2025 மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினம் தான் மகா சிவராத்திரி.
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரியானது எல்லா வகையான நலனும் ஒருசேர நமக்கு வழங்குவதால் இது மகா சிவராத்திரி எனப் போற்றப்படுகிறது. 'சிவ' என்ற சொல் 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்பதாகும். சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகா சிவராத்திரி விரதமே மிகப்பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி எங்கெல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
வாரணாசி காசி விஸ்வநாதர்
இந்தியாவின் முக்கிய ஆன்மிக இடமாக விளங்கும் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். காங்கை ஆரத்தி மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.
ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ்
புனித கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷிகேஷில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு. அங்குள்ள நீலகண்ட மகாதேவ் கோயிலில் மகா சிவராத்திரியன்று சிவ பக்தர்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. கங்கையில் புனித நீராடி அங்குள்ள ஹர் கி பௌரி, தக்ஷேஷ்வர் மகாதேவ் மற்றும் நீலகண்ட மகாதேவ் போன்ற கோயில்களுக்குச் சென்று இரவு முழுவதும் நடைபெறும் சிறப்புப் பூஜை, பஜனைகளில் பங்கேற்கின்றனர்.
குஜராத் சோம்நாதர்
அரபிக்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது சோம்நாத் கோயில். இது 12 ஜோதிர் லிங்கங்களில் மிகவும் பழமையானது. இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். சிவபெருமானின் அருளைப் பெற இரவு முழுவதும் நடத்தப்படும் சிறப்புப் பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அன்றைய நாளில் மலர் அலங்காரங்களும், எல்இடி விளக்குகளால் செய்யப்படும் அலங்காரமும் கண்களுக்கு விருந்து.
மத்தியப் பிரதேசம் மகா காலேஸ்வரர்
உஜ்ஜையினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 12 ஜோதிர் லிங்கங்களில் இந்த தலமும் ஒன்றாகும். மகா சிவராத்திரி விழாவை வரவேற்கும் முக்கிய யாத்திரைத் தலங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் பஸ்ம ஆரத்தி மிகவும் பிரபலமானது. அன்றைய தினம் சாகர் குளத்தில் ஏராளமான மக்கள் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
ஆந்திரம் காலஹஸ்திஸ்வரர்
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி திருக்கோயில் வாயு லிங்கம் மிகவும் பிரபலமானது. மகா சிவராத்திரி அன்று காளஹஸ்தியில் பகல் மற்றும் இரவு முழுவதும் பிரம்மாண்டமான பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இக்கோயில் ராகு-கேது தோஷ நிவாரண தலமாகவும் விளங்குகின்றது.
கர்நாடகம் முருதேஸ்வரர்
உலகின் இரண்டாவது உயரமான சிவன் சிலை கர்நாடகத்தின் முருதேஷ்வர் கோயிலில் அமைந்துள்ளது. இது மகா சிவராத்திரி சிறப்பு தலமாக போற்றப்படுகிறது. கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயில் அரபிக்கடலின் அழகிய காட்சியை வழங்குகிறது. மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள், கலாசார பூஜைகள் வெகு சிறப்பாக இங்கு நடத்தப்படுகிறது.
ஒரிசா லிங்கராஜர்
பழமையான புகழ்பெற்ற கோயில்களில் லிங்கராஜ் கோயிலும் ஒன்றாகும். இங்கு மகா சிவராத்திரி வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இரவு முழுவதும் சிவபெருமானுக்கு பல்வேறு பொருள்களால் சிறப்பான அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு முழுவதும் மக்கள் திரண்டு சிவபெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.
பிரயாக்ராஜ், மகா கும்பமேளா
இந்தாண்டு உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறுவதால் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களுக்கு அரிய வாய்ப்பாக உள்ளது. இதுவரை 50 கோடி மக்கள் புனித நீராடிச் சென்றுள்ளனர். மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ல் தொடங்கி பிப்ரவரி 26 அதாவது மகா சிவராத்திரி அன்று நிறைவடைகின்றது. கடைசி நாளான அன்று கும்பமேளாவில் நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இந்த பழமையான கோயில்களில் மக்கள் பல காலங்களாக மகா சிவராத்திரி விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.