ஐயாறப்பர் ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐய்யாறப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்குச் சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அதனை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிக்குச் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் கொடி மங்கள வாத்யங்கள் இசையுடன் மூலவர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்கள். இதனை தொடர்ந்து. கொடி மரத்திற்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள்பொடி. இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால். தயிர். சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள். சிவகணங்கள் இசைக்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடி ஏற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வருகின்ற 27ம் தேதி நடைபெறுகிறது.
விழாவின் ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.