தினம் ஒரு தேவாரம்

147. நித்தலும் நியமம் செய்து - பாடல் 6

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 6:

    துங்க வானவர் சூழ் கடல் தாம் கடை போதில்
    அங்கொர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில்
    வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்து மணியும்
    சங்கும் வாரித் தடங்கடல் உந்து சாய்க்காடே

விளக்கம்:

துங்க=உயர்வினை உடைய: கடை போதில்=கடைந்த போது; நீழல்=நிழல்; வெப்பத்தில் வருந்துவோருக்கு வெப்பத்தை தணித்து இன்பம் அளிப்பது நிழல். அதைப் போன்று கடலிலிருந்து பொங்கி எழுந்த விடம் வெளிப்படுத்திய வெப்பத்தை தாங்க முடியாமல் நான்கு திசைகளிலும் ஓடிய தேவர்களுக்கு, விடத்தை உட்கொள்வதன் மூலம், அவர்களுக்கு  விடத்தின் வெப்பத்திலிருந்து விடுதலை அளித்தவர் சிவபெருமான் என்பதால் நிழல் அளித்தவர் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றார். வங்கம்=மரக்கலங்கள்; இப்பி=முத்துச் சிப்பிகள்; தடம்=அகன்ற கடற்கரை; உயர்ந்த வானவர்கள் என்று ஆற்றலில் உயர்ந்தவர் என்று குறிப்பிட்டு அவர்களாலும் தாங்க முடியாத ஆலகால் விடம் என்று விடத்தின் கொடிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.   

நிழல் தந்து அருள் புரியும் பெருமான் என்று சம்பந்தர் குறிப்பிடுவது, நமக்கு அப்பர்  பிரான் திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடலை (4.92.19) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சுழலார் துயர் வெயில்=கடுமையான வெய்யில் போன்று சுட்டிடும் பிறவிச் சுழலாகிய நோய்: கழலா வினைகள்=எளிதில் கழிக்க முடியாத வினைகள்: காலவனம்= இருள், பிறவிப் பிணிக்கு வெய்யிலை உவமையாக கூறியதால், பிறவிப் பிணியினை நீக்கும் இறைவனின் திருவடிகளை நிழல் என்று கூறும் நேர்த்தியை நாம் உணரலாம். துன்னுதல்=நெருங்கி இருத்தல், பொருந்துதல், காலவனம் என்பதற்கு காலம் என்றும் காடு என்று பொருள் கொண்டு, காலத்தையும் கடந்த இறைவனின் திருவடிகள், காலம் எனும் காட்டினை எரித்து பொசுக்கி விடும் ஒளியாக விளங்கும் என்றும் பொருள் கூறலாம்.   

    சுழலார் துயர் வெயில் சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும்
    நிழல் ஆவன என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்
    கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த
    அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே

துயர் வெய்யில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும் நிழலாக அருள் புரிவது சிவபிரானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் பாடியது, இன்றும் பொய்க்காமல் இருக்கின்றது என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்றினை, சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் தனது திருத்தொண்டர் புராண விளக்கத்தில் கூறுகின்றார். ஒரு முறை கடுங்கோடையாகிய வைகாசி மாதத்தில், நல்லூர் பெருமணத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம், சீர்காழிக்கு அருகில் உள்ளது) நடைபெற்ற ஞானசம்பந்தர் விழாவிற்குச் சென்ற அவர், வீதி உலா வந்த சம்பந்தப் பெருமானைப் பின் தொடர்ந்து செல்ல முடியாமல் வெய்யிலின் தாக்கத்தால், தொண்டர்கள் தவித்ததைக் கண்டதாகவும். அடிக்கடி சாலை ஓரத்தில் இருந்த வீடுகளின் கூரை நிழலில் தங்கிய பின்னரே அவர்கள் தொடர்ந்து சென்றதாகவும் கூறுகின்றார். அப்போது அவர்களுடன் வலம் வந்த ஓதுவார், மேற்கண்ட பாடலை உருக்கமுடன் பாடினார். அவர் அந்த பாடலைப் பாடிய ஐந்து நிமிடங்களில் வானில் மேகம் சூழ்ந்து சூரியனை மறைத்தது என்றும் அதன் பின்னர் திருவீதி உலா முடியும் வரையிலும், மேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டு இருந்தமையால் அடியார்கள், இன்பத்துடன் வீதி வலத்தில் பங்கேற்றனர். என்றும், தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இதே போன்ற நிகழ்ச்சி, அவினாசியிலும் ஒரு முறை நிகழ்ந்ததாக அன்பர்கள் சிவக்கவிமணிக்கு தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கை வைத்து தேவாரப் பாடல்கள் ஓதினால் உடனே அடியார்கள் பயன் அடையலாம் என்பது இப்போதும் கைகண்ட உண்மையாகத் திகழ்வதை நாம் உணரலாம்.
   
பொழிப்புரை:

ஆற்றல் மிகுந்த தேவர்கள் ஒன்று கூடி பாற்கடலினைக் கடைந்த போது, கடலிலிருந்து எழுந்த விடத்தின் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்த போது, விடத்தினைத் தான் உட்கொண்டு, அந்த வெப்பத்திலிருந்து  விடுதலை அளித்து, வெப்பத்தைத் தணிக்க உதவும்  நிழல் போன்று செயல்பட்டவன் சிவபெருமான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் உறையும் இடம் சாய்க்காடு தலமாகும். பெரிய மரக்கலங்களையும்  முத்துச் சிப்பிகள், ஒளி வீசும் மணிகள் முத்து மற்றும் சங்குகளை வாரித் திரட்டி அகன்ற கடற்கரையில் உந்தித்தள்ளும் அலைகளை உடைய கடலினைக் கொண்ட இடம் சாய்க்காடு ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT