தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 414

ஹரி கிருஷ்ணன்

அண்மையில் நம்முடைய 366ம் தவணையில் ‘வங்கார மார்பிலணி’ என்ற பாடலில், “வளி நாயகியை யின்பான தேனிரச மார்முலைவி டாதகர மணிமார்பா” என்ற அடியை (367ம் தவணையில்) விளக்கும்போது, இதேபோன்ற ஒரு குறிப்பு ‘தத்தைமயில்’ என்ற பாடலிலும் பயில்கிறது.  அந்தப் பாடலைப் பேசும்போது இதன் பொருளை விரிப்போம் என்று குறிப்பிட்டிருந்தோம்.  அந்தப் பாடலைத்தான் இன்று காண்கிறோம்.  இது புலியூர் எனப்படும் சிதம்பரம் தலத்துக்கான பாடல்.

இந்தப் பாடலின் நான்காமடியில் ‘எனது ஆயி வளிநாயகியை சுத்தஅணையூடு வடமா முலை விடாதகர மணிமார்பா’—‘என் தாயான வள்ளி நாயகியின் மார்பை விடாத கரத்தவனே’—என்று பாடுகிறார்.முருகனின் திருக்கரம் எப்போதும் வேலையும் வள்ளியம்மையின் மார்பையும் விடாது பிடித்திருக்கும் என்பது பொருள்.  வள்ளியம்மையின் மார்பு என்பது ‘உண்மை அடியார்களின் பக்குவ நிலைக்கு’க் குறியீடாக விளங்குவது என்று தணிகைமணி குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் விளக்குகிறார்கள்.  அந்தக் கரம், ‘மெய்யடியார்களுடைய பக்குவநிலை எப்போது விடாமல் விரும்பி அணைத்துக் காக்கும் கரம்’ என்று அவர் குறித்திருக்கிறார்.  ‘ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்’பது அடியார் கடன்.

அடிக்கு ஒற்றொழித்து 52 எழுத்துகள்; ஒவ்வொரு 1, 5, 9 சீர்களிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; ஒவ்வொரு இரண்டாம், மூன்றாம் நான்காம் சீரிலும் முதெலெழுத்து நெடில் என்ற அமைப்பைக் கொண்டது இந்தப் பாடல்.

தத்ததன தானதன தானதன தானதன
      தத்ததன தானதன தானதன தானதன
      தத்ததன தானதன தானதன தானதன                 தனதான

தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
         யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
         சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி  -  பிடிபோல
      தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
         யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
         தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ   -    ருடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
         கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
      வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி -  யுடைசோர
      மச்சவிழி பூசலிட வாய்புலிய லாசமுட
         னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
         வைத்தடகு தேடுபொருள் சூரைகொளு வார்கலவி- செயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
         நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
         தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை   -   யருள்பாலா
      சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
         ரத்தமதி லேறிவிளை யாடியசு ராரைவிழ
      சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட -  மிடுவோனே
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
         சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
         சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர  -  மணிமார்பா
      சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
         சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
         சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர் புகழ்  -  பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT