சிவனை வணங்குவோர் அனுபவிக்கும் ஆனந்தத்தின் இயல்பை விவரிக்கும் பாடல்கள் இவை.
தில்லையில் அருளப்பட்டவை. மொத்தம் ஏழு பாடல்களின் தொகுப்பு.
264
பாடலின்பம்
மின்நேர்அனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன்உலகம்,
பொன்நேர்அனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரர்எல்லாம்,
கல்நேர்அனைய மனம் கடையாய்க் கழிப்புண்டு அவலம் கடல்வீழ்ந்த
என்நேர்அனையேன் இனிஉன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே.
*
என்னால் அறியாப் பதம்தந்தாய், யான்அதுஅறியாதே கெட்டேன்,
உன்னால் ஒன்றும் குறைவுஇல்லை, உடையாய், அடிமைக்குஆர்என்பேன்,
பல்நாள் உன்னைப் பணிந்துஏத்தும் பழைய அடியரொடும்கூடா(து)
என்நாயகமே பிற்பட்டு இங்குஇருந்தேன் நோய்க்கு விருந்தாயே.
*
சீலம்இன்றி நோன்புஇன்றிச் செறிவேஇன்றி அறிவுஇன்றித்
தோலின் பாவைக் கூத்துஆட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும்காட்டி வழிகாட்டி வாரா உலக நெறிஏறக்
கோலம்காட்டு ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.
பொருளின்பம்
மின்னலைப் போன்ற உன்னுடைய பூங்கழல்களை அடைந்தவர்கள் இந்த உலகின் மயக்கங்களைக் கடந்துவிடுகிறார்கள்,
விண்ணுலகில் உள்ள தேவர்களோ, பொன் போன்ற மலர்களைத் தூவி உன்னைப் போற்றுகிறார்கள்,
நான் கல்போன்ற மனத்துடன் இங்கே வாழ்கிறேன், அதனால் நல்லவர்கள் என்னைத் தள்ளிவைத்துவிடுகிறார்கள், துன்பக்கடலில் வீழ்கிறேன்,
என்னைப் போன்ற ஒருவன் இனி உன்னைச் சேர்வது எப்படி? சிவபெருமானே, அதைச் சொல்வாய்!
*
என்னால் அறிந்துகொள்ள இயலாத அரிய அனுபவத்தை, ஞான நிலையை நீ எனக்கு வழங்கினாய், அதைப் புரிந்துகொள்ளாமல் நான் கெட்டேன்,
சிவபெருமானே, உன்னால் எனக்கு எந்தக் குறையும் இல்லை, என்னை அடிமையாகக் கொண்டவனே, உன்னையன்றி வேறு யார் என்னை ஏற்றுக்கொள்வார்கள்?
பல நாள்களாக உன்னைப் பணிந்து வணங்குகிற பழைய சிவனடியார்களோடும் நான் சேரவில்லை, பின்தங்கி இங்கேயே இருந்துவிட்டேன், நோய்க்கு விருந்தாக வாழ்கிறேன்,
என் நாயகமே, சிவபெருமானே, அருள்செய்வாய்.
*
ஒழுக்கமில்லாமல், நோன்புகளை மேற்கொள்ளாமல், அடக்ககுணம் இல்லாமல், அறிவில்லாமல், வெறும் தோல் பொம்மை ஆட்டத்தைப்போல் சுழன்று விழுந்து கிடக்கிறேன்,
நான் கொண்டுள்ள மயக்கத்தை எனக்குச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து மீண்டு தன்னை அடைகிற வழியைக் காட்டி, மீண்டும் இவ்வுலகில் பிறக்காத மோட்சநிலையை அடைவதற்கான வழியைக் காட்டி, தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டினான் சிவபெருமான், என்னை ஆண்டுகொண்டான்,
அத்தகைய பெருமானை, கொடியவனான நான் என்று சேர்வேன்?
சொல்லின்பம்
மின்நேர்அனைய: மின்னலைப் போன்ற
பூங்கழல்கள்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் மலர்த் திருவடிகளைக் குறிக்கிறது
வியன் உலகம்: பெரிய உலகம்
போற்றாநின்றார்: போற்றிநின்றார்
அமரர்: தேவர்
கடையாய்: கடைசியாய் / இழிந்த நிலையில்
கழிப்புண்டு: தள்ளப்பட்டு / கழிக்கப்பட்டு
அவலக் கடல்: துன்பக்கடல்
கூடும்வண்ணம் இயம்பாயே: சேர்வது எப்படி என்று சொல்வாய்
பதம்: நிலை / பதவி
உடையாய்: அடிமையாக உடையவனே
ஆர் என்பேன்: உன்னைத் தவிர எனக்கு வேறு யார் என்று சொல்வேன்
ஏத்தும்: போற்றும்
நாயகமே: தலைவனே
பிற்பட்டு: பின்தங்கி
சீலம்: ஒழுக்கம்
செறிவு: அடக்கம்
தோலின் பாவை: தோல் பொம்மை
மால்: மயக்கம்
வாரா உலகம்: மீண்டும் பிறக்காத மோட்ச உலகம்
கோலம்: திருக்கோலம் / அழகு
ஆண்டானை: என்னை ஆள்பவனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.