தினம் ஒரு தேவாரம்

45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 4

என். வெங்கடேஸ்வரன்

முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மெய் சடைகள் தாழ
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கிப்
புளை கயப் போர்வை போர்த்துப் புனலொடு மதியம் சூடி
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள் தாமே

விளக்கம்

பொதுவாக அடியார்கள் என்று குறிப்பிட்டு இருபாலரும் வலம்புரத்து இறைவனை வழிபட்ட செய்தியை, முந்தைய பாடல்களில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் தலத்தில் உள்ள பெண் அடியார்கள் இறைவனை வழிபட்டதை குறிப்பிடுகின்றார். அந்நாளைய பெண்களின் சிவபக்தியும், திருகோயிலுக்கு திரளாகச் சென்று அவர்கள் வழிபட்டமையும் இங்கே உணர்த்தப்படுகின்றன. மெய் சடை = செறிந்த சடை, அடர்ந்த சடை. முளை = மூங்கில் முளை போன்ற. எயிறு = பல். ஏனம் = பன்றியாக உருவெடுத்த திருமால். வலித்து = இறுக்கமாக. இசைய = பொருந்த. வீக்கி = கட்டி. புளை = புழை என்ற சொல் எதுகை கருதி புளை என்று திரிந்தது, துவாரம், ஓட்டை என்று பொருள். இங்கே துளையினை உடைய துதிக்கையை குறிப்பிடுகின்றது. கயம் = யானை, கஜம் என்ற வடமொழி சொல்லின் தமிழாக்கம்.

பொழிப்புரை

திருமால் எடுத்த அவதாரமாகிய, இளமை மற்றும் அழகும் பொருந்தி இருந்த பன்றியின் மூங்கில் முளை போன்ற பல்லினை அணிகலனாக அணிந்தும், அடர்ந்த சடைகள் தாழ்ந்து தொங்கவும், வளைந்த பற்களை உடையதும் என்றும் இளமையுடனும் காணப்படும் பாம்பினைத் தனது இடுப்பினில் பொருந்துமாறு இறுக்கமாக கட்டியும், துளையை உடைய கையினை, துதிக்கையைக் கொண்ட யானையின் தோலை உரித்து போர்வையாக தனது உடலின் மீது போர்த்துக் கொண்டும், கங்கை ஆற்றினையும் சந்திரனையும் தனது சடையில் சூடியும் காட்சி தரும் வலம்புரத்து அடிகளை, தங்களது கைகளில் வளையல்கள் அணிந்து அழகாக விளங்கும் இளைய பெண்மணிகள் புகழ்ந்து பாடுகின்றார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT