பழங்காலத்தே இறைவன் அருளிய நான்கு வேதங்களைக் குறித்துத் தொடங்கும் பாடல்கள் இவை. ஆகவே, ‘பண்டுஆய நான்மறை’ என்று பெயர் அமைந்தது.
அந்தாதியாக அமைந்த இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. ஏழு பாடல்களின் தொகுப்பு.
பாடலின்பம்
வாழ்ந்தார்கள்ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும்
தாழ்ந்து உலகம்ஏத்தத் தகுவாரும், சூழ்ந்துஅமரர்
சென்றுஇறைஞ்சி ஏத்தும் திருஆர் பெருந்துறையை
நன்றுஇறைஞ்சி ஏத்தும் நமர்.
*
நண்ணிப் பெருந்துறையை நம்இடர்கள் போய்அகல
எண்ணிஎழு கோகழிக்குஅரசை, பண்ணின்
மொழியாளோ(டு) உத்தரகோசமங்கை மன்னிக்
கழியாது இருந்தவனைக் காண்.
பொருளின்பம்
தேவர்கள் சூழ்ந்துவந்து வணங்குகின்ற சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கிறவன் சிவபெருமான், அவனை வழிபடுகிற சிவனடியார்கள் இவ்வுலகில் நன்கு வாழ்வார்கள், தீயவினையை வீழ்த்துவார்கள், அவர்களுக்கு எல்லாத் தகுதிகளும் நிறைந்திருப்பதால், உலகம் அவர்களைப் போற்றி வணங்கும்.
*
என் நெஞ்சே, நம்முடைய துன்பங்கள் தொலைய வேண்டுமென்றால், நீ திருப்பெருந்துறைக்குச் செல், திருக்கோகழியை ஆளுகிற அரசன், சிவபெருமானை எண்ணு, இசைபோல் இனிமையான சொற்களைப் பேசுகிற உமையம்மையுடன் உத்தரகோசமங்கையில் எழுந்தருளி, நீங்காமல் அங்கேயே நிலைத்திருப்பவனைப் பார். அவனது கருணையை எண்ணி எழுச்சி கொள்.
சொல்லின்பம்
வாழ்ந்தார்கள் ஆவாரும்: வாழ்கிறவர்கள்
வல்வினையை மாய்ப்பாரும்: தீயவினையை வீழ்த்துகிறவர்கள்
தகுவார்: தகுதிகொண்டவர்கள்
அமரர்: தேவர்கள்
இறைஞ்சி: வணங்கி
ஏத்தும்: போற்றும்
திரு: சிறப்பு
நமர்: நம்மவர்கள்
நண்ணி: நெருங்கி
இடர்கள்: துன்பங்கள்
அகல: நீங்க
பண்ணின் மொழியாள்: இசைப்பாடல்போல இனிமையாகப் பேசுகிறவள் / உமையம்மை
மன்னி: நிலைத்து
கழியாது: நீங்காது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.