பண்டிகைகள், உற்சவங்கள், திருவிழாக்கள் அனைத்துக்குமே ஆன்மிகம், புராணம், அறிவியல் சார்ந்த விளக்கங்கள் உள்ளன. தனிமனித வாழ்வியலானது சமுதாயத்துடன், ஆன்மிகத்துடன் பின்னிப்பிணைந்து ஒளிர்கிறது.
சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி என ஐந்து வகைகள் உள்ளன.
பொதுவாக, பண்டிகைகள் பகற்பொழுதில் கொண்டாடப்படுகின்றன. ஆனால், மகா சிவராத்திரியை இரவு முழுவதும் கண்விழித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
மகா சிவராத்திரியின் முந்தைய நாளிலே ஒரு பொழுது உண்டு, அன்று முழுவதும் விரதம் மேற்கொண்டு, இரவு முழுவதும் நான்கு வேளைகளில் சிவனை அர்ச்சித்து, ஒவ்வொரு முறையும் நிவேதனம் செய்து, ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தை ஓதியவாறு வழிபட வேண்டும்.
விரதத்தை மேற்கொள்வதால் (உணவைத் தவிர்ப்பதால்) உடலிலுள்ள உள்ளுறுப்புகள் ஓய்வு கொள்கின்றன. உடலின் செயற்பாடுகள் குறைவதால் மனதில் எண்ண ஓட்டமானது அடங்கி, மனம் ஒருமுகப்பட்டு தியானம் செய்யும் பக்குவத்தைப் பெறுகிறது. தேங்கியுள்ள கழிவுப் பொருள்கள் இயல்பாகவே வெளியேறுகின்றன. மனமானது உறுதி எய்தி மிகுந்த ஆற்றலைப் பெறுகிறது. அந்நிலையில் புற்றுநோய் செல்களும் பெருகாது என்கிறார்கள்.
மகா சிவராத்திரி நன்னாளில்தான் அர்ஜுனன் தவமிருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதாகவும், கண்ணப்பர் தம் கண்களை சிவனுக்கு அர்ப்பித்ததாகவும், பகீரதன் தனது ஆற்றலால் கங்கையைப் பூமிக்கு வரவழைத்ததாகவும், பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால நஞ்சை சிவபிரான் உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு பருகியதாகவும் புராணங்கள் விவரிக்கின்றன.
அறிவியல் விளக்கம்:
மகா சிவராத்திரியன்று பூமியானது பெரிய நீள்வட்டப் பாதையிலிருந்து சிறிய நீளவட்டப் பகுதிக்கு மாறுகிறது. பிரம்மாண்டத்தில் நிறைந்துள்ள மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குக் காரணமாக உள்ள ஈதர் என்னும் கதிர்வீச்சு எப்போதும் பூமியை நோக்கி இருவகைகளில் பாய்ந்தவாறு உள்ளது. நேராகவும் மற்றும் சுருள் வட்ட வடிவிலும் வருகிறது. மகா சிவராத்திரியன்று இது சுருள் வட்ட வடிவில் பாய்ந்து வருகிறது.
இந்தக் கதிர் வீச்சானது மிகுந்த ஆற்றலுடையது. இது மனித உடலிலே முதுகுத் தண்டின் வழியாகப் பாய்ந்து பலவித நன்மைகளை ஏற்படுத்துகிறது. உடல் மன ஆற்றலை அதிகரிக்கச் செய்து, சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் அளிக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை மிகுதிப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை எய்துகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு ஏற்படுவதைத் தடுக்கிறது. சுரப்பிகளைச் சரியாக இயங்கச் செய்கிறது.
இந் நாளில் இயன்றால் வெட்ட வெளியிலே (வீட்டின் மாடிப் பகுதியில்) சப்பணம் இட்டு, முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு அமர்ந்து (இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தவாறும் செய்யலாம்) தியானம் செய்யவேண்டும். இரவு பதினோரு மணிமுதல் இரண்டு மணிவரையில் தியானம் மேற்கொள்வது பலவகைகளிலும் நன்மையை அளிக்க வல்லதாகும்.
தத்துவ விளக்கம்:
ஐம்புலன்களையும் ஒடுக்கி, உறங்கச் செய்து, அப்போது எழும் உண்மையான விழிப்புணர்வு நிலையில் இறைப் பேரருளை, மெய்ஞானத்தை, சிவானுபவத்தை இடையறாது துய்த்தலே மகா சிவராத்திரியின் தத்துவமாகும். உடற்
பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சி, முத்திரைப் பயிற்சிகளை குரு மூலமாக முறையாக கற்றுக் கொண்டால், எத்தகைய பாகுபாடுமின்றி இந்நிலையை ஒவ்வொரு மனிதனாலும் எய்த இயலும். சிவனைக் குறித்த ஞானத்தைப் பெறத்தக்க இரவாகவும் மகா சிவராத்திரி திகழ்கிறது.
தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம் உள்ளே என திருமூலர் விவரித்துள்ளார். இங்கு "தூங்கி' என்னும் சொல்லுக்கு "ஆழ்ந்த உறக்கம்' என்பதல்ல; "கண் மூடிச் சிவ சிந்தனையில் ஒன்றியிருப்பது' என்பதாகும். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் பூஜை அறையில் அமர்ந்து பாடல்களைப் பாடலாம். "நமசிவாய' மந்திர ஜபத்தையும் மேற்கொள்ளலாம்.
விரதங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றினால் எத்தகைய சூழ்நிலையாயினும் மனமானது இயல்பாக அதை ஏற்றுக் கொண்டு அமைதி எய்தி, நிறைவை நோக்கி அதாவது மனித வாழ்வின் லட்சியமான முக்தியை நோக்கிப் பயணிக்கும்.
- கல்யாணி வெங்கடராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.