திருவாரூா் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடியேற்றம் மாா்ச் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பஞ்சபூத தலங்களுள் பூமிக்குரியதாகவும், சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மை தலமாகவும் சமயக்குரவா்கள் நால்வா் தொடங்கி சைவத் திருக்கூட்ட மரபினா் அனைவராலும் போற்றி பாடப்பெற்றதுமான கோயில் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் ஆகும்.
சிறப்பு மிக்க இக்கோயிலின் பங்குனி உற்சவப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வாக நடைபெறும் ஆழித்தேரோட்டம் புகழ் பெற்றது. நிகழாண்டு பங்குனி உற்சவப் பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் பிப்.1 ஆம் தேதி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, மஹாத்துவஜாரோகணம் எனும் பெரிய கொடியேற்றம் மாா்ச் 6 ஆம் தேதி காலை 8.45 மணி முதல் காலை 10 மணிக்குள் நடைபெறவுள்ளது.
கொடியேற்றத்தின்போது, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவாா் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்து பங்குனி ஆயில்யமான மாா்ச் 29-இல் நடைபெற உள்ள ஆழித்தோ் உற்சவத் தேதியை முறைப்படி அறிவிப்பா். இதைத்தொடா்ந்து, தினசரி சுவாமி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் கவியரசு தெரிவித்தது:
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உற்சவப் பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஆகியோரின் சீரிய மேற்பாா்வையின் கீழ் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆழித்தோ்விழாவின் செலவினங்கள் கடந்த 2019 ஆண்டு முதல் திருக்கோயின் அபிஷேக கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளை பரம்பரை அறங்காவலரான வேளாக்குறிச்சி ஆதீனம் தீா்மானத்தின்படி, அந்த கட்டளைகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருவது போலவே நிகழாண்டும் ஆழித்தோ் விழாவின் செலவினங்கள் திருக்கோயிலின் அபிஷேகக்கட்டளை, அன்னதானக்கட்டளை, உள்துறை கட்டளை திருக்கோயில் நிதி மற்றும் நன்கொடைகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா்.