செய்திகள்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

DIN

பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் பச்சை பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மேலும் விழாவில் மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் என முக்கிய விழாக்கள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், அழகர்கோவிலிலிருந்து மதுரை வந்தடைந்த அருள்மிகு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்வு கோ. புதூர் மூன்றுமாவடியில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப் பல்லக்கில் அழகர்மலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை நோக்கி புறப்பாடாகினார். இரவு பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி பகுதிகளில் பக்தர்கள் வரவேற்பை எதிர்கொண்டு சுந்தரராஜன்பட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டகப்படிக்கு திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு எழுந்தருளினார்.

திங்கள்கிழமை அதிகாலையில் அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர் வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அதிகாலை 5 மணிக்கு மதுரை மாநகரின் எல்லையான கோ.புதூர்  மூன்றுமாவடியை வந்தடைந்தார். அங்கு பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றது.

மேலும், கள்ளழகர் முன்பாக பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்கவும், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடியும் கருப்பணசாமி, அனுமன் வேடமிட்ட பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் தமுக்கம்  அருள்மிகு கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார்.  

பின்னர், அங்கிருந்து வைகை ஆற்றுக்கு புறப்பட்ட கள்ளழகர், இன்று அதிகாலை தங்க குதிரையில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT