கவிதைமணி

பறவை என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 2

கவிதைமணி

பறவை

சிறகு விரித்துப் பறக்கிறது
மனம்
வானத்தின் உயரம் போதவில்லை.
எவ்வளவு உயர உயரப் பறந்தாலும்
மண்ணுக்கு வரவேண்டி இருக்கிறது
உயிர் வளர்க்க
வானமே வீடாக வாழ்ந்த பறவையைப்
பொற்கூண்டில் அடைத்துப்
பழம்நறுக்கித் தந்தாலும்
அது
விரும்புவது என்னவோ
விடுதலையைத்தான்
விடுதலை என்பது வேறொன்றுமில்லை
சிறகு வரித்தலே
சிந்தனையின் எல்லையையும் தாண்டி.
கடல்தாண்டிப் பறக்கும்
புறாவைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன் நானும்.

- கோ. மன்றவாணன்

**
பறவைகளை பிடித்து அத்தோடு
பழக பாடுபடுவோர் ||
யாவருமே யதன் கூடிவாழும் பழக்க வழக்கங்களை ||
கடைபிடிக்க பாடுபடுவதில்லையே
கூடிவாழ்ந்தால் ||
கோடி நன்மையாம் நாடி வந்தோரை ஓடி யனைத்திடு ||
தேடிச் சென்றேனும் வாடி நிற் போரைஅடி பிசகாது ||
ஒடியேற வைத்திடு உயரவுயர பறந்தாலும் ஊர்க் ||
குருவி பருந்தாகி விடாதுதான் ஆனாலும் ||
அடிமட்டத்தில் வாழுவோர் உயர
வுயர நாட்டை ||
அரசாளலாமே கடவுளொரு ஓரவஞ்சனைக் ||
காரனோ பறவைகளை வானத்தில் விஸ்தாரமாக ||
பறக்க விட்டான் மானிடத்தை வாடகை வீட்டில் ||
வாழவைத்து சிரிக்கின்றான் இங்கு
நானோ அழுகிறேன் ||

- வே. சகாய மேரி, திருக்க அரியலூர்

**

கிளிகளாக சிறகடிக்க பள்ளிப் பறவைகளாக
பரதம் ஆடிப் பார்க்க ஆசை!
எட்டி நின்று பார்க்கையில் அயன் அல்லி
சிறைச் சாலையின் கதவுகளில்
அரைகுறை மனப்பாடப் பூட்டு!
கற்பிக்க அரைகுறை ஆசிரியர் திறவுகோலை
அழுத்தமாக திறக்க ஊன்றுகையில்
சிறைச்சாலைக் காவலன் சித்திரகுப்தன் வடிவில்
நஷ்டக்கணக்கு ஏட்டை மும்முறை புரட்டியதில்
பள்ளிக்கூடப் பறவைகள் அறிவுச் சிறகொடிந்து கிடந்தன!
சிறைச்சாலைக் காவலன் மலிந்தவிலை மாடு பிடித்ததில்
கலைமகளும் வீணையின் நாதத்தில் சுருதி
இறங்கித்தான் பிரம்மனிடம் பள்ளிப் பறவைகளின்
எதிர்காலம் கணிக்க ஆரூடம் கேட்கப் போவாளோ!

- பொன்.இராம்

**
பறவையாத்தான் பொறக்கலையே!பறந்திடவும் முடியலையே!
உயரத்திலிருந்து  உலகை உற்றுப்பார்க்க முடியலையே!
மரத்தினிலே கூடுகட்டி மகிழ்வான வாழ்க்கையினை
அனுபவிக்க முடியலையே ஆகாயம் எட்டலையே!

ரெக்கை ரெண்டுடனே நெனச்சவண்ண பறவையாத்தான்
இயற்கை  படைச்சிருந்தா  இனியவளே  உனைத்தேடி
பறந்தே  வந்திருப்பேன்!  பக்கத்தில  அமர்ந்திருப்பேன்!
காதுக்குள்ள  ரகசியமா  கழன்று  மகிழ்ந்திருப்பேன்!

உன்வீட்டு மரக்கிளையில் ஓரமா உட்கார்ந்து
சன்னல் வழியாகச் சங்கடங்கள் பகிர்ந்திருப்பேன்!
ஜிவ்வென்று மேலெழும்பி சிவந்த வானத்தில்
உந்தன் பேரெழுதி உலகைக் கவர்ந்திருப்பேன்!

எதுவுமே  முடியாத  இருகாலும்  விளங்காத
மாற்றுத் திறனாளி மனுஷனாப் பொறந்திட்டேன்!
சிறகொடிந்த பறவையாய் சீரிழந்து கிடக்கின்றேன்!
ஆனாலும் வாழ்கின்றேன்!அகத்தினிலே கொதிக்கின்றேன்!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

மரக் கிளைகளில் வசிததிருக்கும்
இரவினிலே உறக்கம் கொள்ளும்.
உறவுகளுடன் கூடி
களித்திருக்கும்
வரவு செலவின்றி
வாழ்ந்திருக்கும் !

அதிகாலையில் விழித்திருக்கும்!
ஆரவாரத்துடன் .அறிவிக்கும்!
ஆடை அணிகலன்
தேவையில்லை !
அடுக்களைக்குள்
வேலையில்லை.!

சூது வாது அறியவில்லை
மாது மழலை பிரிவில்லை.
சாதி வெறி அதற்கில்லை
மீதி வைத்து சேமிப்பதில்லை

சிறகிரண்டும் விரித்து வைத்து
பறவையைப்  போல் பறந்து
சிக்கலின்றி வாழ்ந்து இறக்க
இக்கணமே வேண்டுகிறேன்
இறைவனையே !
  
- ஜெயா வெங்கட்

**
சிறகுகளை விரிக்கின்ற பறவை போன்று
சிறுத்திருக்கும் மனம்தன்னை விரித்த லன்றிப்
பறக்கின்ற பறவையைப்போல் ஆசை தன்னில்
பறக்காமல் மனந்தன்னை அடக்க வேண்டும் !
உறவுகளை அழைத்திரையை உண்ணல் போல
ஊர்கூட்டிப் பகுத்துண்ண கற்ற லோடு
புறம்பேசா அதன்பண்பைக் கடைபி டித்துப்
புரக்கின்ற பரந்தமனம் பெறுதல் வேண்டும் !
குயில்முட்டை அடைகாக்கும் காகம் போன்று
குலம்பிரித்துப் பார்க்காமல் அணைத்த லோடு
மயில்தோகை அழகைப்போல் மனமெல் லாமே
மாசின்றித் தூய்மையாகத் திகழ வேண்டும் !
எயிலாகச் சிறகுக்குள் குஞ்சை வைத்து
எதிரியிடம் காக்கின்ற கோழி போல
உயிர்புடனே சுற்றத்தைப் பேணிக் காக்கும்
உயர்வான குணந்தன்னைப் பெறுதல் வேண்டும் !
பால்தன்னில் நீர்கலந்த போதும் நீரைப்
பருகாமல் பாலுறிஞ்சும் அன்னம் போல
நால்வகையாய்க் கருத்துகளை நவின்ற போதும்
நற்கருத்தைத் தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும் !
தோள்கொண்டு பிறருழைத்த உழைப்பைக் கள்ளத்
தொழில்புரிவோர் போல்பலனைச் சுரண்டி டாமல்
நாள்தோறும் இரைதேடி உண்ணல் போன்று
நம்முழைப்பால் நாம்வாழ்ந்தால் உயர்வோம் நன்றாய் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

ஆகாயம் அளப்பதுபோல் பறக்கும் அந்த 
      ஆசையிலே பூவுலகைச் சுற்றும் மிக்க
மாகாயம் அதற்கில்லை எனினும் நல்ல
      வாழ்வதனைக் கொண்டவுயிர் கூடி வாழும்
ஆகாறு சிறுமுட்டை வெளியில் வந்த
      அழகுடனே அலகதனால் வாய்தி றந்து
ஆகாட்டி இரையுண்ணும் எழிலால் கொள்ளை
       அன்பதனைத் தாயுள்ளம் காண லாமே

மெல்லியதோர் உருவம்தான், கூடு கட்டும்
       மேன்மையிலே வல்லியதோர் உயிர்தான் வாழ்வோ
சொல்லியதோர் அளவினிலொ சிறிது காலச்
        சுகங்காட்டும் செய்கையிலோ பெரிது நாளும்
நல்லிதயங் கொண்டுபிற உயிர்க்கும் நன்மை
        நாடுவதால் பெருமையினைக் கொள்ளும் உள்ளம்
பல்லுயிரில் பரவசத்தைக் கொள்வ தாலே
        பறவையெனப் பெயர்கொண்ட உயிரே யன்றோ!

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை

**

அற்றைநாள் மலர்வதைப் பாடி
வரவேற்கும் புள்ளினங்காள்
அடுத்து அடுத்து கடமைகள்
பட்டியலிடாமல் செய்வதெப்படி?
காலை எழுந்ததும் கச்சேரி –பின்
சோலைகளெங்கும் உணவு தேடல்
தேடிய உணவு தூக்கி வாயில்
கூட்டிலிரு குஞ்சுகளுக்கு ஊட்டல்
ஊட்டி முடித்து ஆசைக்கொஞ்சல்
பேடை, பேடு காதல் ஆரத்தழுவல்
விண்ணில் பறந்து உல்லாச உலவல்
மண்ணில் மழையில் காக்காய் குளியல்
காலமெல்லாம் கவலையின்றிப் பறந்து
களிப்புடன் திரிவதால் நீ பறவையா?

- மீனாள் தேவராஜன்

**

பறவைகளே பதில் சொல்லுங்கள் 
நீங்கள் எல்லோரும் ||

தங்களின் சுய சுதந்திரத்தில் மகிழ் கிறவர்கள் ஆனால் ||

நாங்கள் அப்படியில்லையே அதுதான் 
ஏனென்று தெரியவில்லை ||

செய்துள்ளானே அப்படி என்ன உறவு 
உங்களுக்கும் அவனுக்கும் ||

சிறைப் பறவை ஒன்று மனம் உடைந்து 
சுதந்திர பறவையிடம் ||

உங்கள் சுதந்திர ரகசியத்தை எம்ம
வர்க்கு சொல்லிக் ||

கொடுக்க மாட்டீரோ மனதிறங்கியே 
மானிடர் எம்மவர்க்கு ||

அலகொடிந்தாலும் காலொடிந்தாலும்
சிறகொடியாது ||

இதுவரை நாங்கள் மொழி பேசி ஒரு 
சிறு சுகத்தை காணோம் ||

இனிமேல் நீங்கள் மொழி பேசும் காலம் 
வர பரிந்துரை செய்வோம் ||

உங்கள் சுய சுதந்திரம் எங்களைச் சேர 
மகிழ்ச்சியாக வாழ்வோம் ||

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான் 

**

காலும் கழுத்தும் கரியென நிரப்பி
சாம்பலில் உடலாய் இருளென இறகாய்
வெண்ணிற மூக்கென செந்நிறப் பொட்டுடன்
கருங் கழுத்தன்ன நாராய் கேளாய்!

கார்முகில் சுரப்ப களிப்புடன் அகவி
சீர்நடம் புரியும் அழகிய மயிலுடன்
சிட்டுக் குருவியும் மலைக்கோ ழியுமே 
சாரசுக் கொக்குடன் காடையும் பயில

கான மயிலுடன் பெரும்பூ நாரை
பச்சைப் புறாவும் அரசவால் குருவியும்
குயிலும் உலாவி மீன்கொத்தி யதனுடன்
வாத்துப் பாறும் மலை இருவாட்சியும்

மலை மைனாவுடன் மரகதப் புறாவும்
கலை யழகுடனே மலைமோனலு மங்கே 
ஏழேழ் பறவையும் சிறுநிலப் பறவையும்
ஏகமும் மகிழ்ந்தே குலாவிடும் நாடே!

வேடர்கள் தந்த வேதனை போதும்
வேட்டுடன் வெடியதன் இரைச்சலும் போதும்
புள்ளினம் என்ற போர்வைகள் போர்த்தி
பிரித்திடும் நரிகளின் சதிகளும் போதும்

பாங்காய் அறிவுடன் பாதைகள் வகுத்து
பறவைகள் இவையுடன் சேர்ந்தே என்றும்
சிறகுகள் விரித்துச் சிந்தனை செலுத்தி
இணைந்தே வாழ்வை நடத்திடு நன்றாய்!

(பிறிது மொழிதல் அணி)

குறிப்பு:- எடுத்துக்காட்டு: பீலிபெய் சாகாடும் (திருக்குறள் #475); உச்சி வகுந்தெடுத்து பாடலின் உட்கருத்தை உவமைகள் கொண்டு விளக்குவது.
பறவைகள்  /புள்ளினம் - மாநில மக்கள் (ஒவ்வொரு மாநில பறவையும் கூறப்பட்டுள்ளன)
ஏழேழ் பறவை - வடகிழக்கு மாநிலங்கள் ;சிறுநிலப் பறவைகள் - ஒன்றிய பகுதிகள் (Union Territory)
வேடர்கள் - தீவிரவாதிகள்;நரிகள் - பிரிவினைவாதிகள்;மயில் - இந்தியா
இவற்றோடு பொருத்தி படிக்கவும்.

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

இரை தேடி முடியும் வரை
பறைவைகள் ஓயாது!
எதுவரை பயணமோ
அதுவும் அறியாது.
முடிந்தவரை
விடியலில் தொடங்கிய
பயணம் விரைவில்
முடியலாம்.
இரையின்றி திரும்பலாம். 
பறவைகளின் எண்ணமெல்லாம்
இரை மட்டுமே!
பிரிவுகள் பல
வண்ணங்கள் பல
இருந்தாலும்
கூட்டமாக கூடுகட்டி வாழும் வாழ்க்கை
பறவைகளின் வாடிக்கை.
மனிதர்கள் நாமும்
பறவைகள் போல
பறக்க வேண்டாம்!
கூட்டாக வாழும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னதானம்...

மலைவாழ் மக்கள் சங்க பேரவைக் கூட்டம்

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

SCROLL FOR NEXT