தினம் ஒரு தேவாரம்

117. காடது அணிகலம் - பாடல் 3

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 3;

    கூவிளம் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
    தூவிளங்கும் பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்தி நாகம்
    ஏவிளங்கும் நுதலாளையும் பாகம் உரித்தனரின்
    பூ விளங்கும் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே 

விளக்கம்:

கூவிளம் சடைமுடி கூட்டத்தது, பேரி கையது, தூவிளங்கும் பொடி பூசிற்று, பூண்டது துத்தி, ஏ விளங்கும் நுதலாளையும் பாகம், நாகம் உரித்தனரின் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கூவிளம்=வில்வம்; பேரி=உடுக்கை; தூ=தூய்மை, துத்தி=பாம்பின் படம், ஏ=அம்பு, அம்பு போன்று கூர்மையான பார்வையை உடைய; நுதல்=நெற்றி; நாகம்= யானை; இந்த பாடலில் சடைமுடி கூட்டத்தது என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமானுக்கு ஒன்பது சடைகள் என்று கூறுவார்கள். இதனை உணர்த்தும் முகமாகவே சடைமுடிக் கூட்டம் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொடி=திருநீறு; 

பொழிப்புரை: 

வில்வ இலைகளை தனது சடைமுடிகளில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது கையில் உடுக்கையை ஏந்தியவாறும், தூய்மையாக விளங்கும் திருநீற்றினை உடல் முழுதும் பூசிக் கொண்டவாறும், படத்தினை உடைய பாம்பினைத் தனது உடலில் ஏற்றவாறும், காட்சி அளிக்கும் பெருமான், அம்பு போன்று கூரிய பார்வையை உடையவளும் அழகிய நெற்றியை உடையவளும் ஆகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுள்ளார். அவர் தன்னை நோக்கி ஓடி வந்த மதயானையை அடக்கி அதன் தோலை உரித்து, தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் ஆவார். அவர் புண்ணியமே வடிவமாக அமைந்தவர். இத்தகைய பெருமான் அழகுடன் விளங்கும் இனிய சோலைகள் நிறைந்த புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் பொருந்தி நிலையாக அமர்ந்துள்ள புண்ணியர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT