கரூர்: கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா எனும் நூதன ஸ்வர்ண விமான ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா ஸம்ப்ரோஷன திருக்குட நன்னீராட்டு விழா புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 24 ஆம் தேதி காலை 8 மணி அளவில் புண்யாயாஹம், மஹா பூர்ணாஹுதி பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 25ஆம் தேதி காலையில் கோ பூஜை, பிரவேச பலி, திவ்ய பிரபந்தம் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து, ஜன. 26 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் கோயிலில் அக்னி மதனம் யாக சாலை, மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளும் இரவில் தீபாராதனையும் நடைபெற்றன.
தொடர்ந்து 27 ஆம் தேதி காலை 8 மணி அளவில் புண்யாஹம், அஷ்டபந்தன பிரதிஷ்டை உக்த ஹோமம், மகா சாந்தி ஹோமம் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் எனும் மகா சம்ரோக்ஷணம் காலை 9. 45 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடுடன் கலசங்கள் மற்றும் புனித தீர்த்தம் கோபுர கலசங்கள் உள்ள பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி முன்னிலையில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கரூரைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்ததால் தமிழிலும் வேத மந்திரங்கள் ஓத குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, திமுகவினர் முன்னாள் எம்பி கே. சி. பழனிசாமி, நன்னியூர் ராஜேந்திரன், மணிராஜ், பரணி மணி, கரூர் முரளி, முனவர் ஜான், பல்லவி ராஜா, ராஜேந்திரன், எம். எஸ். கே. கருணாநிதி, கவிதா கணேசன், எஸ். பி. கனகராஜ், தாரணி சரவணன், வேர்ல்ட் ஸ்பாட் ராஜா, ஜோதிபாசு, விஜிஎஸ்.குமார், எம். பாண்டியன், வி.கே. வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்ளிட்ட கட்சியினரும் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் துளசி தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. ஜோஸ் தங்கையா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.