இறைவனை அறிவதற்கான ஆத்மசாதனங்களைத் ‘திருப்படை’ என்கிறார்கள். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு திருப்படை விவரிக்கப்பட்டுள்ளதாக விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தர்.
இப்பாடல்கள் தில்லையில் அருளப்பட்டவை. எட்டு பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.
பாடலின்பம்
சொல்இயலாதுஎழு தூமணி ஓசை சுவைதரும்ஆகாதே,
துண்என என்உளம் மன்னிய சோதி தொடர்ந்துஎழும்ஆகாதே,
பல்இயல்புஆய பரப்புஅறவந்த பராபரம்ஆகாதே,
பண்டுஅறியாத பர அனுபவங்கள் பரந்துஎழும்ஆகாதே,
வில்இயல் நல்நுதலார்மயல் இன்று விளைந்திடும்ஆகாதே,
விண்ணவரும்அறியாத விழுப்பொருள் இப்பொருள்ஆகாதே,
எல்லைஇலாதன, எண்குணம்ஆனவை எய்திடும்ஆகாதே,
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்துஅருளப்பெறிலே,
*
சங்கு திரண்டு முரன்றுஎழும்ஓசை தழைப்பனஆகாதே,
சாதிவிடாத குணங்கள் நம்மோடு சலித்திடும்ஆகாதே,
அங்கு இதுநன்று, இதுநன்று எனும்மாயை அடங்கிடும்ஆகாதே,
ஆசைஎலாம் அடியார் அடியோம்எனும் அத்தனைஆகாதே,
செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பனஆகாதே,
சீர்அடியார்கள் சிவ அனுபவங்கள் தெரிந்திடும்ஆகாதே,
எங்கும் நிறைந்து அமுதுஊறு பரம்சுடர் எய்துவதுஆகாதே,
ஈறுஅறியா மறையோன் எனைஆள எழுந்துஅருளப்பெறிலே,
பொருளின்பம்
சந்திரனைச் சடையில் தாங்கிய மாணிக்கம், சிவபெருமான் நம்மை ஆள்வதற்காக எழுந்தருளி வந்தால்...
சொற்களைப் பயன்படுத்தாமல் எழுகிற தூய மணியோசை சுவை தராது, (சிவமயமான நிலையில் இவற்றில் ஆர்வம் இருக்காது),
திடீரென்று என் மனத்தில் தென்படுகிற ஒளி தொடர்ந்து எழாது, (சிவமயமான நிலை அத்தகைய ஒளிகளின் நன்மையைக் கடந்தது),
பலவிதமான மனச்சலனங்கள் ஒடுங்கும்போது தோன்றும் பராபர நிலை தென்படாது, (சிவமயமான நிலை அதனைக் கடந்தது),
இதற்குமுன் அறியாத தெய்விக அனுபவங்கள் மனத்தில் நிறைந்து எழாது, (அத்தகைய அனுபவங்கள் சிவமயமான நிலையில் தோன்றாது),
வில்லின் தன்மை கொண்ட நல்ல நெற்றியை உடைய பெண்களினால் ஏற்படும் மயக்கம் நிகழாது,
தேவர்களாலும் அறிய இயலாத உயர்ந்த பொருளே எல்லாமாகத் திகழும்,
எல்லையற்ற எட்டு குணங்களைக் கொண்ட பெருமானை எய்துதல் நிகழாது, (சிவமயமான நிலை, இவற்றைக் கடந்தது),
*
முடிவில்லாத தன்மைகொண்ட மறையோன், சிவபெருமான் நம்மை ஆள எழுந்தருளினால்...
சங்குகள் திரண்டு முழங்கும் ஓசை எங்கும் ஒலிக்காது, (சிவமயமான நிலையில் இதுபோன்ற புனித ஒலிகளும் ஒலியற்ற நிலையை அடைந்துவிடுகின்றன),
மூன்று குணங்களும், அவற்றால் உண்டாகும் வகைமாற்றங்களும் இருக்காது,
இது நன்மை, இது நன்மை என்று தேடிச் செய்கிற மாயை அங்கே அடங்கிவிடும்,
அடியவர்களுக்கு அடியவராக இருக்கிற ஆசை ஏற்படாது, (சிவமயமான நிலையில் ஆசைகளே இராது),
சிவந்த கயல்மீன்களைப்போல் ஒளிரும் கண்களைக் கொண்ட பெண்களின் (ஜீவாத்மாக்களின்) மனம் களிக்காது, (சிவமயமான நிலையில் வெளி மகிழ்ச்சிகள் இல்லை),
சிறந்த அடியவர்களின் சிவ அனுபவங்கள் இப்படிப்பட்டவை என்பதை அறிய இயலாது, (அந்த வித்தியாசங்கள் இல்லாத சிவமயமான நிலையில் ஒன்றிவிடுவதால்),
எங்கும் நிறைந்து அமுதமாக ஊறுகின்ற பரஞ்சுடரை அடைவது நிகழாது, (சிவமயமான நிலையானது, பரஞ்சுடரைத் தனித்துக் காணும் நிலைக்கு அப்பாற்பட்டது),
சொல்லின்பம்
சொல் இயலாது எழு தூமணி ஓசை: சொற்களைப் பயன்படுத்தாமல் எழுகிற தூய மணியோசை
துண்என: திடீரென
உளம் மன்னிய: உள்ளத்தில் தோன்றிய
பல் இயல்பு: பல இயல்பு
பரப்பு அற: சலனம் கெடும்படி
பராபரம்: உயர்ந்த பொருள்
பண்டு அறியாத பர அனுபவங்கள்: இதற்குமுன் அறியாத தெய்விக அனுபவங்கள்
நல் நுதலார்: நல்ல நெற்றியைக் கொண்டவர்கள்
மயல்: மையல் / மயக்கம்
விண்ணவர்: தேவர்
விழுப்பொருள்: உயர்ந்த பொருள்
எய்திடும்: அடைந்திடும்
இந்து சிகாமணி: சந்திரனைச் சடையிலே சூடிய மாணிக்கம் / சிவபெருமான்
முரன்று எழும் ஓசை: முழங்கி ஏற்படும் இசை
சாதி: வகைபாடு
செங்கயல் ஒண்கண் மடைந்தையர்: சிவந்த கயல்மீன் போன்ற ஒளிவீசும் கண்களைக் கொண்ட பெண்கள்
சிந்தை; சிந்தனை
சீர் அடியார்கள்: சிறந்த அடியவர்கள்
பரஞ்சுடர்: மேலான சுடர்
எய்துவது: அடைவது
ஈறு அறியா மறையோன்: முடிவில்லாத மறையோன் / சிவபெருமான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.