புத்திசாலிகள்..!
'அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது...' என்பார்கள். மற்ற உயிரினங்களைக் காட்டிலும், மனித இனத்துக்குத் தனிச் சிறப்புண்டு.
'அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது...' என்பார்கள். மற்ற உயிரினங்களைக் காட்டிலும், மனித இனத்துக்குத் தனிச் சிறப்புண்டு. மனிதர்களுக்கு இணையான புத்திசாலித்தனம் கொண்ட சில உயிரினங்களும் உண்டு. அவற்றில் சிலவற்றை அறிவோம்.
சிம்பன்சிகள்
புற்றிலிருந்து கரையான்களை வெளியே எடுக்க சிம்பன்சிகள் மரக்கிளைகளை உரித்துப் பயன்படுத்துகின்றன. இவை கண்ணாடிகளைப் பார்த்து தங்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. இறந்தவைகளுக்காகத் துக்கம் அனுசரிக்கின்றன.
Advertisement
Advertisement
கொலபஸ் குரங்குகளை வேட்டையாடுவதற்காக சிம்பன்சிகள் குழுக்களாக ஒருங்கிணைகின்றன. கிளைகளை உடைத்து, சீரமைத்து, ஈட்டிகளை உருவாக்க தங்கள் பற்களால் கூர் தீட்டுகின்றன. பிறகு, புஷ்பேபிகள் எனப்படும் சிறிய இரவு நேரப் பாலூட்டிகளை மரப்பொந்துகளில் குத்தி வேட்டையாடுகின்றன.
கொரில்லாக்கள்
கலிபோர்னியாவில் வளர்க்கப்பட்ட கோகோ என்ற கொரில்லா 2018-இல் இறப்பதற்கு முன்பு சைகைகளைப் பயன்படுத்தவும், ஆங்கிலத்தின் பெரிய சொற்களஞ்சியத்தைப் புரிந்துகொள்ளவும் கற்றது. 'கொரில்லாக்கள் இறந்தவுடன் எங்கே செல்கின்றன?' என்று நேஷனல் ஜியோகிராபிக் எழுத்தாளர் கேட்டபோது அந்தக் கொரிலா, 'வசதியான பொந்துக்கு போய் வருகிறேன்' என்பது போன்ற செய்கையைக் காட்டியது.
ஒரு பெண் கொரில்லா சதுப்பு நில குளத்தில் இறங்குவதற்கு முன் ஒரு குச்சியைக் கொண்டு அதன் ஆழத்தைச் சோதிப்பதைக் காட்டியது. இந்த வகை கொரில்லாக்கள் தற்போது மிகக் குறைந்து வரும் இனப் பட்டியலில் உள்ளன.
ஓராங்குட்டான்கள்
போர்னியோ, சுமத்ராவின் சிவப்பு நிறக்குரங்குகளான ஓரங்கட்டான்கள் தற்போது எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. 2018-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி , 'தாய் ஓரங்கட்டான்கள் தங்கள் அபாய அழைப்புகளை அடிக்கடி தாமதப்படுத்துகின்றன. வேட்டையாட வந்தவர் அங்கிருந்து சென்ற பின்னரே தங்கள் குட்டிகளை எச்சரிக்கின்றன.
அதேபோல் வேட்டை மிருகம் அருகில் இருக்கும்போது, தனது இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக சப்தமிடும் உள்ளுணர்வை அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது. இது அணிச்ச செயல் அல்ல; மாறாக திட்டமிட்ட சிந்தனையின் வெளிப்பாடு' என்று கூறப்பட்டிருந்தது.
கபுச்சின் குரங்குகள்
மத்திய, தென் அமெரிக்க காடுகளில் வாழும் சிறிய குரங்குகளான கபுச்சின்கள் உலகின் மிக அறிவார்ந்த முதன்மை இனம் என்கின்றனர். பிரேசிலின் தாடி கபுச்சின், கடினமான பனை விதைகளை வாகனங்கள் செல்லும் வழியில் வைக்கின்றன. வாகனங்கள் அதன்மேல் ஏறிச்செல்லும்போது விதைகள் உடைந்து, கிடைக்கும் பருப்புகளை ஓட்டமாய் ஓடி வந்து எடுத்துச் சாப்பிடுகின்றன.
கபுச்சின் குரங்குகள் கீழே விழுந்த பொருள்களை எடுத்து வருதல், சுவிட்சுகளை இயக்குதல் போன்ற நுணுக்கமான பணிகளை செய்யும் திறன் கொண்டவை. இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி விலங்காக பயிற்றுவிக்கப்படுகின்றன. பயிற்சி அளித்தால் அதற்கு ஏற்றவாது இவை தங்களை விரைவாக மாற்றிக் கொள்கின்றன.
யானைகள்
நல்ல மூளையும் நீண்ட நினைவாற்றலும் கொண்டது யானை. வயதான பெண் யானையால் தனது வாழ்விடம் முழுவதும் உள்ள தொலைதூர நீர் நிலைகளையும் நினைவுக்கு கொண்டு வந்து, துல்லியமாய் அழைத்துச் செல்லும். ஆசிய, ஆப்பிரிக்க யானைகள் துக்கம் அனுசரிக்கத் தெரிந்தவை. இறந்த குடும்பங்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அங்கு தங்கி ஆறுதல் அளித்து விட்டுத் திரும்புகின்றன.
நீர்நிலைகளில் நீர் வெப்பத்தால் ஆவியாவதைத் தடுக்க மரப்பட்டைகளைக் கொண்டு வந்து மூடுகின்றன. ஹேப்பி என்ற ஆசிய யானை தன் அடையாளத்தைக் கண்டறியும் சோதனையில் வெற்றி பெற்றது. அதாவது, அது அதன் பிரதிபிம்பத்தில் மட்டுமே தெரியும் தன் தலையில் உள்ள ஒரு குறியை மீண்டும் மீண்டும் தொட்டது. இது யானைகளுக்கு உள்ள தன்னுணர்வை அழகாக பிரதிபலிக்கிறது.
டால்பின்கள்
பாட்டில் மூக்கு டால்பின்கள் பெரும்பாலும் கடலின் அறிவாளிகள் என அழைக்கப்படுகின்றன. இதன் அறிவாற்றல் குரங்குகளுக்கு இணையானது. கண்ணாடியில் தங்களை அடையாளம் காண்கின்றன. ஆட்டி வைப்பவரின் கை அசைவுகளை அறிகின்றன. தனித்துவமான விசில் ஒலிகளை எழுப்பி நண்பர்கள், காதலிகள் எனப் பலரை அழைக்கின்றன.
வனப் பன்றிகள்
பன்றிகள் புத்திசாலித்தனம் கொண்டவை. அதிலும் வனப் பன்றிகள் சிறப்புடையவை. புதையுண்ட உணவையும்கூட மோப்பம் பிடித்து அறியும். இவை தென் அமெரிக்கா முழுவதும் கட்டுப்படுத்தாத அளவுக்குப் பரவிவிட்டன. மனித குரங்குகளைப் போல் அறிந்து செயல்படும் திறன் கொண்டவை. கர்சர்களையும்கூட இயக்க இவை கற்றுள்ளன.
காகங்கள்
காக்கைகள் தந்திரமானவை. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் கொண்டவை. ஜப்பானிலுள்ள காக்கைகள் வால் நட்டை உடைத்து பருப்பை சாப்பிட சாலையில் போட்டு வைக்கின்றன. வாகனங்கள் அதன் மீது ஏறி உடைத்துச் சென்றவுடன் அவசர, அவசரமாய் வந்து பருப்பைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிடுகின்றன. நியூ கலிடோனியன் காகங்கள் மரக்கட்டைகளிலிருந்து புழுக்களை வெளிக்கொணர சில கிளைகளையும் இலைகளையும் வளைத்துப் பயன்படுத்துகின்றன.
ஆக்டோபஸ்கள்
முதுகெலும்பில்லாத இவை புத்திசாலியானவை. நரம்பு மண்டலத்தின் பெரும்பகுதி இவற்றின் கைகள் வழியாகப் பரவியுள்ளது. 2016-ஆம் ஆண்டில் இன்கி என்ற ஆக்டோபஸ் நியூஸிலாந்தின் தேசிய மீன் காட்சியகத்தில் இருந்த தனது தொட்டியின் சிறிய இடைவெளி வழியாக சுருக்கிக் கொண்டு தப்பித்து கடலுக்குச் செல்லும் ஒரு குறுகிய வடிகால் குழாய் வழியாக வழுக்கி இறங்கி தப்பித்து விட்டது.
மீன் காட்சியகத்தில் உள்ள தேவையற்ற விளக்குகளை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மின் சுற்று கோளாறுகளை ஏற்படுத்தும் குறும்பும் உண்டு. வீசப்பட்ட தேங்காய் ஓடுகளை தண்ணிரின் தரை மட்டம் வழியாக இழுத்துச் சென்று, அதனை கையடக்க வசமாகப் பாதுகாத்துக் கொள்ள இவை பயன்படுத்தும்.
எறும்புகள்
மிகச் சிறி எறும்பை தனியாக புத்திசாலி எனக் கூற இயலாது. ஆனால், கூட்டமைப்பில் சிறப்பாகச் செயல்படுபவை. ஒரு தடத்தை உருவாக்கி, அதனை மற்றவை பின்பற்றும். இவை தங்களுடைய உடல்களையே உயிருள்ள பாலங்களாகவும் மிதவைகளாகவும் இணைக்கின்றன. படை எறும்புகள், இலைவெட்டி எறும்புகள் புத்திசாலித்தனமானவை. தங்களது உணவை தாங்களே தேடிச்சேர்க்கும் திறன் படைத்தவை.
-ராஜி ராதா, பெங்களூரு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.