கரூர்: கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு, அடுத்த நாளில் ஆடி 19ம் தேதியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
வழக்கம்போல, இந்த ஆண்டும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஆடி மாதம் 1ம் தேதி முதல் விரதம் மேற்கொண்டு 18 நாள்கள் கழித்து, இன்று(ஆக. 4) நடைபெற்ற இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிக்காக ஆண்கள், பெண்கள் என 800க்கும் மேற்பட்டோர் காலை 6 மணியில் இருந்து கோயில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.
இன்று காலை 9.10 மணியளவில் கோயில் பாரம்பரிய பூசாரி, மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்த பின்பு, மேல தாளம் முழங்க, ஆணிகள் பொருத்தப்பட்ட பாத அணி மீது நின்று அருளோடு கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அருளோடு அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் சாமியை அழைத்தனர்
இந்நிகழ்ச்சியைக் காண சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு, தேனி, மதுரை, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை டிஎஸ்பி தலைமையில் 100க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.