சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ,
என்நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளன்ஆகவே.
நான் இதைச் சொன்னால் விரோதம்தான் வரும். ஆனாலும் சொல்கிறேன், கேளுங்கள். ‘தென்னா தென்னா’ என்று வண்டுகள் ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் என் யானை, என் அப்பன், எம்பெருமான், அப்பெருமான் இருக்கும்போது, நான் இன்னொருவரைப் பாடமாட்டேன், என் நாவிலிருந்து பிறக்கும் இனிய கவிகளை இன்னொருவருக்குக் கொடுக்கமாட்டேன்.
***
பாடல் - 2
உளன்ஆகவே எண்ணித் தன்னை, ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடி என்?
குளன்ஆர் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன்ஆய எந்தையை, எந்தை பெம்மானை ஒழியவே?
குளங்களும் கழனிகளும் சூழ்ந்த திருக்குறுங்குடியிலே சிறந்த குணங்களுடன் எழுந்தருளியிருக்கும் கண்ணன், நம் தந்தை, நம் குலத்தின் தலைவன், எம்பெருமான், அவனைத் தவிர இன்னொருவரை ஏன் பாட வேண்டும்? தன்னை ஒரு பெரிய மனிதனாகக் கருதிக்கொண்டு, தன்னுடைய செல்வத்தையே வளமாக மதிக்கும் இந்த மானிடர்களைப் பாடி என்ன பயன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.