தினம் ஒரு தேவாரம்

81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 6

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 6:

பொங்கோத மால் கடலில் புறம்புறம் போய்
                                                                       இரை தேரும்
செங்கால் வெண் மடநாராய் செயல் படுவது
                                                                      அறியேன் நான்
அங்கோல வளை கவர்ந்தான் அணி பொழில்
                                                                      சூழ் பழனத்தான்
தங்கோல நறும் கொன்றைத் தார் அருளாது
                                                                     ஒழிவானோ

 
விளக்கம்:

ஓதம்=ஓசை; மால் கடல்=பெரிய கடல்; தார்=மாலை. சிவபிரான் பேரில் கொண்ட ஆழ்ந்த காதல் காரணமாக, சிவபிரான் தன்னருகில் இல்லாதபோது, அவனுடன் தொடர்பு கொண்ட பொருள் ஏதேனும் இருந்தால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அப்பர் நாயகி, சிவபிரான் தனது சடையில் சூடியுள்ள கொன்றை மாலையைத் தனக்குத் தரவேண்டும் என்று ஏங்குகின்றாள். அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தி, நாரையிடம் சிவபிரான் தனக்கு கொன்றை மாலை தருவாரா என்று கேட்கின்றாள். தனது ஏக்கத்தைப் புரிந்து கொண்ட நாரை, தனது விருப்பத்தை சிவபிரானிடம் சொல்லி கொன்றை மலர் பெற்றுத் தர வேண்டும் என்று தனது ஆசையினை இங்கே பதிவு செய்கின்றாள்.   

பொழிப்புரை:

பெருத்த ஆரவாரத்துடன் பொங்கும் அலைகள் நிறைந்த பெரிய கடலின் அலைகளின் பின்னர் சென்று உனக்கு வேண்டிய உணவாகிய மீன்களைத் தேடும், சிவந்த கால்களை உடைய வெண்ணிறம் கொண்ட இளைய நாரையே, நான் என்ன செய்வது என்று அறியாது திகைக்கின்றேன்; எனது அழகிய வளையல்களைக் கவர்ந்த சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த பழனத் தலத்தில் உறையும் சிவபெருமான், தனது தலையில் சூடியுள்ள நறுமணம் வீசும் கொன்றை மாலையை எனக்குத் தாராமல் போய்விடுவானோ? நீ தான் தூது சென்று அந்த மாலை எனக்கு கிடைக்குமாறு உதவவேண்டும். .   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT