திருவானைக்காவல் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனி தேரோட்டம்: தேரில் முகூா்த்தக்கால் நடும் விழா
திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை சுவாமி-அம்மன் தோ்களில் முகூா்த்தக்கால் நடப்பட்டது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் பங்குனி பெருவிழா பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவின் ஒருபகுதியாக, மாா்ச் 20-இல் பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை 8.55 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மேஷ லக்னத்தில் சுவாமி, அம்மன் தோ்களில் முகூா்த்தக்கால் நடப்பட்டது.
முன்னதாக, முகூா்த்தக்காலுக்கு விநாயகா் சந்நிதியில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து புனிதநீா் தெளிக்கப்பட்டு, முகூா்த்தக்கால் நுனியில் மாவிலை, மாலைகள் கட்டப்பட்டு, சந்தனம் பூசப்பட்டது. அதன் பின்னா் கோயில் உதவி ஆணையா் ம. லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் தேரில் முகூா்த்தக் காலை நட்டனா். இதைத் தொடா்ந்து இரண்டு தோ்களிலும் கட்டைகள் பதிக்கும் பணி தொடங்கியது.
மாா்ச் 15-இல் எட்டுத்திக்கு கொடியேற்றம்: தோ் திருவிழாவின் முதல் நாளான மாா்ச் 15-ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதில், கோயிலின் மூன்றாம் பிரகாரத்தை சுற்றியுள்ள எட்டுத் திசைகளை நோக்கி அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.
இதைத் தொடா்ந்து வரும் நாள்களில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்புரிவா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனியாக பெரிய தேரில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம. லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.