FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வள்ளுவரின் புகழ்பாடும் கோயில்...

தெய்வப் புலவர் திருவள்ளுவர் பிறந்த இடம் என்று கருதப்படும் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பேருந்து நிறுத்தத்துக்கு அருகேயுள்ள அவருடைய பிரத்யேகக் கோயில், தமிழ்நாடு அரசால் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது.

Updated On : 29 மார்ச் 2026, 4:01 am IST
பகிர்:

தெய்வப் புலவர் திருவள்ளுவர் பிறந்த இடம் என்று கருதப்படும் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பேருந்து நிறுத்தத்துக்கு அருகேயுள்ள அவருடைய பிரத்யேகக் கோயில், தமிழ்நாடு அரசால் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, கற்கோயிலாக (கற்றளி கோயில்) கட்டப்பட்டிருக்கிறது.

2000 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரியில் நடைபெற்ற நிலையில், மார்ச் 29-இல் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெறுகிறது. அமைதியும், பொலிவும் ஒருங்கே அமையப் பெற்ற இந்தக் கோயிலில் திருவள்ளுவர், அவரது மனைவி வாசுகி, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன் உள்ளிட்ட சந்நிதிகளும் உள்ளன.

திருவள்ளுவர் வாழ்ந்த வீடு இருந்த இடம்தான் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் கல்தூண்கள், சிற்ப வேலைப்பாடுகளை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் ஸ்தபதி சந்தான கிருஷ்ணன்.

Advertisement

Advertisement

'கல்தூண்கள், கருவறை அனைத்தும் ஆகம, சிற்ப சாஸ்திர முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 11 மாதங்களில் உருவான இக்கோயிலின் கற்கள் ஆந்திரா மற்றும் ராசிபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது' என்கிறார் சிற்பக்கலை வல்லுநர் சந்தான கிருஷ்ணன்.

'அகர முதல எழுத்தெல்லாம்' என்று பாடிய வள்ளுவருக்கு சிறப்புச் சேர்க்க, தமிழின் முதல் எழுத்தை இங்கு பதித்திருப்பது வெகு பொருத்தம்.

அதைக் கடந்து உள்ளே சென்றால் கோயிலின் மணிமகுடமாகத் திகழும் கல் மண்டபம். தேர்ச் சக்கர வடிவில் இருக்கும் மண்டபத்தின் நான்கு திசைகளிலும் படிக்கட்டுகள் அமைத்திருக்கின்றனர். முகப்பில் இரண்டு யானைகளின் அழகிய சிற்பங்கள். தேரை யானை இழுத்துச் செல்வதுபோல வடிவமைத்திருக்கின்றனர்.

மண்டபத்தின் உள்ளே கலைநயமிக்க 40 கற்தூண்கள் பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்டுள்ளன. மண்டபத்தின் மையத்தில் கருணை பொழியும் முகத்துடன், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் திருவள்ளுவர். இடது கையில் ஓலைச்சுவடியும் வலது கையில் சின்முத்திரையும், உதடுகளில் மெல்லிய புன்னகையுமாய் காட்சியளிக்கிறார் பொய்யாமொழிப் புலவர்.

வள்ளுவரின் கர்ப்பக் கிரகத்துக்கு இடதுபுறம் வாசுகி அம்மையாருக்கென தனிச் சந்நிதியில், அவர் தனது தலையில் சிறிய சிவலிங்க வடிவில் கொண்டையுடன் உள்ளார். அவரது ஜீவ சமாதியும் இதுதான் என்கின்றனர்.

கற்றளி மண்டபத்துக்கு முன்பாக வலதுபுறத்தில் திருவள்ளுவரின் தாய், தந்தையான ஆதி, பகவனின் சிலைகளைக் காணலாம். தாயின் கைகளில் குழந்தை வள்ளுவர் காட்சி அளிக்கிறார். அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலையும் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள முப்பால் மண்டபத்துக்கு மூன்று வழிகள் உள்ளன. உள்புறச்சுவர்களில் 1,330 குறள்பாக்களும் பித்தளைத் தகடுகளில் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளத்துக்கு முன் வள்ளுவர், ஒளவையார், பாண்டிய மன்னர் சிலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், விநாயகர், பைரவர், கருமாரியம்மன், சப்தகன்னியர், நவகிரகங்களுக்கென தனித் தனி சந்நிதிகளும் உள்ளன.

முன்பு இலுப்பை வனமாக இருந்த இந்த இடத்தில்தான் திருவள்ளுவரின் பெற்றோரான ஆதியும், பகவனும் வாழ்ந்தனர் என்றும், இங்கு எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரை வணங்கி வழிபட்டதால்தான் வள்ளுவர் அவதரித்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைப் பேராசிரியர் அரங்க ராமலிங்கம்

இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்கிறேன். சாலையின் மட்டத்துக்கு மேலே 40 அடி உயரத்தில் மூலவர் திருவள்ளுவரின் கருவறை விமானம் அமைந்திருக்கிறது. மிக உயர்ந்த பீடத்தில் திருவள்ளுவர் எழுந்தருளியிருக்கிறார். முழுவதும் கற்றளியாலான விஸ்தாரமான இந்தக் கோயிலுக்குள் நுழைந்தவுடன் மனம் அமைதியாகி விடுகிறது.

முன்னர் இங்கு சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் அடிக்கடி நடக்கும். நான் பலமுறை இங்கு சொற்பொழிவாற்றியிருக்கிறேன். அண்மையில் தஞ்சைப் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் இ.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் சென்றுவந்தேன்.

கோயில் அர்ச்சகர் பாலகுமார்

திருவள்ளுவரை குரு ஸ்தானத்தில் வைத்து இங்கு நாள்தோறும் அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. அதனால் வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு. அவர் அவதரித்த வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தன்றும், அவர் முக்தி அடைந்த மாசி மாத உத்தர நட்சத்திரத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-இல் நாள் முழுவதும் பூஜைகள், சொற்பொழிவுகள், மாணவர்களுக்கான போட்டிகள் என விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் திருவள்ளுவர் கோயில் அமைந்திருப்பதால், அறுபத்து மூவர் விழா நடக்கும்போது, இங்கிருந்து வள்ளுவர், வாசுகி சிலைகளும் எடுத்துச் செல்லப்படும். கோயிலில் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதி, காமாட்சி அம்மன் சந்நிதிகளில் பிரதோஷம், பெüர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

படங்கள்: ஆர். கிருஷ்ணராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments