பழங்காலத்தே இறைவன் அருளிய நான்கு வேதங்களைக் குறித்துத் தொடங்கும் பாடல்கள் இவை. ஆகவே, ‘பண்டுஆய நான்மறை’ என்று பெயர் அமைந்தது.
அந்தாதியாக அமைந்த இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. ஏழு பாடல்களின் தொகுப்பு.
பாடலின்பம்
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம்எனப்
பேணும் அடியார் பிறப்புஅகலக் காணும்
பெரியானை, நெஞ்சே, பெருந்துறையில் என்றும்
பிரியானை வாய்ஆரப் பேசு.
*
பேசும் பொருளுக்கு இலக்கு,இதமாம், பேச்சுஇறந்த
மாசுஇல் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்புஅறுத்தேன், நல்ல
மருந்தின்அடி என்மனத்தே வைத்து.
பொருளின்பம்
கரணங்கள் எனப்படும் அறிதல் கருவிகள் அனைத்துமே பேரின்பத்தை மட்டும் அனுபவிக்கும்படி வாழ்கிறவர்கள் அடியார்கள், அவர்களுடைய பிறவிச்சுழல் அறுந்துபோகும்படி, அவர்கள் மீண்டும் பிறக்காதபடி அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்துகிற பெரியவன், சிவபெருமான்.
என் நெஞ்சே, திருப்பெருந்துறையில் எழுந்தருளி, என்றும் அங்கிருந்தபடி அருள்செய்யும் அந்தப் பெருமானை நீ வாயாரப் பேசு.
*
பேசப்படுகின்ற பொருள்கள் அனைத்தின் இலக்கு அவன்தான், அவற்றால் கிடைக்கும் நன்மையும் அவன்தான், ஆனால், அவனை வெறுமனே பேச்சில் நிறுத்திவிட இயலாது, சொற்களைக் கடந்த, குற்றமில்லாத மாணிக்கம் சிவபெருமான்,
அத்தகைய பெருமானை மாணிக்கம் போன்ற சொற்களால் நான் போற்றினேன், ‘திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே’ என்று பாடினேன், என்னுடைய பிறவிப்பிணிக்கு மருந்தான அந்தப் பெருமானை என் மனத்தில் வைத்தேன், அதனால், என்னுடைய பிறப்பு அறிந்துபோனது, பிறவாநிலை பெற்றேன்.
சொல்லின்பம்
கரணங்கள்: இந்திரியங்கள் / அறிதல் உறுப்புகள்
பேணும்: பாதுகாக்கும்
இலக்கு: லட்சியம்
இதம்: நன்மை
பேச்சு இறந்த: பேச்சைக் கடந்த
மாசு இல் மணி: குற்றமற்ற மாணிக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.