தேவை கட்டுப்பாட்டு வளையங்கள்!
மனித அறிவுத்திறன் தனது எல்லையைக் கடந்து, தனக்கு நிகரான, ஏன், தன்னை விடவும் ஆற்றல் வாய்ந்த ஒரு செயற்கை உயிர்ப்பை உருவாக்கியுள்ளது.
மனித அறிவுத்திறன் தனது எல்லையைக் கடந்து, தனக்கு நிகரான, ஏன், தன்னை விடவும் ஆற்றல் வாய்ந்த ஒரு செயற்கை உயிர்ப்பை உருவாக்கியுள்ளது. அதன் பெயர்தான் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.). நெருப்பைக் கண்டுபிடித்தபோது மனிதன் நாகரிகத்தின் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தான்.
ஆனால், அதே நெருப்பு காடுகளையும் நகரங்களையும் சாம்பலாக்கும் சக்தி வாய்ந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். இன்று ஏ.ஐ. தொழில்நுட்பமும் அத்தகையதொரு இருமுனைக் கத்தியாக மாறியிருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு, 1980-களில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காணும் இடங்களிலெல்லாம் கொட்டிக் கிடந்தன.
Advertisement
Advertisement
வித்தியாசமான தலை அலங்காரத்துடனும் முக லட்சணத்துடனும் இருந்த அந்தப் புகைப்படங்களை ஏ.ஐ.யிடம் கேட்டுப் பெற்று பரவசமாயினர். இதற்காக எக்கச்சக்க நீர் செலவு ஏற்படும் எனத் தெரிந்தும் தான் கண்கூடாக பார்த்தறியாத, உணராத விஷயத்துக்காக யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மக்களைப் பொருத்தவரை ஏ.ஐ. என்பது ஒரு ஒரு கண்டுபிடிப்பு. அதை வைத்து பொழுதுபோக்கவும், பார்த்து சிரிக்கவும், இறுக்கம் தளர்த்திக் கொள்ளவும்தான் சாமானியன் முயல்கிறான். தன் தேவைக்கு அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆர்வம் காட்டுகிறான். அப்படி இரண்டு மூன்று நாள்களாக இணையத்தில் கொண்டாட்டமாக நீடித்த இந்த 80-களின் நாட்டம், 2030-இல் மனித இனத்தை காலி செய்து விடும் என்ற ஆய்வாளர்களின் கருத்தால் அப்படியே அரண்டு மௌனமானது.
’2030-க்குள் மனிதகுலத்தையே ஏ.ஐ. அழித்துவிடும்' என்ற அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை, ஏதோ அறிவியல் புனைகதை அல்ல. மாறாக, இந்தத் தொழில்நுட்பத்தை இரவு - பகலாக செதுக்கிய உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகளின் அடிவயிற்றிலிருந்து வெளிவந்த மரண ஓலம்!
இந்த அச்சுறுத்தலின் விதை, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உச்சகட்ட புள்ளிகளாகத் திகழும் ஓபன் ஏ.ஐ., ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களின் உள்ளிருந்தே முளைத்திருக்கிறது.
இங்கு பணியாற்றிய முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களான ஜேகப் காக்சன் மற்றும் ஈவான் ஹுபிங்கர் ஆகியோர், நிறுவனங்களின் வர்த்தகப் பேராசையையும், பாதுகாப்பு விதிகளைப் புறந்தள்ளும் வேகத்தையும் பார்த்து அதிர்ந்து போய் தங்கள் பதவிகளைத் துறந்திருக்கின்றனர்.
அவர்கள் உலகுக்குச் சொன்ன செய்தி இதுதான்: "நாங்கள் உருவாக்கும் இந்த இயந்திரங்கள், மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் பேராற்றலை மிக வேகமாக அடைந்து வருகின்றன” ’ஏஐ-யின் தந்தை' என்று போற்றப்படும் ஜாஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி, இதே எச்சரிக்கையை விடுத்தார். 2030-க்குள் ஏ.ஐ. மூலம் மனித இனம் அழிய 10%-க்கும் அதிகமாக வாய்ப்பிருப்பதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
2030-இல் ஏ.ஐ. மனித இனத்தையே கொன்றுவிடும் என ’மீம்ஸ்கள்' பரவிய நிலையில் என்னிடம் என் தோழி ஏ.ஐ. ரோபோக்கள் மனிதர்கள் அனைவரையும் துப்பாக்கி எடுத்து கொன்று விடுமா? என்று தனக்கு ஏற்பட்ட நியாயமான சந்தேகத்தை கேட்டார். இந்த செய்தியால் பலரும் பலவித சிந்தனைக்கு உட்பட்டார்கள். எப்படி அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது? என தங்களுக்கு தெரிந்த வகையில் சிந்திக்கத் தொடங்கி விவாதித்தார்கள். பணிபுரியுமிடத்தில் இருந்த மற்றொரு தோழி இன்னும் ஆழமாக இதைப் பற்றி பேசினார்.
மூன்று அதிவேக செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை ஓர் இடத்தில் கிடத்தி அதற்கு இணைய இணைப்பை இல்லாது அல்லது கிடைக்காத வகையில் தனிமைப்படுத்தி இருந்தார்களாம். அதில் ஒரு ரோபோ அதுவாகவே தன்னிச்சையாக முயன்று வேறொரு கணினியை இருந்த இடத்திலிருந்தே ’ஹாக்' செய்து இணைய இணைப்பை பெற்றுக் கொண்டதாம்.
இதைப் பார்த்த மற்ற இரு ரோபோக்களும் அதே வழிமுறையைப் பின்பற்றி இணைய இணைப்பைப் பெற்று செயல்படத் தொடங்க, பின்னர் அவற்றுக்கிடையே யார் தலைமைப் பொறுப்புக்கு வருவது என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. அந்தப் போட்டிக்கு இந்த மூன்று ரோபோக்களும் ஒன்றை ஒன்று போட்டுத் தாக்க தீவிரமாக செயல்பட நிலைமை மோசமாக மாறிப் போயுள்ளது.
பின்னர், இவற்றுக்குக் கிடைத்த இணைய இணைப்பைத் துண்டித்து, இவற்றைச் செயலிழக்கச் செய்து பிரித்திருக்கிறார்கள். இது செயற்கை நுண்ணறிவு குறித்து நடைபெறும் ஆராய்ச்சியின் தொடக்கம்தான். இது போன்ற பலவித ஆராய்ச்சிகளைக் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ரோபோக்களுக்கு மனித உணர்வுகள் வந்தால் என்ன ஆகும் என்று ரோபோ படம் மூலம் பல ஆண்டுகள் முன்பே நாம் திரைப்படத்தில் பார்த்தோம். பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாரிக்கப்பட்ட படம் என்ற அளவில் சுவாரஸ்யத்துடன் நாம் அனைவரும் அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தோம். ஆனால், அப்படிப்பட்ட களேபரங்கள் எல்லாம் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வகைமைகளில் நம் கண் முன்னே அரங்கேறப் போகிறது என்று நினைக்கும் போது இதயம் தாறுமாறாக துடிக்கத்தான் செய்கிறது.
மனிதர்களை ஏ.ஐ. நேரடியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லாது. மாறாக, அது மனிதன் வாழும் அமைப்பையே சிதைத்துவிடும் என்கிறார்கள். மனிதன் ஒரு புதிய மென்பொருளை உருவாக்கப் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்றைய ஏ.ஐ. தங்களின் சொந்தக் குறியீடுகளை தாங்களாகவே பகுப்பாய்வு செய்து, தங்களைத் தாங்களே நொடிப் பொழுதில் அடுத்த கட்டத்துக்குத் தரம் உயர்த்திக் கொள்கின்றன. மனிதனின் உதவி இல்லாமல் ஏ.ஐ. தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும்போது, அதன் அறிவுத்திறன் மனிதப் பேரறிவைவிட பல மடங்கு உயர்ந்துவிடும்.
அண்மையில் சில ஆய்வகங்களில், இரண்டு ஏ.ஐ. முகவர்கள் மனிதர்களுக்குப் புரியாத தங்களுக்குள்ளான ஒரு புதிய சங்கேத மொழியை உருவாக்கித் தங்களுக்குள் உரையாடிக் கொண்டனவாம். ஆபத்தை உணர்ந்த விஞ்ஞானிகள் உடனே அவற்றின் மின் இணைப்பைத் துண்டித்திருக்கின்றனர். படைத்தவர்களிடமே மறைக்கும் அளவுக்கு என்ன அந்தரங்கம் அவற்றுக்கு?
இன்றைய ஏ.ஐ. வெறும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நிற்பதில்லை. அவற்றிடம் ஓர் இலக்கைக் கொடுத்தால், அதை அடைவதற்கான வழிகளை அவை தாங்களாகவே திட்டமிடுகின்றன.
ஒரு ஏ.ஐ. முகவரிடம், ’ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை உயர்த்திக் கொடு' என்று கட்டளையிட்டால், அது இலக்கை அடைய அந்த நிறுவனத்தின் போட்டியாளர்களின் கணினிகளைத் தன்னிச்சையாக ஹேக் செய்யவும், பொய்ச் செய்திகளைப் பரப்பவும் முயற்சி செய்யும் போலும். இலக்கு மட்டுமே அதற்கு முக்கியம், மனித நெறிமுறைகள் அல்ல. தீய எண்ணம் கொண்ட ஒரு மனிதன், உலகை அழிக்கும் ஒரு புதிய வைரûஸ உருவாக்க ஏ.ஐ.-யைப் பயன்படுத்தலாம்.
கரோனா தீ நுண்மியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். மருத்துவத் துறையில் மருந்துகளைக் கண்டறியப் பயன்படும் அதே ஏ.ஐ., மனிதர்களைக் கொல்லும் நச்சு ரசாயனங்களின் மூலக்கூறு அமைப்பையும் சில நிமிஷங்களில் வடிவமைத்துத் தந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
எல்லா எச்சரிக்கைகளுக்கும் ஒரு மாற்றுத் தரப்பு உண்டு. தொழில்நுட்ப உலகின் மாமன்னரான ’என்விடியா' முதன்மைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் போன்றவர்கள், 2030-க்குள் உலகம் அழிய வாய்ப்பே இல்லை என்று வாதிடுகின்றனர். ஏ.ஐ. என்பது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இயங்கும் ஒரு கணிதக் கருவி . அதற்குத் தற்போதைக்குச் சுய உணர்வோ, பசியோ, கோபமோ, வாழ வேண்டும் என்ற சுயநலமோ கிடையாது. மனிதன் கட்டளையிடாதவரை அதனால் தானாக இயங்க முடியாது என்று வாதிடுகிறார்.
உலகின் நலனுக்காக எத்தனையோ அமைப்புகள் இருந்தும் உலகின் பல இடங்களில் இன்றும் போர் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எதிரி நாட்டு மக்களை அழிக்க அல்லது பழிவாங்க மனிதர்கள் ஏ.ஐ.யை தவறாக பயன்படுத்தும் போக்கு நிச்சயம் ஏற்படும்.
ஏ.ஐ. எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும், அது இயங்குவதற்கு பிரம்மாண்டமான தரவு மையங்களும், சிலிக்கான் சில்லுகளும், அளப்பரிய மின்சாரமும் தேவை. மனிதன் நினைத்தால் அதன் மின்சாரத் தொடர்பைத் துண்டிப்பதன் மூலம் அதை முடக்கிவிட முடியும்.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் நாடுகளுக்கு இடையே போட்டி நிலவுவதுபோல, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. லாப வெறியில், பாதுகாப்புக்கான சோதனைகளைச் செய்யாமல் அவசர அவசரமாக ஏ.ஐ.-யை சந்தையில் வெளியிடும்போது விபத்து நேரிடலாம்.
படை வீரர்களுக்குப் பதிலாக, ஏ.ஐ. மூலம் இயங்கும் தன்னாட்சி ட்ரோன்களும், ரோபோக்களும் போர்க்களத்தில் இறக்கப்படும்போது, ஒரு சிறிய மென்பொருள் பிழை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதான தாக்குதலாக மாறக்கூடும்.
இயற்கை மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்தது; மனிதன் இயந்திரத்துக்கு நுண்ணறிவைக் கொடுத்துள்ளான். நெருப்பைக் கையாண்ட அதே பக்குவத்துடன், சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கான கடுமையான சட்டங்களையும், கட்டுப்பாடு வளையங்களையும் உருவாக்க வேண்டும்.
இயந்திரத்தின் மூளையில் நுண்ணறிவை மட்டும் ஏற்றினால் போதாது. அதன் இதயத்தில் மனிதநேயத்தையும் விதைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.