நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

செ.குளோரியான்

பாடல் - 5

கழறேல் நம்பி, உன் கைதவம் மண்ணும் விண்ணும்
                                                  நன்கு அறியும், திண்சக்கர
நிழறு தொல்படையாய், உனக்கு ஒன்று உணர்த்துவன்
                                                  நான்,
மழறு தேன்மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம்
                                                 வாடிநிற்க, எம்
குழறு பூவையொடும் கிளியொடும் குழகேலே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, இனி எங்களிடம் ஏதும் பேசாதே, உன்னுடைய வஞ்சனையை இந்த மண்ணும் விண்ணும் நன்றாக அறியும், திடமான, ஒளிவீசும் சக்ராயுதத்தைப் பழமையான ஆயுதமாகக் கொண்டவனே, உனக்கு நான் ஒன்று சொல்கிறேன், நீ இங்கே நின்றுகொண்டு, குழறுகிற பேச்சைக்கொண்ட எங்களுடைய பூவையோடும் கிளியோடும் விளையாடிக்கொண்டிருந்தால், இளமையான, தேன்போன்ற சொற்களைப் பேசுகிற பெண்கள், உன்னுடைய அருளைப் பெறுகிறவர்கள் மனம் வாடி நிற்பார்கள். (ஆகவே, நீ அவர்களிடம் சென்றுவிடு.)

******

பாடல் - 6

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை
                                           செய்து கன்மம் ஒன்றில்லை,
பழகி யாம் இருப்போம் பரமே இத்திருவருள்கள்?
அழகியார், இவ் உலகு மூன்றுக்கும் தேவிமை
                                           தகுவார் பலர் உளர்,
கழகம் ஏறேல், நம்பி, உனக்கும் இளைதே கன்மமே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) ஆண்களில் சிறந்தவனே, எங்களுடைய மரப்பாவையை எடுத்துக்கொண்டு அதனிடம் பேசுகிறாய், ஏதேதோ குறும்புகளைச் செய்கிறாய், இதனால் உனக்கு என்ன பயன் கிடைத்துவிடும்? உன்னுடைய லீலைகளை நாங்கள் நன்கு அறிவோம். உன் நாடகத்தை நாங்கள் தாங்குவோமா? இந்த மூன்று உலகங்களிலும் சிறந்த அழகிகள், உன் தேவிகளாகக்கூடிய தகுதிகொண்டவர்கள் பலர் உள்ளார்கள், நீ அவர்களிடம் சென்று பழகு, எங்கள்மத்தியில் வராதே, உன்னுடைய பெருமைக்கு இது தகுதியான செயலா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT