இறைவனை அறிவதற்கான ஆத்மசாதனங்களைத் ‘திருப்படை’ என்கிறார்கள். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு திருப்படை விவரிக்கப்பட்டுள்ளதாக விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தர்.
இப்பாடல்கள் தில்லையில் அருளப்பட்டவை. எட்டு பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.
பாடலின்பம்
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்குஅறும்ஆகாதே,
வானவரும் அறியா மலர்ப்பாதம் வணங்குதும்ஆகாதே,
கண்இலி காலம் அனைத்தினும் வந்த கலக்குஅறும்ஆகாதே,
காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடும்ஆகாதே,
பெண்,அலி,ஆண்என நாம்என வந்த பிணக்குஅறும்ஆகாதே,
பேர்அறியாத அநேக பவங்கள் பிழைத்தன ஆகாதே,
எண்இலிஆகிய சித்திகள் வந்துஎனை எய்துவதுஆகாதே,
என்னை உடைப்பெருமான் அருள்ஈசன் எழுந்துஅருளப்பெறிலே.
*
பொன்இயலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும்ஆகாதே,
பூமழை மாதவர் கைகள் குவித்து பொழிந்திடும்ஆகாதே,
மின்இயல் நுண்இடையார்கள் கருத்து வெளிப்படும்ஆகாதே,
வீணை முரன்றுஎழும் ஓசையில் இன்பம் மிகுந்திடும்ஆகாதே,
தன்அடியார்அடி என்தலைமீது தழைப்பனஆகாதே,
தான்அடியோம்உடனேஉய வந்து தலைப்படும்ஆகாதே,
இன்இயம் எங்கும் நிறைந்து இனிதுஆக இயம்பிடும்ஆகாதே,
என்னைமுன் ஆள்உடை ஈசன், என் அத்தன் எழுந்துஅருளப்பெறிலே.
பொருளின்பம்
என்னை அடிமையாகக் கொண்ட பெருமான், அருள்செய்யும் ஈசன், சிவபெருமான் என்முன்னே எழுந்தருளினால்...
மண்ணுலக வாழ்க்கையின் மீது மதிப்புவைக்கச் செய்து மயக்குகின்ற மாயையைப் பொருட்படுத்தமாட்டேன்,
தேவர்களும் அறியாத மலர்த் திருவடிகளைக் கண்டு வணங்குதல் நிகழாது, (சிவனின் திருவடிகள் தன்னிடமிருந்து வெளியே உள்ளவை என எண்ணுவதில்லை என்பதால், அதனை வணங்குதலும் நிகழாது),
அளக்கமுடியாத காலங்களுக்குத் தொடர்ந்து வருகிற குழப்பம் அறுபட்டுப்போகும்,
சிவன் மீது நேசம்வைத்து அடியவர்கள் மனம் களிப்படைவது நிகழாது, (சிவமயமாகும் நிலையில், சிவனைத் தனியே எண்ணி நேசம்வைக்க அவசியமில்லை),
பெண், அலி, ஆண் என மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் அற்றுப்போகும், (அனைவரும் சிவமயமாகிவிடுவதால்),
பெயரே தெரியாதபடி செய்துகொண்டிருந்த பாவங்கள் யாவும், பிழைகளாக அன்றி வெறும் கற்பனைகள் என ஒதுக்கப்படும்,
எண்ணற்ற சித்திகள் என்னை வந்து சேராது, (சிவமயமான நிலையில் சித்திகள் அவசியப்படாது),
*
என்னை முன்வந்து ஆளுகின்ற ஈசன், நம் தந்தை, சிவபெருமான் என் முன்னே எழுந்தருளினால்...
பொன்போல் திகழ்கிற சிவபெருமானின் திருமேனியில் வெண்ணீறு பொலிகிற அழகைப் பார்த்தல் நிகழாது, (சிவமயமாகிக் கலந்துவிடுவதால், அவரைக் காட்சிபூர்வமாகத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது),
பெரும் தவம் செய்கிறவர்கள் கைகளைக் குவித்து இறைவன் திருவடிகளில் மலர்களைப் பொழிதல் நிகழாது, (சிவமயமான நிலையில் இதுபோன்ற வழிபாடுகள் அவசியப்படாது),
மின்னல்போன்ற நுட்பமான இடையைக்கொண்ட பெண்களுடைய அழகு, அதன் உட்கருத்தான மகிழ்ச்சி ஆகியவை வெளிப்படாது, (சிவமயமான நிலையில் புற அழகில் மனம் செல்லாது),
வீணையிலிருந்து எழும் ஓசையிலே இன்பம் தோன்றாது, (சிவமயமான நிலையில் காதுகள் போன்ற கருவிகளுக்குச் சுகம் தேவைப்படாது),
சிவனடியார்களின் பாதங்களை வணங்கும் நிலை ஏற்படாது, (குரு, சிஷ்யன் என்கிற மாறுபாடுகள் இருக்காது),
அடியவர்களாகிய நம்மைக் காப்பதற்காக அவன் வந்து காட்சி தருகிறான் என்ற எண்ணம் ஏற்படாது, (சிவமயமான நிலையில் இறைவன் வேறு, பக்தன் வேறு அல்ல),
இனிய வாத்தியங்கள் எங்கும் நிறைந்து இன்னிசை ஒலிக்காது, (சிவமயமான நிலையில் காதுகள் போன்ற கருவிகளுக்குச் சுகம் தேவைப்படாது),
சொல்லின்பம்
மயக்கு அறும்: மயக்கம் அறுந்துபோகும்
வானவர்: தேவர்
கண் இலி காலம்: அளக்க இயலாத காலம்
கலக்கு: கலக்கம் / குழப்பம்
பிணக்கு: மாறுபாடு
பவங்கள்: பாவங்கள்
பிழைத்தன: பிழையாகின
எண் இலி: எண்ண இயலாத
எய்துவது: அடைவது
என்னை உடைப் பெருமான்: என்னை அடிமையாகக்கொண்ட பெருமான்
பொன் இயலும் திருமேனி: பொன்போன்ற திருமேனி
பொலிந்திடும்: அழகுநிறைந்து விளங்கும்
மாதவர்: பெரிய தவம் செய்கிறவர்கள்
மின் இயல் நுண் இடையார்கள்: மின்னல்போன்ற நுட்பமான இடையைக் கொண்ட பெண்கள்
வீணை முரன்று எழும் ஓசை: வீணையிலிருந்து வரும் இசை
தழைப்பன: (அருளை) வளர்த்தல்
உய: பிழைக்க
தலைப்படும்: தோன்றும் / எதிர்ப்படும்
இன் இயம்: இனிய வாத்தியங்கள்
இயம்பிடும்: ஓசை எழுப்பும்
ஆள் உடை ஈசன்: அடிமையாகக் கொண்ட இறைவன்
அத்தன்: தந்தை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.