‘அச்சோ’ என்பது வியப்பு அல்லது இரக்கத்தைக் குறிக்கும் சொல். சிவபெருமான் தனக்குச் செய்த அருளை எண்ணி வியந்து / நெகிழ்ந்து போற்றும்வகையில் அமைந்த பாடல்கள் இவை.
தில்லையில் அருளப்பட்டவை. பன்னிரண்டு பாடல்களின் தொகுப்பு. சிலர் ஒன்பது பாடல்கள் என்றும் சொல்வார்கள்.
271
பாடலின்பம்
செத்துஇடமும் பிறந்துஇடமும் இனிச்சாவாதுஇருந்துஇடமும்
அத்தனையும் அறியாதார் அறியும்அறிவு எவ்அறிவோ?
ஒத்தநிலம், ஒத்தபொருள் ஒருபொருளாம் பெரும்பயனை
அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.
*
படிஅதனில் கிடந்துஇந்தப் பசு,பாசம் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திரிந்துஅடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றும் காணஒண்ணா
அடிகள் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.
*
பாதிஎனும் இரவுஉறங்கிப் பகல் எமக்கே இரைதேடி
வேதனையால் அகப்பட்டு வெந்துவிழக்கடவேனைச்
சாதி,குலம்,பிறப்புஅறுத்துச் சகம்அறிய எனைஆண்ட
ஆதி எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.
பொருளின்பம்
மனிதர்கள் இறந்த இடங்கள் எவை, பிறந்த இடங்கள் எவை, இனி இறக்காமல் இருக்கக்கூடிய இடங்கள் எவை என எதையும் தெரிந்துகொள்ளாதவர்கள்கூட அறிந்துகொள்ளக்கூடிய ஓர் அறிவு, பரம்பொருள்.
அத்தகைய சிவபெருமான், இந்த உலகங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை, இங்குள்ள பொருள்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்று எனக்கு உணர்த்தினான், ஈடு இணையற்ற அந்தப் பெருமான், நம் தந்தை எனக்குப் பெரும் பயனை அருளினான்.
அடடா! அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!
*
நான் இந்தப் பூமியில் கிடந்தேன், பசு, பாசம் என்கிற பற்றுகளைத் தவிர்த்துவிடுகிறவனைப்போலப் பாவனை செய்துகொண்டு அடியவர்களோடு திரிந்தேன், (ஆனால் எனக்குள் உண்மையான பக்தியுணர்வு இல்லை).
அப்படிப்பட்ட நான், கொடும் நரகச்சேற்றில் விழாதபடி சிவபெருமான் காத்தான்.
அடடா! திருமாலும் பிரம்மனும் வியர்வை சிந்தி முயன்றும் காண இயலாத அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!
*
நாளில் சரிபாதி இரவு. அந்த நேரத்திலே நான் உறங்கிக்கொண்டிருந்தேன், மீதமுள்ள பகல் நேரத்தில் உணவு தேடினேன், (எப்போதும் இறைவனைத் தேடவில்லை),
ஆகவே, நான் வேதனையில் அகப்பட்டு வாடினேன், வெந்துவிழவிருந்தேன்,
அந்த நேரத்தில், என்னுடைய சாதி, குலம், பிறப்பு என்கிற பண்புகளையெல்லாம் அறுத்து, இந்த உலகே அறியும்படி என்னை ஆண்டான் சிவபெருமான்.
அடடா! அந்த ஆதிமுதல்வனின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!
சொல்லின்பம்
ஒத்தநிலம்: ஒரேமாதிரியான நிலம்
அத்தன்: தந்தை
அருளியவாறு: அருளியதன்மை
ஆர்:யார்
அச்சோ: அடடா (இரக்கக்குறிப்பு)
படி: நிலம்
குடிமை: கூட்டம்
கும்பி: நரகச்சேறு
நீர்கான்றும்: வியர்வை சிந்தி முயன்றும்
காணஒண்ணா: காண இயலாத
இரை: உணவு
வெந்துவிழக்கடவேனை: வெந்துவிழவிருந்தவனை / வெந்துவிழ வேண்டியவனை
சகம்: ஜெகம் / உலகம்
ஆதி: முதல்வன்
(நிறைவடைந்தது)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.