ராகு, கேது தோஷம் விலக...
சோழ மன்னர்களின் குலதெய்வமான பட்டீஸ்வரம் துர்கை, பக்தர்களின் சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.
சோழ மன்னர்களின் குலதெய்வமான பட்டீஸ்வரம் துர்கை, பக்தர்களின் சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.
இவ்வூர் அக்காலத்தில் தேனுபுரி என அழைக்கப்பட்டது. இறைவன் தேனுபுரீஸ்வரர், பட்டீஸ்வரர் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
பொதுவாக கோயில்களில் துர்கையம்மன் கருவறை சுற்றில் அருள்வார். ஆனால், தேனுபுரீஸ்வரர் கோயிலில் துர்கை தனி சந்நிதியில் எழுந்தருளி, பிரசித்திபெற்று விளங்குகிறாள். எனவே, இது பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
துர்கையம்மன் இங்கு எழுந்தருளியுள்ளதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
வேத காலத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள தற்போது கோயில் இருந்த இடத்துக்கு வந்தாள் பார்வதி தேவி.
அவள் தனிமையில் தவம் இருக்கத் துவங்கியபோது, அதற்கு வசதியாக தேவர்கள் அந்த இடத்தில் மரம், செடி, கொடிகள் என அமைத்து, வனப்பிரதேசமாக அதை உருவாக்கினர்.
பார்வதி தேவிக்கு உதவி செய்ய காமதேனு தனது பெண்ணான பட்டியையும் அனுப்பி வைத்தது. பார்வதி நின்று கொண்டே
பரமேஸ்வரரை நினைத்து தவம் இருந்தாள். பார்வதியின் கடுமையான தவத்தைக் கண்ட சிவனார், அன்னையின் வேண்டுகோளை ஏற்று, சடை முடியுடன் காட்சி தந்து, சாபத்தை நீக்கி, அவளை அங்கேயே துர்கையாக இருந்து கொண்டு மக்களின் துயரங்களைத் துடைத்து அருளுமாறு கூறினார்.
பின்னர், "நீ இங்கு வந்து தவம் செய்ததனால் இது தவ வலிமை பெற்ற பூமியானது. நீயே என்னிடம் சாப விமோசனத்தை இந்த இடத்தில் பெற்றுள்ளாய். அதனால்தான் ராமரும் இங்கு வந்து என்னை பூஜித்து, தனது தோஷங்களை விலக்கிக் கொண்டு தனுஷ்கோடி கடலுக்குச் சமமான புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.
இங்கு வந்து உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். நீ அவர்களால் மக்களுக்கு ஏற்படும் தோஷங்களைக் களைவாய். இத்தனை பெருமைகளையும் பெற்ற இந்தத் தலமே என்னுள் பாதியாக உள்ள உனக்குப் பெருமை சேர்க்கும் தலமாகும்'' எனக் கூறினார்.
பார்வதியின் தவத்தையும், அதனால் அன்னை அடைந்த பலனையும் கண்ட பசுவான பட்டி, தானும் ஒரு சிவலிங்கத்தை அங்கேயே அமைத்து, பாலைச் சுரந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. மகிழ்ந்த சிவனார் அதற்கும் அருள்செய்தார்.
பின்னர், பட்டி கேட்டுக்கொண்டபடி, தானும் பட்டியின் பெயரைக்கொண்டு இத்தலத்தில் அமர்ந்தார். அதனால் இறைவனுக்கு பட்டீஸ்வரர் என்ற திருநாமமும், தலத்துக்கு பட்டீஸ்வரம் என்ற பெயரும் உருவானது.
சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் தமது அரண்மனையைப் பாதுகாக்க நான்குபுறங்களிலும் துர்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் சந்நிதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்களே இந்தக் கோயிலில் தாங்கள் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாகக் கூறப்படுகிறது.
வெற்றி வேண்டுவோர் வழிபடவேண்டிய தெய்வம் பட்டீஸ்வரம் துர்கை. அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கும் இவ்வன்னை விஷ்ணு துர்கை, நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவகிரக நாயகி, நவயோக நாயகி, நவராத்திரி நாயகி, நவகோடி நாயகி எனவும் போற்றப்படுகிறாள். ராகுவுக்கு அதிதேவதையாவாள்.
மகிஷன் தலை மேல் நின்ற நிலையில் சிம்ம வாகனத்துடன் எட்டுத் திருக்கரங்கள், முக்கண்கள், காதுகளில் குண்டலங்களுடன் பட்டீஸ்வரம் துர்கை சாந்த ரூபமாகக் காட்சியளிக்கிறாள்.
சோழ மாமன்னர்கள் விஜயாலயன் தொடங்கி மூன்றாம் ராஜேந்திர சோழன் வரை ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை. சோழமன்னர்களின் அரண்மனையின் வடக்குவாயில் தெய்வமாக அருள்பாலித்தவள். போர்க்களம் புகும் முன்னரும், வெற்றி வாகை சூடிய பின்னரும் சோழர்கள் இந்த அன்னையைப் போற்றி வழிபட்டனர்.
துர்கையை ஒவ்வொருநாளும் ராகுகால நேரங்களில் ராகுபகவான் வழிபட வருவதாக ஐதீகம். ராகு } கேது தோஷம், செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற பரிகாரத் தலமாகும். ராகு கால நேரத்தில் ராகுவை வணங்குவதைவிட, ராகுவுக்கு அதிதேவதையான துர்கைக்கு புடவை வாங்கித் தந்து, எலுமிச்சைப்பழ மாலை, செவ்வரளி மாலை, குங்குமம் சாற்றி வழிபடுவது சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை மற்றும் பெüர்ணமி தினத்தில் பட்டீஸ்வரம் துர்கை அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஆடிவெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷம்.
பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தரிசனத்துக்காக காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையும் திறந்திருக்கும்.
- தஞ்சாவூர் இரா.சுரேஷ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.