முகப்பு
செய்திகள்

மகா ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி சுவாமிகள் குருபூஜை: திரளானோர் பங்கேற்பு!

மதுரையில் மகா ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் 12-ஆம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:19 PM
சற்குரு கணக்கம்பட்டி சுவாமிகள் குருபூஜை
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:13 PM

மதுரையில் மகா ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் 12-ஆம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பழனி அருகே கணக்கம்பட்டியில் வாழ்ந்த மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழனி சுவாமிகள் மதுரை வில்லாபுரம் பகுதியில் முதன் முதலாக மதுரை ஞானசபை என்ற அமைப்பை நிறுவினார். இங்கு தினசரி வருகை தந்து அருள் பாலித்ததோடு தனது அருள் நிறைந்த இடமாக மதுரை ஞானசபையை மாற்றி அமைத்தார். இங்குத் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து அருளாசி பெற்றனர். தமது வாழ்நாளில் பெரும்பகுதியை மதுரை ஞானசபையில் பக்தர்களோடு செலவழித்தார்.

பகவான் பழனி சுவாமிகளின் பெருமைமிகு போற்றுதலுக்குரிய இடமாக மதுரை சபை விளங்குகிறது. இங்கு பகவான் பழனிசுவாமிகளை நினைத்து வரும் பக்தர்களின் குறைகளைப் போக்கும் இடமாக உள்ளதாலும் , அறிவுக்கல்வி போதிக்கக்கூடிய ஞான சபையாக இருப்பதாலும் தினசரி திரளான பக்தர்கள் தரிசனம் செய்து, விளக்கேற்றி மனமுருகி வழிபட்டுச் செல்கின்றனர்.

Advertisement

இங்கு மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழனி சுவாமிகளின் 12- ஆம் ஆண்டு குருபூஜை விழா 27-02-26ல் துவங்கி 01-03-26ஆம் தேதி வரை மூன்று நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பகவானின் அருளாசிகளோடு மதுரை ஞானசபையில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை யாகசாலை பூஜையுடன் குருபூஜை தொடங்கியது. முன்னதாக 12-ஆம் ஆண்டு குருபூஜை என்பதால் மகா ஸ்ரீ சற்குரு பகவானுக்கு விபூதி, நெய், சந்தனம், மஞ்சள் பொடி, பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட 12 அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:16 PM

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகா ஸ்ரீ சற்குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பூப்பல்லக்கு தெற்கு வாசல், டிபிகே ரோடு, ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம் வழியாக வில்லாபுரம் ஞானசபையை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானைத் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

பிப்ரவரி 28ஆம் தேதி, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக காலையில் குருபூஜை சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் கொங்கு மண்டலம் பவளக்கொடி கும்மி கலைக்குழு சார்பில் வள்ளி கும்மி நடனம் நடைபெறுகின்றது. 01-03-2026 மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக காலையில் சற்குரு மகா ஸ்ரீ பகவானுக்குப் புண்ணிய தீர்த்தங்களால் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் பகவானின் திருவடிகளுக்கு நேரடியாக பூஜை செய்ய அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். குருபூஜை விழா நடைபெறும் மூன்று நாள்களும் தொடர் அன்னதானம் நடைபெற இருக்கின்றது.

வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் புரியும் பகவானுக்கு நன்றி சொல்லும் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் மதுரை ஞானசபையில் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பகவானின் 12-ஆம் ஆண்டு குருபூஜை என்பது வெகு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு பகவானின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

summary

The 12th annual Guru Puja of Maha Sri Satguru Palani Swamigal was held in Madurai today. Thousands of devotees participated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.