நிவாசப் பெருமாள் கலியுக வரதனாக, தன்னை அண்டியவர்களின் குறைகளைக் களைந்து அனைத்து விதமான மங்களங்களையும் அருளும் வரப் பிரசாதியாகத் திகழும் தலங்களில் ஒன்று மஹாரண்யம்.
ஆரண்யம் என்றால் காடு என்று பொருள். மஹாரண்யம் என்றால் பெருங்காடு. வனப்பகுதி என்று தற்போதும் அழைக்கப்படும் தாம்பரத்தை அடுத்துள்ள மணிமங்கலத்திற்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் இடைப்பட்ட பகுதியில் மலைப்பட்டு கிராமத்திற்கு அருகில் உள்ளது ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம்.
ஹரே ராம மகாமந்திரத்தால் மக்களை வசப்படுத்திய மஹாரண்யம் ஸ்ரீமுரளீதர சுவாமிஜியினால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிட தடைபட்ட திருமணம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 108 சாளக்கிராமங்கள் மற்றும் ஆத்ம நிவேதனம் என்ற சுலோகங்களால் ஆன வெள்ளி மாலையுடன் கூடிய எழில் மிகு கோலத்தோடு காட்சியளிக்கிறார் பெருமாள். இத்திருக்கோயிலின் அருகே 24 அடி உயர ஸ்ரீகன்யாகுமரி ஜெயஹனுமாரின் சன்னதி உள்ளது.
இவ்வாலயத்தில் ஏகாதசி, திருவோணம், பௌர்ணமி, அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு தினங்கள் மற்றும் கார்த்திகை வனபோஜன உற்ஸவம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக புரட்டாசி மாதத்தில் மஞ்சளாடை - துளசி மாலை அணிந்து இப்பெருமாளை நோக்கி பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
புரட்டாசியின் கடைசி சனிக்கிழமையன்று காலை இவ்வாலயத்தில் ஒன்றுகூடி விரதத்தை பூர்த்தி செய்கின்றனர். அன்று பெருமாள் சன்னதியில் நடைபெறும் அகண்ட தீப வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும் நிறைந்த நற்பலன்களைத் தரக்கூடியது. புரட்டாசி சனிக் கிழமைகளில் காலை திருமஞ்சனமும், திருப்பாவாடை தரிசன வழிபாடும் சிறப்பாக நடக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.