தினம் ஒரு தேவாரம்

76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 9

என். வெங்கடேஸ்வரன்


பாடல்  9


சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்
          திசை பத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை
         தவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி ஓடக் குரை
        கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார்
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார்
        நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:
கதிர் இரண்டும்=சூரிய சந்திரர்கள்; விசும்பு=ஆகாயம்; நின்று அருளி=உள்ளத்தில் இருந்து அருள் புரிந்து; நன்று=நல்ல தன்மை கொண்ட வீடுபேறு  மறை என்றால் வேதம் என்று பொருள். வடமொழி வேதங்களை எழுதாக் கிளவி என்று குறிப்பிடுவார்கள். எழுதிவைக்கப் படாமல் தலைமுறை தலைமுறையாக ஒருவருக்கு ஒருவர் வாய்மொழியாக சொல்லி நிலவி வந்தவை வேதங்கள். இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, வேதங்கள் வழி வழியாக மறைந்து நின்று வந்ததால், மறை என்று மிகவும் பொருத்தமாக தமிழ்மொழியில் அழைக்கப்படுகின்றது என்று தெய்வத்தின் குரல் (முதல் பாகம்) புத்தகத்தில் காஞ்சி பெரியவர் குறிப்பிடுகின்றார். வேதங்களில் மறைந்து காணப்படும் பொருட்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒரு குரு மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். இந்த செய்தியைத் தான் மறை பொருள் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.   

பொழிப்புரை:
வானில் உருண்டு உருண்டு செல்லும் சூரியனையும் சந்திரனையும் வைத்தவர் சிவபெருமான்; எட்டுத் திசைகள் மற்றும் கீழ்த்திசை மேல் திசை என்று பத்து திசைகளை உலகினில் வைத்தவர்; தேவர்களின் உள்ளத்தில் நின்று, அவர்கள் தன்னை வணங்குமாறு அருள் செய்தவர்; நிறைந்த தவமும், பொருள்கள் மறைந்து இருக்கும் நான்மறைகளையும் உலகினில் நிலைத்து நிற்க வைத்தவர்; உயிரினைப் பறிக்க வந்த கூற்றுவனை நடுங்கி ஓடுமாறு தனது கழலணிந்த திருவடியால் உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்தவர்; தனக்கு வாகனமாக இடபத்தை வைத்துக் கொண்டுள்ளவர்; எல்லையில்லாததும், அழிவற்றதும் ஆகிய, நன்மை பயக்கும் வீடுபேறு என்னும் பேற்றினை அடியார்களுக்கு அருளும் திருவடியினை எனது தலையின் மீது வைத்த நல்லூர் பெருமான் மிகவும் நல்லவர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT