சுதந்திரத்துக்குப் பின்னர் தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடியைத் தயாரித்த குடியாத்தம் மண்ணுக்கு இன்னுமொரு பெருமை கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழா.
ஜாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சிரசுப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
வைகாசி 1-இல் சிரசு திருவிழா நாளன்று, வேலூர் மாவட்ட அளவில் பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று 1996-இல் நகர்மன்றத் தலைவராக இருந்த திலகவதி ராஜேந்திரன் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதையேற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட, அன்றுமுதல் இன்று வரை தொடர்ந்து மாவட்ட அளவில் விடுமுறை அளித்துவருகிறது.
கோயிலுக்கு அருகே சில மீட்டர் தொலைவில் மசூதி, சர்ச் ஆகியன இருக்கும்போதும், திருவிழா சுமுகமான முறையில் நடைபெறுவது சிறப்பு.
திருவிழாவில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் வகையில் உரிய அங்கீகாரமும், பங்களிப்பும் வழங்கப்படுகிறது. திருவிழாவைக் காண தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசும் மக்களும் வருகை தருகின்றனர்.
கரோனா பொதுமுடக்கம்-ஊரடங்கு தளர்வுகளையடுத்து, 2022-ஆம் ஆண்டில் திருவிழாவை மக்கள் அனைவரும் வரவேற்றிருந்த வேலையில் கௌண்டன்ய மகாநதி ஆற்றங்கரையில் திருவிழாக் கடைகள் அமைப்பது தொடர்பாக இணைய வழி டெண்டர், பின்னர் கடைகள் அமைக்கத் தடை என்று பிரச்னைகள் எழுந்தது. இதற்கு நகர மக்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்தனர். இதையடுத்து, வழக்கத்தின்படியே திருவிழாக் கடைகள் அமைக்க அரசு உத்தரவிட்டது.
இதேபோல், 2015-இல் வாண வேடிக்கை நடத்த தடை என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் நகர மக்கள் ஒருசேர குரல் கொடுத்து உரிமையை மீட்டனர். 2000-ஆம் ஆண்டில் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட கடைகள் தீப்பற்றி எரிந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நகர மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேர்ந்து, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் பொருள், பண உதவிகளை அளித்து உதவிகளைப் புரிந்தனர்.
இதையும் படிக்க | கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்..!
1990-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோயில் திருப்பணியின்போது ஏற்பட்ட விபத்தில் கட்டடம் சரிந்தது. ஆனால், அங்கே பக்தர்கள், கட்டடத் தொழிலாளர்கள் பலர் இருந்தும் யாருக்கும் சிறுகாயம்கூட ஏற்படாமல் இருந்தது வியப்புதான். அப்போது, பக்தர்கள் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு, திருப்பணிக்குத் தோள் கொடுத்து உதவினர். எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே திருப்பணி நிறைவு பெற்றதோடு, திருவிழாவும் தங்குத் தடையின்றி நடைபெற்றது.
உதவும் உள்ளங்கள்: திருவிழாக்களில் ஆண்டுதோறும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும், எஸ்.பீடி நிறுவனம், சௌர்ணம் கேஸ் ஏஜென்சீஸ், யுவராஜா பெட்ரோல் பங்க் உள்ளிட்ட நிறுவனங்களும், மனித நேய மக்கள் கட்சி, தமுமுக, மனித நேய ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் தண்ணீர் பந்தல், உணவு வழங்குதல், திருவிழாக்களுக்கு தன்னார்வலர்களாக உதவி என்று தோள் கொடுத்து உதவுகின்றனர்.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்கள், அபிராமி கல்வி நிறுவனங்கள், அத்தி கல்விக் குழுமம் என்று கல்வி நிறுவனங்கள்கூட பக்தர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகின்றன.
வைகாசி வந்தால் சொந்த ஊர்தான்! குடியாத்தத்தில் பிறந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் பணி, தொழில் நிமித்தமாகச் சென்றுள்ளோரும், வெளிநாடுகளில் வசிப்போரும்கூட வைகாசித் திருவிழாவுக்காக குடும்பத்தோடு இங்கு வந்துவிடுவர்.
இதையும் படிக்க | கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: குடியாத்தத்தின் பெருமை.!
சமூக வலைதளங்களில் கெங்கையம்மன்: திருவிழாவை எதிர்நோக்கி பக்தர்கள் ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பதிந்து, பக்தர்கள் உற்சாகமாய் கொண்டாடுகின்றனர். தற்படம் (செல்ஃபி) எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். குழுக்களில் பதிவிடுதல், நண்பர்களுக்கு அனுப்புதல், ஸ்டேட்டஸ் போடுதல் என்று திருவிழாக்களை வரவேற்று ஆர்வம் காட்டுகின்றனர்.
முன்பெல்லாம் பக்தர்களை வரவேற்று துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகளை அமைத்து வந்த பக்தர்கள் இப்போது சமீபகாலவரவான சமூக வலைதளத்தையும் விட்டுவைக்கவில்லை.
இதேபோல், "சிரசுப் பெருவிழா வருகிறது' என்று தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் வசனங்கள், பாடல்கள் அடங்கிய விடியோக்களை இணைத்து சிரசுப் பெருவிழாவை வரவேற்று டிக்டாக், மீம்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர்.
திருவிழாவுக்கு வர முடியாத நிலையில், வெளியூரில் உள்ளவர்கள் உடனுக்குடன் திருவிழா தொடர்புடைய விடியோக்கள், புகைப்படங்களைப் பார்த்து பக்தி பரவசம் அடைகின்றனர்.
வியாபாரிகள் உற்சாகம்: கோபாலபுரம் கங்கையம்மன் கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள திருவிழாக்களால், பல ஆயிரம் வியாபாரிகளுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது.
விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக பூ உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்கள் விற்கப்பட்டாலும், குழந்தைகளுக்குரிய பொம்மைகள், எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்கள், சோப்பு, சீப்பு, பழங்கள், குளிர்பானம் என பலவகைப் பொருள்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகின்றன. இதற்காக, கௌண்டன்ய மகாநதி ஆற்றங்கரையில் தற்காலிக கடைகள் நூற்றுக்கணக்கில் அமைக்கப்படும். உள்ளூர்களில் இயங்கும் கடைகளிலும் வியாபாரம் நன்கு செழிக்கிறது.
பொருள்களை கையில் வைத்தும், சாலையோரங்களிலும், தள்ளுவண்டியிலும் வைத்து விற்பனை செய்த ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பயனடைகின்றனர்.
இந்தக் கடைகள் குடியாத்தம் பகுதியைச் சுற்றி தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஏர்த்தாங்கல், பரதராமி, மேல்பட்டி உள்பட கிராமங்களில் நடைபெறும் கெங்கையம்மன் திருவிழாவுக்காகவும் இடம்பெயர்வதும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.