ந்து, திருவிழா களைகட்டத் தொடங்கும். நகர மக்கள் கூழ் வார்த்து, பொங்கலிட்டு அம்மனை வழிபடத் தொடங்குவர். சித்திரை மாத இறுதியில் அம்மனுக்குத் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருமண பாக்கியம் வேண்டி இளைஞர்கள், இளம்பெண்களும், பிள்ளைப் பேறு வேண்டி பெண்களும் விழாவில் பங்கேற்று, அம்மன் அருளை எதிர்நோக்குவர்.
தேர்த் திருவிழா: சித்திரை 31-இல் கோயிலில் தேர்த் திருவிழா நடக்கும். அன்று காலை கோயில் அருகேயிருந்து தொடங்கும் தேரோட்டம் கோபாலபுரம், நடுப்பேட்டை, தரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதியுலா வரும். இறுதியில் கோயிலை வந்தடையும்.
சிரசுப் பெருவிழா: முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சிரசுப் பெருவிழா வைகாசி 1-இல் நடக்கிறது. இந்த நாள்தான் ஆன்மிகத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் மகிழ்ச்சியையும், பக்தியையும் மக்களுக்கு அளிக்கிறது. பல லட்சம் பக்தர்கள் ஒன்று திரண்டு, ஒரே நாளில் கெங்கையம்மனை தரிசிக்கின்றனர்.
சிரசுத் திருவிழாவன்று அதிகாலை 4 மணியளவில் தாரை, தப்பட்டை, மேள, தாளங்கள் முழங்க அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்படும். பின்னர் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சிரசு ஊர்வலம் புறப்படுகிறது.
தரணம்பேட்டை என்.ஜி. செட்டித் தெரு, காந்தி ரோடு, ஜவஹர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக அம்மன் சிரசு சுமார் 1 கி.மீ. தொலைவு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து, கோயிலை காலை 9 மணிக்கு வந்தடையும்.
அப்போது 5 மணி நேர ஊர்வலத்தின்போது, தேரோடும் வீதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அப்போது அம்மன் சிரசு மீது பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்கள், பூக்கள், பூமாலைகள் போன்றவற்றை தூவி வரவேற்பது உண்டு. சிரசுவின் மீது பட்டு, சிதறும் பூக்களைப் பொக்கிஷம் போல பக்தர்கள் எடுத்துச் செல்வர்.
ஊர்வலத்தின்போது, அம்மனும் தாய் வீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சியில் வருவார். அப்போது தமிழர்களின் பராம்பரியமிக்க விளையாட்டுகளான புலி வேடம், கம்பு சுற்றுதல், சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் கற்றுத் தேர்ந்தவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அம்மனை உற்சாகமாக அழைத்து வருவர்.
அம்மன் சிரசு கோயிலுக்கு வந்ததும், சிரசு மண்டபத்தில் பொருத்தப்படும். பின்னர் 10 மணிக்கு ஊர் மக்களின் சார்பில் கூழ்வார்த்தல் நடைபெறுகிறது. இதன்பிறகு கெங்கையம்மன் சாந்தம் அடைந்து, சாந்த சொரூபியாக மாறுகிறாள். காலை 10 மணிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பின்னர் இரவு வரை தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பத்தைத் தனதாக்கிக் கொண்டு, பக்தர்களுக்கு நற்பயன்களை அளித்து அருள்பாலிக்கிறார்.
இந்நேரத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது பகுதி மக்களுடன் ஆட்டம், பாட்டமாக வந்து "ஊர் மாலை' அணிவித்து மகிழ்வர்.
இதையடுத்து, மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு தாய் வீட்டுக்கு விடை கொடுத்து, கெங்கையம்மன் புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்வார்.
கௌண்டன்ய மகாநதி, ராஜேந்திர சிங் தெரு, ஆழ்வார் முருகப்ப முதலி தெரு ஆகிய தெருக்களின் வழியாகச் சென்று, சுண்ணாம்புப் பேட்டை சலவைப் படித்துறையில் சிரசு ஊர்வலம் நிறைவு பெறுகிறது. தாய்வீட்டிலிருந்து விடை பெறும் வருத்தத்தில் வாடிய முகத்துடன் அம்மன் சிரசு காணப்படும்.
கண்ணைக் கவரும் வாண வேடிக்கை: அப்போது கௌண்டன்ய மகா நதிக்கரையில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரபல வாண வெடி தயாரிப்பாளர்கள் தங்களது புதிய ரகங்களை இத்திருவிழாவில் அறிமுகப்படுத்துவது உண்டு. ஆற்றங்கரையிலும், வீடுகளின் மாடிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து வாணவேடிக்கையைக் கண்டு ரசிப்பது உண்டு.
புஷ்ப பல்லக்கு விழா: சிரசுப் பெருவிழாவுக்கு மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. திருவிழாவுக்கு 3-வது இரவு புஷ்ப பல்லக்கு விழா நடக்கிறது. குடியாத்தம் புஷ்ப வியாபாரிகள் சங்கம் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து ஒரு புஷ்ப பல்லக்கும், வாணியர் வீதியில் உள்ள காசி விசுவநாதர் கோயில் சார்பில் மற்றொரு பல்லக்கும் வீதியுலா வரும்.
இதைத் தொடர்ந்து, அடுத்த சில நாள்களில் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்வாறாக, வைகாசிப் பெருவிழா 48 நாள்கள் ஒரு மண்டலமாக நடைபெறுகிறது. விழா நாள்களில் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஜொலிப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.