கவிதைமணி

பறவை என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1

கவிதைமணி

பறவை!

பறவையே உன் கூட்டில் தங்க ஓர் இடம் தா,
ஓர்நாளாவது விரைந்து தூங்கி எழுவேன்!

பறவையே உன் சிறகை ஓர் நாள் கடன் தா!
பரந்த வானில் சுதந்திர காற்றை ஓர்நாள் சுவாசிப்பேன்!

பறவையே உன் தனித்தன்மையை ஓர் கனம் கற்றுத்தா!
தோல்வி கண்டு துவண்டுவிடாமல் ஒவ்வொரு நாளும் உழைப்பேன்!

பறவையே உன் சினேகப்பார்வையை சில நேரம் தா!
பேசப் பயப்படும் மனிதர்களிடம் நம்பிக்கையான நட்பை வளர்ப்பேன்! 

பறவையே உன் குரலை ஓர்நாள் கடன் தா!
சண்டையிட்ட காதலியை பாடிக் கவிழ்ப்பேன்! 

உன் போல் இருந்தால் மனிதனுக்கு ஏது துன்பம்?
படைத்த நோக்கத்திற்காக வாழ்ந்தால் அதுவே மனிதற்கு இன்பம்...

-இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

கூண்டிலிருந்து வெளியே வந்த பறவை 
முன்னால்  மண்டியிட்டான் மனிதன் 
மன்னிப்பு கேட்க! ... நீ இப்போ 
ஒரு சுதந்திரப் பறவை என்றான் !
நான் எப்போதுமே சுதந்திரப் பறவைதான் 
எனக்கு எல்லைக் கோடு என்று எதுவும் 
இல்லை விண்ணில் பறக்க !
உன்னைப் போல் எனக்கு பாஸ்போர்ட் 
விசா என்று எதுவும் தேவை இல்லை 
எனக்கு எந்த மண்ணிலும் தரை இறங்க ! 
சொன்னது பறவை !
இப்போதும் மனிதன் குனிந்தான் 
மண்ணில் தன் முகம் பதித்தான் 
வெட்கத்துடன் !

- கந்தசாமி நடராஜன் 

**

மண்ணில் பிறந்து, 
விண்ணில் பறந்து
பாடுமே, தினம் ஆடுமே
ஆனந்தக் கூத்தாடுமே
என் பறவை ஓடுமே, 
ஊர் தாண்டுமே!
ஒற்றுமையை 
நிலைநாட்டுமே
என் பறவை,நளினமே 
அது நடுங்குதே!
கதிர்வீச்சால் அது மடியுதே!
படைத்தது அந்த பகவான்
எனில் இறப்பு மட்டும்  
ஏன் மனிதன் மூலம்!!
செயற்கையாக வாழும் மனிதா!
உன்னை இயற்கை 
அன்னை ஈன்று எடுத்தது.  
கைப்பசேி கோபுரத்தால் 
சிட்டுக் குருவியை கொன்றாய் 
குருவியை கொன்று 
உன்னை நீ கொல்கிறாய்
ஓர் இனத்தை அழிப்பது 
உனக்கு புதிதல்ல  மனிதா
உன் இனமே உன்னை 
அழிக்கப் போகிறது  முடிவில்...

- மு. செந்தில்குமார், ஓமன்

**

கோடிக்கணக்கில் வங்கிப்பண(ழ)த்தை  உறிஞ்சுவார் --
ஆடி மகிழும் விளையாட்டிலும்
பேடி போல சூது கலப்பார்—
நாடிக்குவித்த கருப்புச்செல்வம்
மூடி மறைத்து பதுக்கி வைப்பார் –
தேடிக்கொண்டே இருப்பார் இவரை,
சூடிய சிறகுடன் பறப்பார் பல நாடுகள் –
ஓடிய பறவைகளுக்கு புகலிடமாய்
கருப்பு ஏரியில் யார் தான் கட்டி வைத்தார்
செயற்கையாய் ஒரு வேடந்தாங்கல் !!

- கவிஞர் டாக்டர். எஸ்.பார்த்தசாரதி

**
எண்ணச் சிறகுகள்
எங்கெங்கோ பறந்து
பருந்தைப் போன்ற
பார்வையில்
குயிலைப் போன்ற
குரலினில்
ஆடும் மயிலின்
அழகினில்
மேகக் கூட்ட 
மறைவினில்
இடித்து இடியாய்
ஒலி வடிவினில்
பாடித் திரிந்து
நிலங்கள் கடந்து
உறவை வளர்க்கும்
வேடந்தாங்கல் 
கருத்தரங்கக் கூட்டத்திலே
விருந்தும் மருந்தும்
பேசி விட்டு
வீணாய் இல்லா மனிதனாய்,
வென்றிடுவோம் 
உயர்ந்தவர் − நாம்
என்று, வார்த்தை இல்லாமல்
வாழ்க்கையில்......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

சிறகொடிந்து
தத்தளித்த என்னை
சிரித்து சிரித்து
ஏளனத்தில் தள்ளி
ஏகாந்த தருணத்தில்
கண்ணீரை வடிக்க வைப்பதோ
கடவுள் படைத்த
இரக்கமுள்ள இறக்கையுள்ள
நீவிர்....

ஆகாய படிகளில்
அலைந்தலைந்து
ஏறும் நீவிர்,
ஊனத்தைத் தேற்றினால்
இறைவனே தூக்குவான்
ஔவை போல 
புரிக நாம்
மானுடத்திற்குக்
கற்றுத் தருவோம்
ஒற்றுமையின் வலிமையை 
வேற்றுமையின் மடமையை.......

- சுழிகை ப.வீரக்குமார்

**

ஓகம் என்னும் யோகக் கலையை ஓர்ந்தே அறிந்த உணர்வாளர் !
ஆகச் சிறந்த தமிழர் என்போர் அவரே உலகின் முதலாளர் !

தக்கை யாக உடலை ஆக்கும் தன்மை அறிந்த தகவாளர் !
ஒக்கும் வகையில் உயிரை உடலை உணர்ந்தே பிரிக்கும் உயர்வாளர் !

நீரின் மேலே நடக்கும் கலையை நிகழ்த்திக் காட்டும் நெறியாளர் !
நேரின் உடலை நிலத்தில் உயர்த்தி நிலையாய் நிறுத்தும் பொறியாளர் !

கூடு விட்டுக் கூடு பாயும் கூர்மை அறிவு குறிப்பாளர் !
நாடு விட்டு நாடெல் லாமும் நாடும் கலைக்கே உயிராளர் !

நினைத்த நேரம் நினைத்த படியே நிகழ்த்திக் காட்டும் நேராளர் !
இணையே இல்லா தமிழர் நெறியால் இந்த உலகின் எழிலாளர் !

சிறப்பெல் லாமும் சிறக்கப் பறக்கும் சிந்தை பெற்ற சிறகாளர் !
அறமும் பொருளும் இன்பம் அறிந்த அகந்தை இல்லா அறனாளர் !

பரந்த எண்ணம் பரந்த பார்வை பார்க்கும் அரிய பண்பாளர் !
உரமார் எண்ணம் உலகம் ஊன்றும் உள்ளம் உற்ற உலகாளர் !

வானில் பறக்கும் பறவை அறிவை வகையாய் வாய்த்த வனப்பாளர் !
தேனின் இனியர் செம்மொழித் தமிழர் சீரார்  அறிவுப் பேராளர் !

-து.ஆதிநாராயணமூர்த்தி,பரதராமி (திமிரி)

**
தனக்கெனக் கூடுகட்டும் தன்னிகரில்லா தனித்துவம்
தினமும் இரையைத் தேடி உழைக்கும் உழைப்பு
தனதருமைக் குழவியர்க்கு வாயில் ஊட்டும் உணவு
எனக் குடும்பச்சூழலில் வாழும் உயிர்கள் பறவைகள்

பறப்பது வானில் வாழும் வாழ்க்கை மரப்பொந்தில்
இறப்பின்றி நாளும் விழிப்பாய் இருக்க வேண்டும்
உறவுக்கு வினை விதைக்கும் எதிரிகளோ ஏராளம்
நிறபேதம் நில்லாது துரத்தும் நேரங்களுமுண்டே.

வானில் பறக்கும் சுதந்திரம் வாழ்வில் கிடைக்காது
தீனியாய் உணவு கிடைப்பதற்கு உழைக்கணும்
மேனியை மழையிலிருந்து காப்பதே பெரும்பாடு
தேனியாய்ச் சுற்றும்போது வல்லூறு நுகர்வதுண்டு

தப்பிப் பறந்து பிழைப்பதே தனி அனுபவம் தான்
வெப்பக் காற்றையும் சகித்தே வானில் பறக்கணும்
சிப்பம் சிப்பமாய்க் குச்சிகள் கொண்டு சேர்க்கணும்
முப்புறமும் முனைந்து நின்று விழிப்பாய் இருக்கணும்

தூது சென்று தூதுவனாய் அரசர்க்கு உதவியதுண்டு
ஊதுகுழலாய் இன்னிசைப் பாட்டிசைப்பதுமுண்டு
சாதுக்களாய் தானுண்டு தன் பணியுண்டு என்றே
பாதுகாப்பாய்ப் புறவாழ்வை வாழ்வதுமுண்டே.

- கவிஞர் ராம்க்ருஷ்

**

கருமையான  காகம் சொல்லித் 
தருவது  ஒற்றுமை......
கோயிலில்  குடியிருக்கும் புறா
கோலாகலமாக  இருக்க 
கற்றுத்ததரும்  ஆசான்!
பறவைகள் பலவிதம் இருந்தாலும் 
அறவழி நடக்கக் கற்று தரும் 
இறைவனின்  அற்புத படைப்பு!
மறைந்து  வரும்  குருவி இனம் 
இரைந்து  கேட்பது  எங்களை 
வாழ விடுங்கள்!
தோழர்களாக  மாறும்  "பஞ்சவர்ணக்கிளி"
மழலையில்  பேச முடிந்த 
நாம்  விரும்பும் அழகுப் பறவை!
கூட்டில் இருக்கும்  குஞ்சுப் பறவைக்கு 
அலகில்  உணவு  கொடுக்கும்  தாய்ப்பறவை 
உலகில் பறந்து திரிந்து  வாழவும் 
கற்றுத்தரும்   அன்புப்  பறவை!
பறவைகளை சிறைப்பிடிப்பதை  தவிர்ப்போம்!
 முறையாக வாழ அதன்  வழியில் 
செல்ல அனுமதிப்போம்!
இதுவே..................
பறவைகளுக்கு நாம்  செய்யும் உதவி! 

- பிரகதா நவநீதன்.  மதுரை

**

மரக்கிளையில் அமரும்  பறவை 
மரக்கிளைகளைவிட நம்புவது 
தரமான  அதன் இறக்கைகளைத்தான்!
விண்ணில் பறந்தாலும் 
எண்ணிலடங்கா  மகிழிச்சியில் 
திண்ணிய மனதுடன்  பறக்கும் 
சுதந்திரப்  பறவைகளை 
தந்திரமாக  பிடித்து 
கூண்டில்  அடைக்கும் மனிதனே
உன்னை  அடைத்தால் 
கூண்டில்  இருப்பாயா!
சுதந்திரக் காற்று  மனிதனுக்கு 
மட்டுமல்ல.........
படபடவென  பறந்து திரியும்  
இறக்கைகளை உடைய 
பறவைக்கும்தானே............
மலர்ந்து  தீரும்  பறவைகளை 
மலர்ந்த முகத்துடன்  
நோக்கி   மகிழ்ச்சியுடன்  
வாழக் கற்றுக்கொள்!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

இறக்கைகள் கொண்ட இருகாலிகளே !
இரண்டேகால் அங்குலம் நீளம் முதல்
ஒன்பதடி உயர் வகையின பறவைகளே !
வண்ணம் பல கொண்டு திண்ணமாய்
பிறருதவி நாடாது காற்றை எதிர்த்து
சிறகை விரித்து பறக்கும் பறவைகளே!
கூரிய கண் பார்வை கொண்டு,
உட்செவியும் செவிப்புலன் சிறப்புடன்
அமைய பெற்ற உயிரினமே !
மூளை செயல்பாடுகளும் திறம்பட
விமானத்தின் இயக்கம் போல் !
மன்னர் காலத்தில் செய்திகள் பகிரும்
தூதர்களான பறவைகளே !
காலவேளைகளை துல்லியமாய் குறிக்கும்
ஞானம் பெற்ற உயிரினங்களே !
மனித வேட்டைக்கு இரையாகவும்
உலா வரும் பறவைகளே !

- தனலட்சுமி பரமசிவம்

**

மனிதன் அன்று விமானம் கண்டுபிடிக்க 
மனதில் காரணமான காரணி பறவை !

ஆறு அறிவு மனிதனால் முடியாது 
அஃறிணை  பறவையால் பறக்க முடியும் !

சிறகுகள் உள்ள எல்லாப் பறவைகளும் 
சிறகடித்துப் பறப்பதில்லை வானில் !

சிறகுகளின்  பயனை உணராது  உள்ளன 
சிந்தையைப் பறந்திட பயன்படுத்தவில்லை !

இப்படித்தான் இன்றும் சில மனிதர்களும் 
இனிய வாய்ப்பையைப் பயன்படுத்தவில்லை !

சின்னக் குருவியும் பறவை இனம்தான் 
பெரிய பருந்தும் பறவை இனம்தான் !

குருவியின் இயல்பு மிக மிதமானது 
பருந்தின் இயல்பு மிக முரடானது !

மனிதர்களில் குருவிகளும் உண்டு 
மனிதர்களில் பருந்துகளும் உண்டு !

- கவிஞர் இரா .இரவி

**

பறவை இனங்கள் பலவிதம்,  பார்க்க பார்க்க பரவசம்
  பகுத்துப் பார்த்தால் ,அடையாளம் காண்பதில் தனிச்சுகம்
பறவை எண்ணிக்கை பாரில் எண்ணாயிரத்தி அறுநூற்று ஐம்பது !
  பாரதத்தில் அது ஆயிரத்தி இருநூறு அதைத்தாண்டும்
பறவைகளின் வம்சம் இருபது ! பறவைகள் குடும்பம் எழுபத்தி ஐந்து
  பறவைகள் என்றால் சிறகுகள் இருக்கும் அதுதான் அவற்றின் சிறப்பு !
பறவையை கண்டான் மனிதன் , பல்லாயிரமாண்டு போராடிப்பின்னே
  பரவசத்தோடு பறக்கும் விமானம் பாரினில் பறக்க விட்டான் !

ஒற்றுமைப் பற்றி உரைப்பதற்கு உதாரணம் காகம் அனைத்துண்ணி நாய்போல்
  காக்கையைப்பாரு கூடிப் பிழைக்கும் ! குருவியைப்பாரு சோம்பலை பழிக்கும்
வேற்றுமையாக மனிதன் வாழ்கிறான் ஒற்றுமையாவோம் கவிஞன் அழைக்கிறான் 
நையான்டி கலைஞர்செய்கிறார் காகாபாட்டில் “பட்சிச்சாதிநீங்கபழக்கத்தமாத்தாதீங்க”
  அரிஸ்டாடில் உயிரினங்களை வகைப்படுத்தினார், எல்லா நாட்டிலும் எல்லாப் பறவை
காக்கை இனம் நியுஸ்லாந்தில் இல்லை ! கூட்டில் வைத்து குஞ்சு பொரிப்பவை
  காகம், கிளி, பருந்து போன்ற பறவை இனங்கள் மற்றவை எல்லாம் வேறுபடும்

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT