FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நடை

கண்ணனுக்கு அன்று எழுபது வயது தொடங்கியிருந்தது. பீமரத சாந்தின்னு சில குடும்பங்களில் தம்பதிகள் செய்து கொள்வது வழக்கம்.

பகிர்:

சீதாராம்

கண்ணனுக்கு அன்று எழுபது வயது தொடங்கியிருந்தது. பீமரத சாந்தின்னு சில குடும்பங்களில் தம்பதிகள் செய்து கொள்வது வழக்கம். மெய்யாகப் பார்த்தால், குழந்தைகள்தான் அந்த வைபவத்தை நடத்தி வைப்பார்கள். பையன் வருண், பெண் அதிதி இருவருமே முந்தைய இரவே போன் செய்து, பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்தியிருந்தார்கள்.

அத்தனை விசா பிரச்னைகளுடன் அமெரிக்காவே கதி என்று கிடப்பவர்கள். பாவம் ! அவர்களுக்கு என்னுடைய எத்தனையாவது பிறந்த நாள் என்ற கணக்கிருக்காது. பீமரத சாந்தி என்றால் என்ன என்பதும் தெரிந்திருக்காது. கண்ணன் தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

ம்.... சாவித்திரி மட்டும் இருந்திருந்தால் ஒரே களேபரமாகியிருக்கும். மூன்று மாதங்கள் முன்பே அவள் திட்டங்கள் 1, 2-ன்னு மாற்று வழிகளுடன் தயாராக இருக்கும். 'குழந்தைகளை வரச் சொல்லியிருக்கேன்... அப்படி அவங்க வரலைன்னா திருக்கடையூர் போய் விட்டு வரலாம்...'

ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சியையும் செய்ய வேண்டிய முறையில் செய்து முடிப்பதில் சாவித்திரிக்கு நிகர் அவள் மட்டும்தான். எதற்கும் அலட்டிக் கொண்டதில்லை. வருத்தப்பட்டதும் இல்லை. ஆனால், காலன்தான் விரைவில் அவளை அழைத்துக்கொண்டு விட்டான். இளங்காலைத் தென்றலில் தூசி விழுந்தது போன்ற பாவனையில் கண்ணன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கண்ணன் அவரது தினசரி அதிகாலை நடையைத் தொடங்கிக் கொண்டிருந்தார். நாற்பது நிமிடம். வீட்டிலிருந்து தொடங்கி காலனியின் பாதிக்கு மேல் கடப்பார். பின்னர் வெளியில் முக்கிய வீதியில் ஸ்கூல் பேருந்துகள் நிற்கும் இடம் வரை... அதே வழியில் திரும்புவார்.

பதினைந்து வருடங்களாக அதே வழக்கம். அவ்வப்போது நடக்கும் பாதையை மாற்றிக் கொள்வது மூளைக்கு நல்லது என சமூக ஊடகங்களில் குறிப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், கண்ணனுக்கு அவற்றில் அதிக உடன்பாடு இருந்ததில்லை.

மனைவியின் மறைவுக்குப் பின்னர் ஓரிரண்டு முறை பெண் அதிதியின் குழந்தையைப் பார்ப்பதற்காக அமெரிக்க சென்றதுண்டு. ஆனால், குழந்தையை காப்பகத்தில்தான் விட்டு வளர்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

'அப்பா! உங்க பேத்தியைப் பார்க்க வாங்க... சரி! ஆனா, குழந்தையைப் பார்த்துக்கறதுக்காக வர வேண்டாம். உங்களுக்கு அந்தத் தொந்தரவு கிடையாது. இந்த வயசில தனியா உங்களால குழந்தையோட ஓடி ஆட முடியாதுன்னு வச்சுக்குங்க. இந்தியாவில இருந்தா உங்களை தனிமை வாட்டும். இங்க வந்தா, கொஞ்ச நாள்கள் எங்களோட ... அப்பறம் அடுத்த முறை பையன் வருணோடன்னு நாள்களைக் கழிக்கலாம்..'

பெண் அதிதி அவரை விட்டதில்லை..

' இந்தியா என்னைவிடமாட்டேங்கிறதும்மா. தினசரி சாப்பாட்டுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். வீடு, டி.வி., பத்திரிகைகள்... இப்படி பொழுது நல்லபடியாகப் போகும். ஏதானும் தலைவலி, காய்ச்சல்னா கூட அங்க டாக்டர்களைப் பார்ப்பது சுலபம்...'

'அங்க நீங்க இருக்கீங்களா, இல்லையான்னு கூட அக்கம்பக்கத்தில தெரிஞ்சிருக்காது, அப்பா.'

'பரவாயில்லைம்மா...'

அதிதி தன் வற்புறுத்தலை அத்துடன் நிறுத்தியிருந்தாள். 'வெறும் உயிர் மட்டும் இருக்கிறது. ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்று சொல்ல முடியுமா...? அதிதியிடம் ஏதோ தைரியமாகச் சொல்லி விட்டாலும், தனிமையிடமிருந்து தப்பிக்கத்தான் இந்த தினசரி நடையோ? என்று கண்ணனுக்கு அவ்வப்போது தோன்றும். விரக்தியுடன் ஒரு புன்னகை. வாழ்வில் ஒரு பிடிப்பில்லாமல் நாள்கள்தான் நகர்ந்து கொண்டிருந்தன.

கடந்த பல வருடங்களாக கண்ணன் அமெரிக்கப் பயணத்தையும் தவிர்த்து வந்தார்.

கண்ணன் நடக்கத் தொடங்கினார். பெரிய காலனி. தனித்தனி வீடுகள். சின்ன ஷாப்பிங் சென்டர். கொஞ்ச தூரம் தள்ளியதும் வீட்டின் கம்பிக் கிராதியில் முகம் புதைத்த வண்ணம் ஒரு பெண் குழந்தை. அன்றாடம் பார்க்கும் காட்சி. குழந்தையின் முகத்தில் சுரத்தேயில்லை. பள்ளிக்கூடம் போகவேண்டுமே என்ற கவலையோ? அவரைப் பார்த்ததும் குழந்தை வீட்டுக்கு உள்ளே ஓடிவிடும்.

பருவத்தில் நல்ல மழை பெய்திருந்தது. காலனியின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய தோட்டம். செம்பருத்தியிலிருந்து மல்லிகை மொட்டுகள் வரை சுற்றுச்சுவரை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. கண்ணனுக்கு அவற்றை ரசிக்கும் மனநிலை என்னவோ இருந்ததில்லை. ஷாப்பிங் சென்டரைத் தாண்டிக் கொண்டிருந்தார். காய்கறிக்காரன் சாக்குப் போர்வைகளை எடுத்துவிட்டு காய்கறிகள் மேல் நீர் தெறிக்கலானான். அன்றாடக் காட்சிதான்.

நடை இப்போதெல்லாம் கண்ணனுக்கு ஒரு பயிற்சியாகவோ, ஆரோக்கியத் தேவையாகவோ தெரியவில்லை. வீட்டிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை போல் இருந்தது. சாவித்திரியின் நினைவுகளிலிருந்து விடுபட ஒரு வடிகாலாய் இருந்தது. நீண்ட அமைதியைத் தள்ளிவிட்டு இரைச்சல் உள்ள இடங்களை நாடுவது போலவும் கண்ணனுக்கு அவ்வப்போது தோன்றும். காலனியின் செக்யூரிடி கேட். பன்னிரண்டு மணி நேரம் ஷிஃப்ட் . முதலில் அவருக்கு அதிகமாக அது தெரிந்தது. பின்னால் வெறும் விசிட்டர்களின் விவரங்களைக் கேட்டனுப்புவது மட்டுமே அவர்கள் அலுவல் என்று தெரிந்தது. டியூட்டியில் சேர வந்தவன் மாற்றத்துக்கு சல்யூட் அடித்துக் கொண்டிருந்தான். அவரைக் கண்டு ஒரு புன்முறுவல்.

காலனியின் கேட்டுக்கு வெளியே வந்தார். காலனியை ஒட்டி பால் பூத் ஒன்றிருந்தது. விடியற்காலையில் பால் பாக்கெட்டுகளை அந்தந்த வீடுகளில் கடைக்காரப் பையன் வைத்து விட்டு வந்து விடுவான். இப்போது பிரட், பட்டர், முட்டை, மோர், தயிர் என சில்லறைப் பொருள்கள் விற்பனையும் கூடியிருந்தது. யாருக்குத்தான் வாழ்வில் வளம் காண ஆசை இல்லை? பையன் கடையின் ஷட்டரைத் திறந்து கொண்டிருந்தான். அவர் பார்க்கும் தினசரிக் காட்சிகள்தான். கண்ணன் தன் நடையைத் தொடர்ந்தார். பள்ளிக்கூடப் பேருந்துகள் நிற்கும் இடம். காலனியின் குழந்தைகளும் அங்கு வந்துதான் ஏறுவர். அங்கிருந்து கண்ணன் வீட்டுக்குத் திரும்பி விடுவார்.

'குட் மார்னிங் கண்ணன் சார்... '

ஸ்கூல் பிரின்சிபால் ஃபாதர் தாமஸ் நின்று கொண்டிருந்தார். பஸ்ஸில்தான் செல்வார். அங்கு வரும் அத்தனை குழந்தைகளும் ஏறிய பின்னரே கடைசியாக அவர் ஏறுவார். எளிமையின் வடிவம் !

'குட் மார்னிங் ஃபாதர்... '

முகத்தில் புன்னகையுடன் சொல்லிவிட்டு நடையை வீட்டுப் பக்கம் திருப்பினார். ஃபாதர் தாமஸ் மட்டுமே அவருக்கு அறிமுகமானவர். அதிதி, வருண் இருவருமே அவர் பள்ளியில் படித்தவர்கள். ஒருவழியாக நடையை முடித்து வீடு திரும்பினார்.

அன்று மாலை துரதிஷ்டவசமாக பாத்ரூமில் வழுக்கல். கண்ணனுக்கு கணுக்காலில் சுளுக்கியதுபோல் இருந்தது. வீட்டில் இல்லாத மருந்துகளோ, தைலங்களோ இல்லை. தடவிக்கொண்டு படுத்தார். பட்ட காலிலேயே அல்லவா படும். இரவு கெண்டைக்கால் தசைப் பிடிப்பு. நரம்புகள் இழுக்க உயிர் போகும்படி வலி. கவனமாக குப்புறப்படுத்த வண்ணமே இருந்தார். சில நிமிடங்களில் தானாகவே குறைந்தது.

நல்லவேளையாக ஃபிசியோதெரபிஸ்ட் செல்போன் நம்பர் இருந்தது. விடியற்காலையில் அழைத்தார். ரோஸி சின்னப் பெண்தான். ஆனால், வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிப்பாள்.

'நல்லவேளை அங்கிள்! ஃபிராக்ச்சர் இல்லை. கெண்டைக்கால் நரம்புப் பிரச்னை உங்களுக்கு முன்னாலயே வந்திருக்கு... வைட்டமின் டி செக் பண்ணிக்கலாம். ஒரு ரெண்டு வாரம் நடைப்பயிற்சியை நிறுத்தி வைங்க... தினசரி காலையில வந்து மசாஜ் பண்ணிவிடறேன்...'

சம்மதத்துக்கு கண்ணன் தலையசைத்தார். கடவுள் புண்ணியத்தில் இந்த மாதிரி எதிர்பாராத ஆடம்பரங்களுக்குச் செலவு செய்யவும் கண்ணனுக்கு பென்ஷன் தாராளமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு வாரம் தூக்கம், டி.வி. என்று கழிந்து கொண்டிருந்தது.

இரண்டாவது வாரத்தின் முதல் நாள். அழைப்பு மணி. கண்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. யாராக இருக்கும். மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தார். காய்கறிக் கடைப் பையன் நின்று கொண்டிருந்தான். கண்ணன் புருவத்தை உயர்த்தினார்.

'அய்யா! நேத்து ராத்திரியும் பார்த்தேன்... வீட்டில விளக்கு இருந்துது. நீங்க எங்கேயும் வெளிய போகலைன்னு தெரிஞ்சுது. உடம்பு சுகமில்லைங்களா..?'

'ஆமாம். கால் சுளுக்கு... அவ்வளவுதான்.'

'பழங்கள் ஏதாவது வேணுமா? சொன்னீங்கன்னா கொண்டு வந்து தரேன்...'

'இல்ல... இல்ல... இப்ப அவசியமில்லை!'

எப்படி இவனுக்குத் தெரியும்? கண்ணனுக்கு ஆச்சரியம். அவனிடம் மறுப்புத் தெரிவித்ததற்கு அவருக்குச் சங்கடமாக இருந்தது.

மறுநாள் பிரின்சிபால் தாமஸ் கதவைத் தட்டினார். அந்தக் காலனியில் வசித்தாலும் கண்ணன் வீட்டுக்கு அவர் வருவது இதுவே முதல் தடவை.

'கண்ணன் சார்! கால் எப்படி இருக்கு? காய்கறிக்

கடைப் பையன் சொன்னான். நீங்க வெளியூர் போகலைன்னும் தெரியும். ஒருவாரமா காலையில உங்களைப் பார்க்காம காலனியில நிறையப் பேருக்கு துக்கம்.'

'அது எப்படி ஃபாதர்?'

திகைத்தார். கண்ணனுக்குப் புரியவில்லை.

'கண்ணன் சார் ! சொன்னா நம்ப மாட்டீங்க ... ஆனா, அதுதான் உண்மை! இந்தக் காலனியிலிருந்து வெளியில பால் பூத் வரை நீங்க தான் பல நபர்களுக்கு ஒரு நடமாடுற கடியாரம். நேரம் தவற மாட்டீங்கன்னு அவங்க அத்தனை பேருக்கும் தெரியும். உங்களோட அந்த அந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டால காலனி பூராவும் உங்களுக்குத் தனி மரியாதை.

காய்கறிக் கடைக்காரன் உங்களைப் பார்த்துட்டுத்தான் சாக்கைப் பிரிக்கிறான். பால் பூத் பையன் கடை ஷட்டரைத் திறக்கிறான். நீங்க சீனியர் சிடிசன்னு செக்யூரிடி கார்டுகளுக்கும் தெரியும். நீங்க அவங்க கேட்டை தினசரி ஒரே நேரத்தில கடந்து போறீங்க... அதனால அவங்க காலையில கேட்ல ஷிஃப்ட் மாத்தறதைக் கூட உங்க நடையை ஒட்டி வச்சிருக்காங்க. நீங்க கண்ல தெரிஞ்சப்பறம்தான் வழக்கமான சம்பிரதாயங்களைத் தொடங்கறாங்க... உங்களோட நடைப்பயிற்சி நேரம் அவங்களோட வழக்கமான தினசரி வேலைகளோட ரொம்பவே ஒத்துப் போயிருக்கு. நீங்க வெளியூர்னு எங்கேயாவது போயிருந்தா கேட்ல இருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனாலதான் அக்கறையோட அவங்களும் எங்கிட்டச் சொல்லி பார்க்கச் சொன்னாங்க...'

இவங்க யார்கிட்டேயும் நான் நின்னு பேசினது கூட இல்ல. எப்படி ? கண்ணனுக்கு அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட நேரம் ஆனது. தாமஸ் அவரருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

'இதெல்லாம் ஒன்னுமேயில்ல கண்ணன் சார்! எங்க ஸ்கூல்ல ஐந்தாம் கிளாஸ்ல மீரான்னு ஒரு பெண் படிக்கிறாள். நம்ம காலனியிலதான் அவங்க வீடு இருக்கு. நீங்களும் பார்த்திருப்பீங்க. மீராவுக்கு ஸ்கூலுக்கு வரதில இஷ்டமேயில்லையாம். ஆனா, தினசரி உங்களைப் பார்த்ததும்தான் அம்மாவோட ஸ்கூல் பஸ் பிடிக்க ஓடி வரதை வழக்கமா வச்சிருக்கா. இரண்டு வருஷம் முன்னாடி அவங்க தாத்தா தவறிட்டாராம். உங்களுக்கு அவர் சாயல் இருக்கிறதா அந்தக் குழந்தைக்குத் தெரியுது. உங்களை அறியாம அந்தக் குழந்தைக்கும் நீங்க ஒரு உந்து விசையா இருக்கிறீங்க...'

கண்ணனுக்கு இப்போது நாக்கு மேல் புறம் ஒட்டிக்கொண்டது. பேச்சே எழவில்லை. தாமஸ் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கிளம்பி விட்டார்.

அடுத்த நாள் காலை கண்ணன் கதவைத் திறந்தபோது வாசலில் ஒரு உறை கிடைத்தது.

'தாத்தா! சீக்கிரம் குணமாகுங்கள்... என் பிரார்த்தனைகள்!' என்று விதவிதமான கலர் பென்சில்களால் ஒரு சின்ன படம். வயதானவர் ஒரு சிறு பெண்ணைப் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு போவது போல இருந்தது. கீழே 'மீரா, ஐந்தாம் வகுப்பு ஏ செக்ஷன்' என எழுதப்பட்டிருந்தது. கண்ணனுக்கு நெகிழ்ச்சி. ஆனால், சிரித்துக் கொண்டார்.

வீட்டில் அடைப்பட்டிருப்பதைவிட நடப்பது மேல் என்றுதான் இந்த அதிகாலைப் பயிற்சி. உயிர் மேல் கூட அவ்வளவு பற்று இருந்ததில்லை. ஆனால், என்னைச் சுற்றி இருக்கும் இந்த எளியவர்களுக்கும் இவர்களின் பழக்க வரிசைகளுக்கும் நான் என்னை அறியாமல் உதவிக் கொண்டிருக்கிறேன்.

என்னை அக்கம் பக்கத்தில் எவரும் சட்டை செய்யவில்லை என்பது என் எண்ணம். ஆனால், அவர்களை அவர்களது அலுவல்கள், கடமைகள் ஆகியவற்றில் லயிக்க வைக்க ஒரு மெல்லிய நூலாயிருக்கிறேன். சின்ன விஷயம்தான். ஆனால், மற்ற ஒரு சிலருக்கு அது பேருதவியாக அமைந்திருக்கிறது. நினைக்க நினைக்க கண்ணனுக்குப் பெருமிதம் பொங்கிக் கொண்டிருந்தது.

எழுபதைக் கடந்து விட்டால் இறப்பதற்குத்தான் காத்திருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. சொந்தங்கள், தொடர்புகள் குறைந்திருக்கலாம். ஆனால், சிறிய வட்டமே போதுமானது. புதுப்புது பொழுதுபோக்குகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அண்டையர்களுக்கு முடிந்த வரை உதவலாம். வாழ்க்கையில் இன்னும் இந்த மாதிரி சின்னஞ்சிறு புதையல்கள் கூடக் கிடைக்கலாம். பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே மறுநாள் விடியலையும் ஆவலுடன் எதிர் நோக்கலாம். கண்ணனுக்கு கணுக்கால் சுளுக்கும் கெண்டைக்கால் வலியும் திடீரென மறைந்தது போன்ற உணர்வு. அதிதிக்கும் வருணுக்கும் சொல்ல வேண்டும். கண்ணன் அன்று நிம்மதியாக உறங்கினார்.

மறுநாள் தன் காலணிகளை அணிந்து கொண்டு கண்ணன் அதே நேரத்தில் தயாரானார். தெம்பும் உற்சாகமும் பிடிப்பும் பெருகியிருந்தன. வழியில் கிராதியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு நின்றிருந்த மீராவுக்கு ஒரே உற்சாகம். ஓடி வந்து அவர் காலைத் தழுவிக் கொண்டாள்.

'தாத்தா... நீங்க சாமி கிட்ட போயிட்டீங்கன்னு முதல்ல நெனைச்சுட்டேன்...'

'அப்படிப் பேசக் கூடாது... அது தப்பு.'

மீராவின் தாயார் ஓடி வந்து அவளை சீர் செய்ய முயன்றார்.

'பரவாயில்லைம்மா... குழந்தைதானே... கள்ளம் கபடமில்லாம பேசுறா... வெள்ளை மனசு... நானே மீராவை பஸ் ஸ்டாப் வரைக்கும் அழைச்சிட்டுப் போறேன்...'

மீரா வாஞ்சையுடன் அவர் கரத்தைப் பற்றிக்கொண்டாள்.

'இப்பத்தான் எனக்கு வாழனுங்கற ஆசையே பெருகியிருக்கும்மா...' என்று மனதில் நினைத்தபடி கண்ணன் குழந்தையுடன் நடக்கலானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments