தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 869

ஹரி கிருஷ்ணன்

பதச் சேதம்

சொற் பொருள்

வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே

 

வரி சேர்ந்திடு: செவ்வரி படர்ந்திருக்கின்ற; உழை: மான்; நீலம்: நீலோத்பலம்—கருங்குவளை; வடு: மாவடு; வாங்கிடு வாள்: வீசத் தயாராய் இருக்கின்ற வாள்;

வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள மாந் தளிர் போல் நிறமாகிய வடிவாலே

 

இள மா முகை: இள மொட்டைப் போன்ற அழகிய;

இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீது உற இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே

 

பாயல்: படுக்கை; குழல் நீழலில்: கூந்தலின் ஒளியாலும் (நீழல்: ஒளியென்றும் பொருள்);

எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே

 

 

கரி வா(வு)ம் பரி தேர் திரள் சேனையுடன் ஆம் துரியோதனன் ஆதிகள் களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி

 

கரி: யானை; வாவும் பரி: தாவும் குதிரை; பாரதம் அதில் ஏறி: பாரதப் போர்க்களத்திலே ஈடுபட்டு;

கன பாண்டவர் தேர் தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன்

 

கன பாண்டவர்: பெருமை வாய்ந்த பாண்டவர்; எழுபரி: ஏழு குதிரைகளை; தூண்டிய: நடத்திய; நேமியனாம்: சக்ராயுதத்தைக் கொண்டவனாம்;

திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக

 

திரை: அலை; வாரியும்: கடல் (மீதும்); தெசமாம் சிர: பத்துத் தலைகளின் (மீதும்);

சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு திரு வேங்கட மா மலை மேவிய பெருமாளே.

 

சிலை வாங்கிய: வில்லை வளைத்த;

வரிசேர்ந்திடு சேல்கயலோவெனும் உழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே... செவ்வரிகள் படர்ந்திருக்கின்ற சேல் மீனோ, கயல் மீனோ என்றும்; மானோ என்றும்; பெரிய கடலோ என்றும்; கருங்குவளை மலரோ என்றும்; மாவடுவோ என்றும்; உருவப்பட்ட வாளோ என்றும் (நினைக்கச் செய்கின்ற) கண்களை உடைய பெண்கள் விரித்திருக்கிற வலையாலும்;

வளர்கோங்கிள மாமுகை யாகிய தனவாஞ்சையிலே முக மாயையில் வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே... வளர்வதும்; கோங்கு மரத்தின் இளம் மொட்டைப் போன்றதுமான தனங்களின் மீது ஏற்பட்ட ஆசையாலும்; செழுமையான மாந்தளிரைப் போன்ற மேனி வண்ணத்தாலும் வடிவத்தாலும்;

இருள்போன்றிடு வார்குழல் நீழலில் மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே... இருட்டைப் போல கறுத்திருக்கும் நீண்ட கூந்தலுடைய ஒளியாலும்; மயக்கத்தை ஏற்படுத்தும் படுக்கையின் மீது பொருந்தி; இனிய கோவைக் கனியைப் போன்ற இதழ்களில் ஊறுகின்ற அமுதத்தைப் பருகாதபடியும்;

எனதாந் தனதானவை போயற மலமாங் கடு மோகவிகாரமு மிவைநீங்கிடவே இரு தாளினை யருள்வாயே... ‘என்னுடையது’ ‘தன்னுடையது’ என்ற உணர்வுகள் அற்றுப் போகவும்; அசுத்தமான மோக விகாரங்களெல்லாம் அற்றுப் போகவும் உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

கரிவாம்பரி தேர்திரள் சேனையும் உடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி... யானைப் படையையும்; தாவிப் பாய்கின்ற குதிரைப் படையையும்; தேர்ப் படையையும்; திரண்ட காலாட் படையையும் கொண்டிருக்கும் துரியோதனாதியர் போர்க்களத்தில் மாண்டொழிய; ஒப்பற்ற பாரதப் போர்க்களத்துக்குச் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே எழுபரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமியனாம் அரி ரகுராமன்... பெருமை நிறைந்த பாண்டவ(னான அர்ஜுனனுடைய) தேரிலே (பூட்டப்பட்ட) ஏழு குதிரைகளை வழிநடத்திய சாரதியும்; ஒளிமிகுந்த சக்ராயுதத்தைக் கையில் தரித்தவனுமான ஹரி, ரகுராமனாகிய திருமாலும்,

திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்குமராமரம் ஏழொடு தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக... அலைகள் மிகுந்து ஒலிக்கின்ற கடலையும்; வாலியையம்; ஓங்கி உயர்ந்த ஏழு மராமரங்களையும்; ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடிசெய்யும்படியாக,

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.... வில்லை வளைத்த நாராயணனுடைய (ராமனுடைய) மருமகனாகிய குகனே!  சோலைகள் சூழ்ந்திருக்கும் திருவேங்கடமாகிய மாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வரான

சுருக்க உரை

யானை, தாவுகின்ற குதிரை, தேர், திரண்ட காலாட்படை என்று சதுரங்க சைனியங்களையும் கொண்டிருந்த துரியோதனன் முதலானோர் போர்க்களத்திலே வந்து இறந்துபோகும்படியாக ஒரு பாரத யுத்தத்தில் ஈடுபட்டு; பெருமைவாய்ந்த பாண்டவனுடைய (அர்ஜுனனுடைய) தேரில் பூட்டப்பட்ட ஏழு குதிரைகளையும் செலுத்திய சாரதி; ஒளிவீசும் சக்கரத்தைக் கையில் கொண்டிருக்கும் ஹரி; ரகுராமன்; ஒலிக்கின்ற கடலையும் வாலி என்னும் குரங்கரசனையும் உயர்ந்து ஓங்கி நின்ற ஏழு மராமரங்களையும்; ராவணனுடைய முடி தரித்த பத்துத் தலைகளையும் பொடியாக்கும்படி வில்லை வளைத்த நாராயணனுடைய மருமகனான குகனே!  சோலைகள் சூழ்ந்திருக்கின்ற திருவேங்கடத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வரிகள் ஓடுகின்ற சேல் மீனோ, கயல் மீனோ என்று மயக்கம் தருவதும்; மான் போன்றதும் கடலைப் போன்றதும்; நீலோத்பலத்தையும் கடலையும் வீசத் தயாராய் இருக்கும் வாளையும் போன்ற கண்களை உடைய மாதர்கள் வீசுகின்ற வலையில் அகப்பட்டும்; வளர்வதும் கோங்கின் இளமொட்டைப் போன்றதுமான மார்பகத்தின் மீது எழும் ஆசையாலும்; செழிப்பான மாந்தளிரைப் போன்ற மேனி நிறத்தாலும்; இருள்போன்ற நீண்ட கூந்தலாலும் மோகமடைந்து பாயிலே கிடந்து கொவ்வைக் கனியைப் போன்ற உதடுகளில் ஊறும் சுவையைப் பருகாமலிருக்கவும்; ‘எனது’, ‘தனது’ என்ற உணர்வுகள் என்னை விட்டு அகலவும்; காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மும்மலங்களின் சேஷ்டைகள் விலகும்படியாகவும் உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT