தினம் ஒரு தேவாரம்

76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 6

என். வெங்கடேஸ்வரன்

பாடல்  6:

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்
          உயிர் வைத்தார் உயிர் செல்லும்க திகள் வைத்தார்
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா
          மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார்
செற்ற மலி ஆர்வமோடு காம லோபம் சிறவாத
          நெறி வைத்தார் துறவி வைத்தார் 
நற்றவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார்
          நல்லூர் எம் பெருமானார்ந ல்லவாறே

விளக்கம்:
உற்று உலவுதல்=மிகுந்து பரவுதல்; உயிர் வைத்தார்=உயிரின் வினைகளுக்கு ஈடாக உடல் வைத்தல்; கதிகள்=சொர்க்கம் நரகம் என்ற அமைப்புகள்; எழுமை=ஏழு வகை பிறப்புக்கள், தாவரங்கள், ஊர்வன, நீந்துவன, நடப்பன, பறப்பன, மனிதர்கள், தேவர்கள் எனும் ஏழுவகைப் பிறவிகள். செற்றம்=கோபம்; ஆர்வம்=மோகம்; சிறவாத நெறி=தலை தூக்காத நெறி. ஆறு வகை பகைகளை அடக்கி வாழும் வாழ்க்கை நெறி. 

இந்த உலகில் உள்ள உயிர்வகைகள் (யோனி பேதம், பிறப்பு வேறுபாடுகள்) எண்பத்துநான்கு இலட்சம் என்று திருவீழிமிழலைப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார். எண்பத்து நான்கு இலட்சம் வகையான உயிர்களை படைத்து அந்த உயிர்களுடன் கலந்து இருப்பவன் சிவபிரான் என்று இங்கே கூறப்படுகின்றது. நீண்ட காந்தள் மலர் கொத்துக்களில் விழும் கொன்றை மலர்கள், மயில்களின் ஆட்டத்திற்கும், வண்டுகளின் பாட்டிற்கும், பொன் பரிசாக அளித்தது போல் உள்ளது என்று இயற்கையின் மீது தனது கற்பனையை சம்பந்தர் ஏத்திச் சொல்கின்றார். 

உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம்
                                               யோனி பேதம்
நிரை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய்
                                              அங்கங்கே நின்றான் கோயில்
வரை சேரு முகில் முழவ மயில்கள் பல நடமாட
                                             வண்டு பாட
விரை சேர் பொன் இதழி தார் மென் காந்தள் கையேற்கும்
                                             மிழலையாமே . 

ஒவ்வொரு வகையிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. இவ்வாறு உலகெங்கும் பரந்து மிகுந்து காணப்படும், எண்ணில் அடங்காத உயிர்களில், மிகவும் குறைந்த உயிர்களே, தங்களைப் பிணித்துள்ள மலங்களிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைகின்றன. மற்ற பெரும்பாலான உயிர்கள், பிறவிப் பிணியில் அகப்பட்டு மறுபடியும் ஏதோ ஒரு பிறவி எடுக்கின்றன. இவ்வாறு இந்த உலகம் கணக்கற்ற உயிர்களால், பிறவிப் பிணியால் பீடிக்கப்பட்ட உயிர்களால் நிறைந்துள்ளது. இந்த செய்தியைத் தான் உற்று உலவு பிணி உலகு என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த உயிர்கள் கொண்டுள்ள வினைத்தொகைக்கு ஈடாக, எழுவகை உடல்களை (தேவர், மனிதர், நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன மற்றும் தாவரங்கள்) இறைவன் படைத்துள்ள செய்தியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தங்களது வினைகளின் ஒரு பகுதியை, கழித்துக் கொள்வதற்காக, சொர்க்கம் நரகம் என்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய வினைகளின் ஒரு பகுதியே அடுத்த பிறப்பினை நிர்ணயிக்கின்றன. மீதமுள்ள வினை. சஞ்சித வினையாக சேருகின்றன.   

உட்பகைகளாகிய காமம், குரோதம், உலோபம் (அடுத்தவர்களுக்கு எதுவும் கொடுக்காத தன்மை), மோகம்(பொருளின் மீது வைக்கும் அளவு கடந்த ஆசை), மதம், மாற்சரியம் (பொறாமை) ஒரு மனிதனின் மனத்தினைக் கெடுத்து தீய வழியில் செல்லத் தூண்டுகின்றன. இந்த உட்பகைகளை வென்றால் தான், நாம் நமது மனத்தினைக் கட்டுப்படுத்த முடியும். செற்றம் (கோபம்), ஆர்வம் (மோகம்), காமம், உலோபம் ஆகிய நான்கு பகைகளை மட்டும் குறிப்பிட்டு மற்று இரண்டு பகைகளை (மதம் மற்றும் மாற்சரியம்) குறிப்பிடாமலே நமக்கு உணர்த்துகின்றார். இந்த ஆறு பகைகளும் தலை தூக்காத வாழ்க்கை நெறியினை, ஆறு பகைகளை கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கை நெறியினை, அடியார்கள் மேற்கொள்ள வைத்தார் சிவபிரான் என்று இங்கே கூறப்படுகின்றது. தென்குடித் திட்டை என்ற தலத்தின் மீது அருளிய பாடலில், ஞானசம்பந்தப் பெருமான், திட்டை நகரில் வாழும் அடியார்களை குறிப்பிடும் பாடலில் இந்த ஆறு பகைகளின் தன்மையை உணர்ந்து, அவற்றைக் களைந்து சிவபிரான் தான் உண்மையான் மெய்ப்பொருள் என்று உணர்ந்து வழிபடும் அடியார்கள் என்று கூறுகின்றார்.

    ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால்
    கூறினார் அமர் தரும் குமரவேள் தாதையூர்
    ஆறினார் பொய்யகத்தை உணர்வு எய்தி மெய்
    தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே
 

பொழிப்புரை:
நல்லூரில் உறையும் பெருமானாகிய சிவபிரான், பிறவிப்பிணியால் பீடிக்கப்பட்டுள்ள உயிர்கள் மிகவும் அதிகமாக உலவும் உலகினில், ஏழு வகையான உடல்களை (தேவர், மனிதர், நடக்கும் விலங்குகள், பறவைகள், ஊரும் உயிர்கள், நீரில் வாழ்வன, தாவரங்கள்) தத்தம் வினைகளுக்கு ஏற்றவாறு உயிர்களுடன் பொருந்தும் நிலையை வைத்துள்ளார்; அந்த உயிர்கள் தங்களது வினையின் ஒரு பகுதியை கழிப்பதற்காக சொர்க்கம் நரகம் என்ற அமைப்புகளை வைத்துள்ளார்; தான் இட்ட பணிகளைச் செய்வதற்காக தேவர் கணங்களை வைத்துள்ளார்; அந்த தேவர்கள், தன்னைக் காணாத நிலையினையும் வைத்துள்ளார்; காமம், குரோதம், லோபம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய தீயகுணங்கள் தலை தூக்காத சிறந்த வாழ்க்கையினையும், துறவு நிலையையும், தனது அடியார்கள் மேற்கொள்ள வைத்துள்ளார்; சிறந்த தவத்தினைச் செய்யும் அடியார்கள், சரணடையும் திருவடியினை எனது தலை மீது வைத்த நல்லூர் பெருமான் மிகவும் நல்லவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT