திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்!
திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இவ்வாண்டுக்கான பங்குனி தேர்த் திருவிழா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சூரிய சந்திரப் பிரபை வாகனம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி நாலாம் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு காலை சரியாக 8.05 மணிக்கு சுவாமியும் அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளினர். அப்போது அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் அதிர்வேட்டுடன் மேள தாளங்கள் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக இரு சிறிய தேர்களில் முருகனும், விநாயகரும்,சண்டிகேசுவரருடன் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் "நமச்சிவாயா " முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
நான்கு வீதிகளில் வலம் வரும் தேரோட்டம் மாலையில் நிறைவடையும். இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்ரல் 5 வரை நடைபெறவுள்ளது.