நாகப்பட்டினம்: சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோயில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோயிலில் முருகப்பெருமான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பரமுனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலில் கந்தசஷ்டி விழா, அக். 21 ஆம் தேதி, காப்பு கட்டுதல், ரஷாபந்தனம் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நாள்தோறும் சிங்காரவேலவர், ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கந்தசஷ்டியின் 5 ஆம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை காலை சிங்காரவேலவர் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
தேரை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்தனர். இரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.